டிரம்ப் போட்ட வரியால் பலன் பெறப்போகும் திருப்பூர்! ஆப்பிள், சாம்சங்கும் ஓடி வர சான்ஸ்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள புதிய இறக்குமதி வரி விதிப்பு முறை உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், உலக வர்த்தகம் மற்றும் உற்பத்தியில் இந்தியா ஒரு வலுவான இடத்தைப் பிடிக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
வரும் ஏப்ரல் 5 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய வரி விதிப்பு முறையில், ஏப்ரல் 8 வரை அனைத்து இறக்குமதிகளுக்கும் 10% வரி விதிக்கப்படும். பின்னர், ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியான வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட உள்ளன. அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம்.

இந்த புதிய வரி விதிப்பில் மருந்துகள் மற்றும் எரிசக்தி போன்ற முக்கியமான பொருட்கள் விலக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இரும்பு மற்றும் வாகனங்கள் போன்ற முக்கிய துறைகளுக்கு 25% வரி விதிக்கப்படலாம். குறிப்பாக சீனா, வியட்நாம், வங்கதேசம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில பொருட்களுக்கு 54% வரை வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த சூழ்நிலையில், இந்தியா ஒப்பீட்டளவில் சாதகமான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலக்கப்பட்ட துறைகளைத் தவிர, இந்தியாவின் ஏற்றுமதிகளுக்கு 27% பரஸ்பர வரி விதிக்கப்பட்டாலும், இது மற்ற ஆசிய நாடுகளை விட குறைவு. இதன் மூலம், அமெரிக்க சந்தையில் இந்தியாவின் பொருட்களை அதிகளவில் விற்பனை செய்ய முடியும். இந்திய பொருட்களின் விலை, தரம் மற்றும் உற்பத்தி திறன் சர்வதேச தரத்திற்கு ஏற்ப இருந்தால் இது சாத்தியமாகும்.
இந்திய வணிக அமைச்சகம் இந்த புதிய வரி விதிப்பின் தாக்கத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. அமெரிக்காவின் கவலைகளை நிவர்த்தி செய்யும் நாடுகளுக்கு வரி குறைப்பு போன்ற சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், இந்த புதிய வரி விதிப்பு இந்தியாவிற்கு ஒரு பின்னடைவாக இல்லாமல், ஒரு வாய்ப்பாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூருக்கு வாய்ப்பு
குறிப்பாக ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் இந்தியாவுக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. சீனா மற்றும் வங்கதேசத்திலிருந்து வரும் இறக்குமதிக்கு அமெரிக்கா அதிக வரி விதிப்பதால், இந்திய ஜவுளிப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கக்கூடும். இது அமெரிக்க சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உலகளாவிய பிராண்டுகளின் கவனத்தை ஈர்க்கும். நம்மவர்கள் வங்கதேசத்திற்கு போய் ஆடை உற்பத்தி நிறுவனங்களை அமைத்தனர். இனிமேல், இந்தியாவிலிருந்து அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் ஆடைகளை திருப்பூர் உட்பட நமது நாட்டிலிருந்தே உற்பத்தி செய்ய அவர்கள் முன்வருவார்கள்.
எலக்ட்ரானிக்ஸ், மருந்து
மேலும், இந்தியாவின் உற்பத்தி-இணைந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தால் மின்னணுவியல் துறையும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் மின்னணு பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதால், ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரலாம். அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையில், மருந்துகள் மற்றும் ஆற்றல் துறைகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்தியா இந்தத் துறைகளில் ஏற்கனவே வலுவான நிலையில் இருப்பதால், இங்கிருந்து ஏற்றுமதிகள் தொடர்ந்து வளரும்.
இந்தியா செய்ய வேண்டியது என்ன?
அடிப்படை கட்டமைப்பை நவீனப்படுத்துதல், நிலையான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் கல்வி மற்றும் தொழில்நுட்ப திறன்களில் முதலீடு செய்வது இந்திய தொழில்துறையின் நிலையான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.
ஆக, அமெரிக்காவின் இந்த புதிய வரி கொள்கை இந்தியாவிற்கு உலகளாவிய வர்த்தகத்தில் ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை இந்தியா சரியாக பயன்படுத்தி, தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு உலக அரங்கில் தனது இடத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications