"நம்பிக்கை துரோகம்.." 8 வாக்குகளில் மொத்தமாக மாறிய கதை.. அமெரிக்க சபாநாயகர் திடீரென பதவிநீக்கம்!
வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாகக் குடியரசு கட்சியின் கெவின் மெக்கார்த்தி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் சுவாரசிய பின்னணி குறித்துப் பார்க்கலாம்.
அமெரிக்க நாடாளுமன்றம் நமது நாடாளுமன்றத்தில் இருந்து பெருமளவு மாறுபட்டது. இங்கே எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சியின் எம்பி தான் சபாநாயகராகத் தேர்வு செய்யப்படுவார். ஆனால், அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர் தேர்தலில் வெல்லும் கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும் எனச் சொல்ல முடியாது.

அதன்படி இப்போது அமெரிக்க அதிபராக பைடன் இருந்தாலும் கூட அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை இப்போது குடியரசு கட்சி கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அங்கே சபாநாயகராகவும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் கெவின் மெக்கார்த்தி இருக்கிறார்.
அமெரிக்க நாடாளுமன்றம்: இதில் விஷயம் என்னவென்றால் கெவின் மெக்கார்த்திக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததே அவரது சொந்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மாட் கேட்ஸ் என்பவர் தான். குடியரசு கட்சியில் இருக்கும் பெரும்பாலான எம்பிக்கள் குடியரசு கட்சிக்கு ஆதரவாகவே உள்ளனர். இருப்பினும், அவருக்கு முழுமையாக ஆதரவு இல்லை. சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிராகச் சிலர் இருந்தனர்.
தற்போது பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சியில் இருந்து 222 எம்பிக்களும், ஜனநாயகக் கட்சியில் இருந்து 208 எம்பிக்களும் உள்ளனர். இருப்பினும், மெக்கார்த்திக்கு எதிராக 8 குடியரசு கட்சி எம்பிக்கள் திரும்பினர். இதனால் மெக்கார்த்திக்கு எதிரான தீர்மானம் 216-210 என்று வித்தியாசத்தில் நிறைவேறியது. இதன் மூலம் ஒன்பது மாதம் சபாநாயகராக இருந்த மெக்கார்த்தியின் பதவி முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
என்ன காரணம்: அரசு செலவுகள் மற்றும் பட்ஜெட் விவகாரத்தில் மெக்கார்த்தி செயல்பாடுகள் சிறப்பாக இல்லை என்று கருதிய சில குடியரசு கட்சி எம்பிக்கள் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். கடந்த வாரம் தான் அமெரிக்க அரசு முடங்குவதைத் தவிர்க்க பைடன் அரசுடன் இணைந்து மெக்கார்த்தி அவசர தீர்மானம் நிறைவேறக் காரணமாக இருந்தார். மேலும், சிலர் பைடன் அரசுடன் மெக்கார்த்திக்கு தொடர்பு இருப்பதாகவும் சில குடியரசு கட்சி எம்பிக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது கெவின் மெக்கார்த்தியை சபாநாயகராகத் தேர்வு செய்வதிலேயே கடும் இழுபறி நிலவியது. அப்போது கெவின் மெக்கார்த்தி தனது சொந்த கட்சி எம்பிக்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்தார். அதில் முக்கியமாகத் தனது செயல்பாட்டில் திருப்தி இல்லையென்றால் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பதவி நீக்க தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்று வாக்குறுதியை அளித்திருந்தார். அதுவே கடைசியில் அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டது.
அமெரிக்க அரசு முடங்குவதைத் தவிர்க்க உதவிய மெக்கார்த்தி ஆளும் ஜனநாயக கட்சியும் தயாராக இல்லை. ஏனென்றால், மெக்கார்த்தி தற்போது அதிபர் ரேஸில் இருக்கும் டிரம்பின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படுகிறார். மேலும், அதிபர் பைடனுக்கு எதிராக இம்மீச்பெண்ட் விசாரணையையும் அவர் கொண்டு வந்தார். மேலும், கடந்த 9 மாதங்களில் அவர் ஜனநாயக கட்சிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதன் காரணமாகவே ஜனநாயக கட்சியினர் அவருக்கு ஆதரவாக இருக்கவில்லை.
அடுத்து என்ன: கெவின் மெக்கார்த்தி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து நாடாளுமன்றம் வரும் 10ஆம் தேதி கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது புதிய சபாநாயகரைத் தேர்வு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதேநேரம் குடியரசு கட்சியினர் மத்தியில் பயங்கர கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதனால் புதிய சபாநாயகரைத் தேர்வு செய்வதில் பெரும் சிக்கல் இருக்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications