அம்மா டயானா மாதிரி தாராளம்.. இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி உக்ரைனுக்கு ஏராள நிவாரண உதவி
வாஷிங்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்கெல் தம்பதியும் உக்ரைன் மக்களுக்கும் பல்வேறு வகைகளில் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இங்கிலாந்து அரசக் குடும்பத்திலிருந்து வெளியேறிய ஹாரி - மேகன் தம்பதி அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்தது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ஹாரி - மேகன் தம்பதி கண்டனம்
இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேபோல் ஹாரி - மேகன் தம்பதியும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தாக்குதலுக்கு மறுநாளான பிப்ரவரி 25 ஆம் தேதியே அவர்கள் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டனர். அதில், "உக்ரைன் மக்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். அதேபோல் சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறி நடத்தப்படும் இந்த தாக்குதலை கண்டிக்கிறோம். சர்வதேச தலைவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்." என வலியுறுத்தினர்.

நிவாரண உதவிகள் வழங்கும் தம்பதி
இதனிடையே ரஷ்யாவின் கொடூர தாக்குதல்களில் சிக்கித் தவித்து வரும் உக்ரைன் மக்களுக்கு தேவையான உதவிகளையும் ஹாரி - மேகன் தம்பதியினர் வழங்கி வருகின்றனர். இது தொடர்பாக நேற்று ஹாரி - மெகன் தம்பதியால் நடத்தப்பட்டு வரும் ஆர்ச்வெல் தொண்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தாய் டயானா உதவிய நிறுவனத்துக்கு நிதி கொடுத்த ஹாரி
அதில், உக்ரைன் மக்களுக்கு தொடர் உதவிகளை செய்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உலக சுகாதார நிறுவனம், ஹாலோ அறக்கட்டளை, World Central Kitchen, Helping Ukrainian Families Settle உள்ளிட்டவற்றுக்கு ஏராளமான உதவிகளை இந்த தம்பதி வழங்கி இருக்கிறது. இதில் ஹாலோ அறக்கட்டளைக்கு ஹாரியின் தாயாரும் மறைந்த இளவரசியுமான டயானா நிதியுதவி செய்து இருக்கிறார்.

தடகள வீரர் மறைவுக்கு இரங்கல்
அதேபோல் ரஷ்யாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட தான் நடத்தி வரும் இன்விக்டஸ் விளையாட்டின் தடகள வீரர் ஷெர்ஹி கரைவானுக்கு ஹாரியும் அவரது மனைவி மேகனும் இரங்கல் தெரிவித்தனர். ராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஹாரி கடந்த 2014 ஆம் ஆண்டு இன்விக்டஸ் கேம்ஸ்-ஐ நிறுவினார்.
ஷெர்ஹி கரைவான் மறைவு தொடர்பாக ஹாரி - மேகனின் ஆர்ச்வெல் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "உக்ரைனில் எங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த செய்தி எங்கள் இதயத்தை கனமாக்கி இருக்கிறது. கொல்லப்பட்ட ஷெர்ஹி கரைவான் நமது நாட்டை தாக்குதல்களில் இருந்து பாதுகாத்தவர்." என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications