H-1B விசா கட்டண உயர்வு.. டிரம்பிற்கு ஓடி வந்து ஆதரவு கொடுத்த நெட்பிளிக்ஸ் ஓனர்! அதுக்கு சொன்ன காரணம் இருக்கே
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார். ஒரு லட்சம் டாலர் செலுத்தினால் மட்டுமே ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்ப்பின் இந்த உத்தரவைப் பல்வேறு தரப்பினரும் கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், திடீரென நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் இதில் டிரம்ப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு ஹெச்-1பி விசா தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ஹெச்-1பி விசா கட்டணம் 4,500 டாலரில் (ரூ.3.7 லட்சம்) இருந்து 100,000 டாலராக (ரூ.88.28 லட்சம்) உயர்த்தப்பட்டது. இந்தியர்களே ஹெச்-1பி விசாவை அதிகம் பயன்படுத்தும் சூழலில், இது இந்தியர்களை மிகக் கடுமையாகப் பாதிக்கிறது.

நெட்பிளிக்ஸ் நிறுவனர் பாராட்டு
டிரம்ப்பின் இந்த நடவடிக்கையை அமெரிக்காவிலேயே பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகிறார்கள். குறிப்பாக எலான் மஸ்க் உள்ளிட்ட டெக் நிறுவனத் தலைவர்கள் விமர்சித்திருந்தனர். ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சியை இது தடுக்கும் என அவர்கள் சாடியிருந்தனர். ஆனால், நெட்பிளிக்ஸ் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் அதற்கு நேர்மாறான கருத்துகளைக் கூறியிருக்கிறார். டிரம்ப்பின் நடவடிக்கை மிகச் சரியானது என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.
இது குறித்து ஹேஸ்டிங்ஸ் தனது ட்விட்டரில், "கடந்த 30 ஆண்டுகளாகவே நான் H1-B கொள்கை தொடர்பாக நான் பணியாற்றி வருகிறேன். டிரம்ப் அறிவித்துள்ள $100,000 என்ற கட்டணம் ஒரு சிறந்த தீர்வாகும். இதன் மூலம் H1-B விசா மிகவும் உயர்ந்த மதிப்புள்ள வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது உறுதி செய்யப்படும். இதனால் ஹெச்-1பி விசா லாட்டரி தேவையில்லாமல் போய்விடும்" என்று பதிவிட்டுள்ளார்.
ஹெச்-1பி விசா
அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் H-1B விசா திட்டத்தின் கீழ், திறமையான வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்கிறது. ஆண்டுக்கு 85,000 பேருக்கு மட்டுமே ஹெச்-1பி விசா வழங்கப்படும் போதிலும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் ஹெச்-1பி விசா கோரி விண்ணப்பிக்கிறார்கள். பெரும்பாலும் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறைகளைச் சேர்ந்தவர்களே இதற்கு விண்ணப்பிப்பார்கள். ஆண்டுக்கு 85,000 பேருக்கு மட்டுமே ஹெச்-1பி விசா வழங்கப்படும் என்பதால் அதிகப் பேர் விண்ணப்பிக்கும்போது லாட்டரி முறையிலேயே ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது.
அதிகத் திறன் கொண்டவர்களை அமெரிக்காவுக்குக் கொண்டு வர அறிமுகப்படுத்தப்பட்ட ஹெச்-1பி விசா மூலம் இப்போது குறைந்த திறன் கொண்டவர்கள் அமெரிக்காவுக்குள் வருகிறார்கள் என்று டிரம்ப் தரப்பு கூறுகிறது. அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைகளுக்குக் குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டினர் நியமிக்கப்படுகிறார்கள் என்றும் இதை தீர்க்கவே கட்டணம் உயர்த்தப்படுவதாக டிரம்ப் தரப்பு சொல்லியிருக்கிறது.
ஏன் முக்கியம்!
இதில் தான் டிரம்ப் எடுத்த நடவடிக்கைக்கு ரீட் ஹேஸ்டிங்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளரான ரீட் ஹேஸ்டிங்ஸ் கடந்த காலங்களில் டிரம்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் பல மகத்தான விஷயங்களைக் கூட டிரம்ப் அழித்துவிடுவார் என ஹோல்டிங்ஸ் சாடியிருக்கிறார். ஆனால், இப்போது திடீரென அவரே டிரம்ப்பை ஆதரித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
குழப்பமும் விளக்கமும்!
முதலில் இந்த ஹெச்-1பி விசா தொடர்பான அறிவிப்பில் ஆண்டுதோறும் இந்த ஒரு லட்சம் டாலரை கட்ட வேண்டும் என்பது போல அறிவிப்பு வெளியானது. அதாவது ஏற்கனவே ஹெச்-1பி விசா வைத்திருப்போரும் கூட ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் டாலரை கட்ட வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இதனால் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே குழப்பமான ஒரு சூழல் நிலவியது.
சில மணி நேரத்திற்கு பிறகே வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இது தொடர்பாக விளக்கமளித்திருந்தார். அதாவது ஒரு லட்சம் டாலர் என்பது ஒரு முறை மட்டுமே செலுத்தக்கூடிய விண்ணப்பக் கட்டணம் என்றும் இது ஆண்டு கட்டணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அவரது விளக்கத்திற்கு பிறகே அமெரிக்க வாழ் இந்தியர்கள் சற்று நிம்மதியடைந்தனர்.












Click it and Unblock the Notifications