போரை ஆரம்பிக்க போகும் டிரம்ப்? கிரீன்லாந்து விவகாரம்.. அடுத்து என்ன நடக்கும்! மொத்தம் 4 வழி இருக்கு
வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தை வாங்கப் போவதாக டிரம்ப் கடந்த சில காலமாகவே தடாலடி கருத்துகளைக் கூறி வருகிறார். இது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. இந்த கிரீன்லாந்து விவகாரத்தில் வரும் காலத்தில் என்ன நடக்கும்.. இதற்கான வாய்ப்புகள் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்
ஐரோப்பாவின் ஒரு பகுதியாக டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாக உள்ள தீவு கிரீன்லாந்து. இந்த கிரீன்லாந்து தீவை மொத்தமாக வாங்க உள்ளதாக டிரம்ப் தொடர்ச்சியாகத் தடாலடி கருத்துகளைக் கூறி வருகிறார்.

ஏற்கனவே ரஷ்யா, மத்திய கிழக்கு, சீனா- தைவன் எனச் சர்வதேச அளவில் பதற்றம் உள்ள நிலையில், டிரம்பின் இந்த கருத்து பகீர் கிளப்புவதாகவே உள்ளது. டிரம்ப் இது இந்த விவகாரத்தில் வரும் காலத்தில் 4 வெவ்வேறு விதமான விஷயங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.
ஆர்வம் குறையலாம்:
அதிபராகப் பதவியேற்ற கொஞ்ச நாட்களிலேயே டிரம்பிற்கு கிரீன்லாந்து மீதான ஆர்வம் குறைய வாய்ப்பு இருக்கிறது. சொல்லப்போனால் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் ஆதிக்கம் கிரீன்லாந்தில் அதிகரிக்கக் கூடாது என்பதற்காகவே டிரம்ப் இதுபோல பேசுவதாகச் சர்வதேச வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே, கிரீன்லாந்து பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டென்மார்க் அதிகரித்தால் டிரம்ப் இந்த விஷயத்தை விட்டுவிட வாய்ப்பு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தான் கிரீன்லாந்து பகுதியின் ராணுவ பாதுகாப்பை உறுதி செய்ய டென்மார்க் $1.5 பில்லின் டாலரை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரம் அடைவது:
இரண்டாவது ஆப்ஷன் கிரீன்லாந்து மொத்தமாகச் சுதந்திரம் அடைந்துவிடுவது. கிரீன்லாந்து இப்போது என்ன தான் டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருந்தாலும் கூட, கிரீன்லாந்து சுதந்திரம் அடைய வேண்டும் என்பதே அந்தத்தீவில் வசிக்கும் மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. டென்மார்க்கில் இருந்து முழுமையாகச் சுதந்திரம் பெறும் உரிமையைக் கடந்த 2009ம் ஆண்டே கிரீன்லாந்து பெற்றுவிட்டது.
இருப்பினும், அப்படி சுதந்திரம் பெற்றால் டென்மார்க்கில் இருந்து கிடைக்கும் பொருளாதார உதவிகள் கிரீன்லாந்திற்கு கிடைக்காது. தற்போது பொருளாதார ரீதியாக டென்மார்க்கையே கிரீன்லாந்து பெருமளவு நம்பி இருக்கிறது. இதன் காரணமாகவே கிரீன்லாந்து இதுவரை தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக்கொள்ளவில்லை. அதேநேரம், இப்போது டிரம்ப் உள்ளே வருவதால் அந்த நிலை மாறலாம். சுதந்திரத்திற்கு பிறகும் தொடர்ந்து பொருளாதார உதவிகள் கிடைக்கும் என்றால் கிரீன்லாந்து சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
பொருளாதார கட்டுப்பாடு:
அடுத்து டிரம்ப் பொருளாதார கட்டுப்பாடுகளை விதிக்கலாம். டென்மார்க் அல்லது ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது கூட ட்ரம்ப் பொருளாதார கட்டுப்பாடுகளை விதிக்கலாம். இதனால் வேறு வழியின்றி கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க் அமெரிக்காவுக்குச் சாதகமான முடிவை எடுக்க வேண்டி இருக்கும். ஆனால், பொருளாதார பாதிப்புகளைச் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை டென்மார்க் ஏற்கனவே எடுக்கத் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
போரை ஆரம்பிக்கும் டிரம்ப்:
கிரீன்லாந்து மீது டிரம்ப் மொத்தமாகப் போரை ஆரம்பிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கான சான்ஸ் மிகக் குறைவு என்றாலும் கூட டிரம்ப் எதிர்பார்க்காத விஷயத்தையே செய்வார் என்பதால் அதை நிராகரிக்க முடியாது. ஒருவேளை போரை ஆரம்பிக்க விரும்பினால் அமெரிக்காவுக்கு அது ஈஸியாகவே இருக்கும்.
ஏனென்றால் ஏற்கனவே கிரீன்லாந்து நாட்டில் உள்ள பிடுஃபிக் (Pituffik) என்ற இடத்தில் அமெரிக்காவுக்குப் பாதுகாப்பு பேஸ் இருக்கிறது. இதனால் போரை ஆரம்பித்தால் வீரர்கள், அல்லது ராணுவத்தை அங்குக் கொண்டு செல்வது கடினமாக இருக்காது. அதேநேரம் இதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications