இந்தியாவில் முஸ்லிம்கள் மீது வன்முறையா? அமெரிக்காவில் வந்துவிழுந்த கேள்வி.. நிர்மலா சீதாராமன் பதிலடி
வாஷிங்டன்: இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடக்கிறது என மேற்கத்தி நாடுகள் குற்றம்சாட்டுகின்றதே? என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அமெரிக்காவில் திடீரென கேள்வி எழுப்பப்பட்டது. இதை கேட்ட நிர்மலா சீதாராமன் சற்று யோசிக்காமல் மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி கொடுத்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்கா-இந்திய வர்த்தக கவுன்சில் இணைந்து பெரும் வணிகர்கள், முதலீட்டாளர்களுடன் உடனான வட்டமேசை மாநாட்டை நடத்தியது. பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் பார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸில் இந்த மாநாடு நடந்தது.

இதில் இந்தியா சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது அவரிடம் கேள்விகள் கேட்டகப்பட்டது. இந்த வேளையில், ‛‛இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடக்கிறது என மேற்கத்திய நாடுகள் கருத்துகள் கூறி வருகின்றனரே?'' என கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது மேற்கத்திய நாடுகளின் கருத்துக்கு சரியான வகையில் பதிலடி கொடுத்தார். இதுபற்றி நிர்மலா சீதாராமன் கூறியதாவது: உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடுகளின் வரிசையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முஸ்லிம்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி இருக்கும்போது நீங்கள் சொல்வது போல் வன்முறை நடந்தால் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிக்குமா?. அரசின் ஆதரவுடன் முஸ்லிம்களின் வாழ்க்கை கடினமான ஒன்றாக மாற்றப்பட்டால் 1947ல் இருந்ததை விட முஸ்லிம் மக்கள் தொகை இந்தியாவில் அதிகரிக்குமா?'' என கேள்வி எழுப்பினார்.

மேலும் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‛‛பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில முஸ்லிம் பிரிவுகள் கூட பாகிஸ்தானில் காணாமல் போய் உள்ளது. ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு முஸ்லிம்களும் தொழில் செய்யவும், அவர்களின் குழந்தைகள் கல்வி கற்கவும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம் மக்கள் சிறப்பாக வாழ்கின்றனர்.
இந்தியா வராமல் களநிலவரம் பற்றி அறியாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டு அறிக்கைகளை வெளியிடுபவர்களின் கருத்துகள் பற்றி கேட்பதை விட இந்தியாவுக்கு நேரில் வந்து என்ன நடக்கிறது? என்பதை பார்க்க வரலாம்'' என கூறினார். இதற்கிடையே அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications