Google Chrome -யை வாங்கும் சென்னை இளைஞர்? ரூ.3 லட்சம் கோடிக்கு கேட்ட அரவிந்த் சீனிவாஸ்! யார் இவர்?
சென்னை: கூகுள் நிறுவனத்தின் கூகுள் குரோம் (Google Chrome) பிரவுசரை ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 152 கோடிக்கு வாங்க இந்திய வம்சாவளியை சேர்ந்த அரவிந்த் சீனிவாஸ் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அரவிந்த் சீனிவாஸ் பூர்வீகம் சென்னை ஆகும். இவர் யார்? பின்னணி என்ன? கூகுள் குரோமை வாங்குவது சாத்தியமா? என்பது பற்றிய முக்கிய விஷயங்களை இங்கு பார்க்கலாம்.
கூகுள்.. டெக் உலகில் முன்னணியில் இருக்கும் நிறுவனம். செல்போன், மடிக்கணினி உள்ளிட்டவற்றில் மக்கள் பயன்படுத்தும் கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் மேப், ஜிமெயில் உள்பட பலவற்றை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

இதில் கூகுள் குரோம் என்பது கடந்த 2008 ம் ஆண்டில் அறிமுகம் ஆனது. இந்த பிரவுசரை உருவாக்கியதில் சுந்தர் பிச்சைக்கு முக்கிய பங்குண்டு. இப்போது கூகுள் நிறுவன ‛அல்பபெட்' சிஇஓவாக சுந்தர் பிச்சை இருக்கிறார்.
கூகுள் குரோம்
சுந்தர் பிச்சை தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர். தற்போது அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இந்நிலையில் தான் தமிழரான சுந்தர் பிச்சையிடம் கூகுள் குரோமை வாங்க ஆர்வம் காட்டி உள்ளார் இன்னொரு தமிழர்.
இதுதான் தற்போது ‛டெக்' உலகில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அமெரிக்காவில் தற்போது கூகுள் நிறுவனத்துக்கு சட்டச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் கூகுள் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு நடந்து வந்தது.
சட்ட சிக்கலில் கூகுள் குரோம்
அனைத்து நிறுவனங்களின் செல்போன்களிலும் கூகுள் குரோம் மட்டுமே உள்ளது. பிற பிரவுசர்களை பயன்படுத்த வழி கொடுக்காமல் கூகுள் ஆதிக்கம் செலுத்துகிறது. இது கம்ப்யூட்டர், செல்போன் தாண்டி பிற வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். மேலும் இந்த விஷயத்தில் கூகுள் ஏக போக உரிமையை அனுபவித்து வருகிறது.
எந்தவித வாய்ப்பும் வழங்கவில்லை என்று கொலம்பியா மாவட்ட நீதிபதி அமித் மேத்தா கூறினார். மேலும் கூகுள் நிறுவனத்துக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்தார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் கூட கூகுள் நிறுவனம் தங்களின் தயாரிப்புகள் சிலவற்றை விற்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.
ரூ.3 லட்சம் கோடிக்கு கேட்பு
இந்நிலையில் தான் கூகுள் குரோமை விற்பனை செய்வதாக இருந்தால் தங்களிடம் வழங்கும்படி அரவிந்த் சீனிவாஸ் தெரிவித்துள்ளார். கூகுள் குரோமை அவர் 34.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 152 கோடியாகும்.
சென்னையை சேர்ந்தவர்
இந்த அரவிந்த் சீனிவாஸ் தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர். அவருக்கு வயது 30. இப்போது ஏஐ உலகில் முக்கிய பங்காற்றி வரும் Perplexity AI நிறுவனத்தின் சிஇஓவாக உள்ளார். அரவிந்த் சீனிவாஸ் சென்னை ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் பிடெக் மற்றும் எம்டெக் படிப்பை படித்து முடித்துள்ளார்.
அதன்பிறகு அமெரிக்காவில் பிஎச்டி படிப்பை முடித்தவர். மெஷின் லேர்னிங் பிரிவில் பிஎச்டி படிப்பை முடித்தார். அதன்பிறகு பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றினார். சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தில் பணியாற்றினார். கூகுள் நிறுவனத்தில் ‛கூகுள் பிரைன்' எனும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதில் பணியாற்றினார். அதேபால் ‛டீப் மைண்ட்' நிறுவனத்திலும் பணியாற்றினார்.
3 ஆண்டில் பெரும் வளர்ச்சி
கடந்த 2022ம் ஆண்டில் 3 நண்பர்களுடன் சேர்ந்து அவர் ‛ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை தொடங்கினார். Perplexity AI நிறுவனத்தின் சிஇஓவாக அவர் செயல்பட்டு வருகிறார். Perplexity AI உருவாக்கியதால் அதிக கவனம் பெற்றார். பல பன்னாட்டு நிறுவனங்கள் அரவிந்த் சீனிவாசின் நிறுவனத்தில் முதலீடுகள் செய்துள்ளன. அமேசான் நிறுவனம் சார்பில் ரூ.800 கோடிக்கு அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பிரதமர் மோடி - அரவிந்த் சீனிவாஸ் இடையே சந்திப்பு நடந்தது. அப்போது இந்தியா சார்பில் ஏஐ உருவாக்குவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானும் அவரை சந்தித்து பேசி உள்ளார். நடிகர் கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பத்தை திரைத்துறையில் புகுத்துவது பற்றி வெளிநாடு சென்று படித்தார். அவரும் அரவிந்த் சீனிவாசை சந்தித்து பேசி உள்ளார்.
வாங்க முடியுமா?
தற்போது அரவிந்த் சீனிவாஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பு மதிப்பு 14 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது கூகுள் குரோமை ஒப்பிடும்போது மிகவும் குறைந்த மதிப்பாகும். இதனால் கூகுள் குரோம் விற்பனைக்கு வந்தாலும் கூட அதனை அரவிந்த் சீனிவாஸால் வாங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் அரவிந்த் சீனிவாஸ் தன்னை பிரபலப்படுத்தும் வகையில் கூகுள் குரோமை வாங்கும் ஆர்வத்தை காட்டி விளம்பரம் தேடுவதாகவும் ‛டெக்' வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது தற்போது ‛டெக்' உலகில் பேசும் பொருளாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications