பூமியின் மையத்தில் இருந்து லீக் ஆகும் அந்த பொருள்! உள்ளே என்னதான் நடக்கிறது! அம்மாடி இவ்வளவு இருக்கா
வாஷிங்டன்: பூமி குறித்து நாம் இத்தனை காலம் புரிந்து வைத்திருக்கும் விஷயத்தை முற்றிலும் சவால் செய்யும் வகையில் புதிய ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
நாம் வாழும் இந்த பூமி எப்படி, எப்போது தோன்றி இருக்கும் என்பது குறித்து இங்கே பல விதமான கதைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால், அறிவியல் பூர்வமாக இது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த பூமியின் தோற்றம் குறித்து அது இந்தளவுக்கு எப்படி உருமாற்றம் அடைந்தது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளத் தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஹீலியம்: அதன் ஒரு பகுதியாக இப்போது ஆர்க்டிக் பகுதியில் உள்ள கனடாவுக்குச் சொந்தமான தீவுக்கூட்டத்தில் உள்ள பாஃபின் தீவில் இருக்கும் 6.2 கோடி ஆண்டுகள் பழமையான எரிமலைப் பாறைகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதில் ஹீலியம்-3 (³He) என்ற அரிய வகை ஐசோடோப் அதிகளவில் இருந்ததையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.. இது தொடர்பான விரிவான ஆய்வுக் கட்டுரை கடந்த அக். 20ஆம் தேதி வெளியானது.
பூமியின் மையப்பகுதிக்கும் மற்ற அடுக்குகளுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து நாம் இத்தனை காலமாக நம்பி வந்ததை இது சவால் செய்யும் வகையில் இருக்கிறது.
அரிய வகை ஐசோடோப்: இந்த ஹீலியம்-3 என்பது பெருவெடிப்பு அதாவது Big Bang சமயத்தில் உருவானதாகும். இது அரிய வகை ஐசோடோப்பாக கருதப்படுகிறது. இவை பொதுவாகப் பூமியின் மேற்பரப்பில் மிகச் சிறிய அளவிலேயே கண்டறியப்படும். பூமி உருவான சமயத்தில் இந்த ஹீலியம் 3 பூமிக்குள் சிக்கியதாக நம்பப்படுகிறது.
பொதுவாக மிகக் குறைவான அளவிலேயே பூமியில் கிடைக்கும் இந்த ஹீலியம் பாஃபின் தீவின் எரிமலைப் பாறைகளில் அதிகமாகக் கிடைப்பது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. பூமியின் மையத்தில் இருந்து அது கசிந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ரொம்பவே புதிது: பூமியின் மையம் என்பது எப்போதும் தனித்து இருக்கும் என்றும் அதற்கும் கிரகத்தின் வெளிப்புற அடுக்குகளுக்கும் தொடர்பு எப்போதும் இருக்காது என்று இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், அதை முற்றிலுமாக சவால் செய்யும் வகையில் இது இருக்கிறது.
பாஃபின் தீவில் ஆலிவின் பாறைகளில் கண்டறியப்பட்ட ஹீலியம்-3 இன் அளவுக்கு அதிகமாக இருக்கும் நிலையில், இது பூமியின் மையத்தில் இருந்து ஹீலியம் லீக் ஆகியிருக்கும் என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இருப்பினும், இதை உறுதி செய்ய நாம் கூடுதல் ஆய்வுகளை நடத்த வேண்டும்.
ஏன் முக்கியம்: பூமியின் மையப் பகுதி குறித்து புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள இது உதவும். பூமியின் மைய பகுதியில் இருந்து ஹீலியம்-3 கசிந்து இருப்பது உறுதியானால், கிரகத்தின் மையப் பகுதி நாம் நினைத்ததை விட மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகவும் அது பூமியின் அடியில் இருக்கும் பறைகள் வழியாக வெளியே லீக் ஆகக் கூடியது என்பது உறுதியாகும்.
பூமியின் மைய பகுதியில் இருந்து வேறு எதாவது வெளியேறி இருக்கிறதா.. என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், இவை பறைகளுக்கு இடையில் எப்படிப் பயணித்தது என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
நமது கிரகம் எந்தளவுக்குச் சிக்கலானது என்பதைக் கண்டறியவும் புரிந்து கொள்ளவும் இது உதவுவதாக இருக்கிறது. இதன் மூலம் பூமியின் மையப்பகுதியும் வெளிப்புறமும் முற்றிலுமாக தனித்து இருப்பதில்லை என்பது உறுதியாகிறது.












Click it and Unblock the Notifications