H 1B விசா விவகாரம்.. அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்ணை வெளியிட்ட இந்திய தூதரகம்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச் 1 பி விசா ரூல்ஸை மாற்றி உள்ளார். அதற்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார். இந்த கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இந்திய தூதரகம் அவசர உதவி எண்ணை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் ஐடி உள்பட பல முன்னணி துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் உள்ளன. இங்கு வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விசாவில் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி பணி செய்ய முடியும். அதன்பிறகு 3 ஆண்டுகள் வரை விசா காலத்தை நீட்டித்து கொள்ள முடியும்.
இந்த எச் 1 பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக ( இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் ) உயர்த்தும் உத்தரவில் அதிபர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த புதிய கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு எச்1பி விசாக்களுக்கான கட்டணம் ரூ.1.32 லட்சமாக இருந்த நிலையில், அது இப்போது ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது வெளிநாட்டினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் எச் 1பி விசா திட்டத்தின் மூலமாக இந்தியர்கள் தான் அதிகமாக பயனடைந்து வருகின்றனர். எச் 1பி விசா திட்டத்தின் அமெரிக்காவுக்கு சென்ற வெளிநாட்டினரை எடுத்து கொண்டால் அதில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் தான். இதனால் தான் இந்த கட்டண உயர்வு நம் நாட்டை சேர்ந்த ஐடி உள்பட பிற துறைகளில் பணியாற்றுவோரை பாதிக்க உள்ளது.
தற்போது இந்த விசாவை வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்த கட்டண உயர்வு என்பது புதிய விசா கோரும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே என்று அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது. இருப்பினும் கூட எச் 1பி விசாவுக்கான கட்டண உயர்வு, எச் 1 பி விசா நடைமுறையில் பற்றி பல்வேறு சந்தேகங்கள்,முரண்பாடான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவும் வகையில் அவசர தொலைபேசி உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள் +1-202-550-9931 என்ற செல்போன் எண்ணை (மற்றும் WhatsApp) அழைக்கலாம். உடனடி அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள் மட்டுமே இந்த எண்ணை பயன்படுத்த வேண்டும். வழக்கமான தூதரக விசாரணைகளுக்கு அழைக்க வேண்டாம்'' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications