ஆழ்கடலில் சுற்றிய மீன்.. பிடித்து பார்த்தால் கனவிலும் எதிர்பார்க்காத விஷயம்.. பூமி மொத்தமா மாறுதே
வாஷிங்டன்: உலகில் மனிதர்கள் தொடங்கி அனைத்து வகையான உயிரினங்களும் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையே பழமையான கோயிலாகாந்த் மீன்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் உலகம் எப்படி இயங்குகிறது என்பது நாம் புரிந்து கொள்ள மிகப் பெரியளவில் உதவியாக இருப்பதாக முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த உலகம் பல ஆச்சரியங்கள் நிறைந்தது. நாம் கனவிலும் நினைக்காத பல விஷயங்கள் பூமியில் சத்தமே இல்லாமல் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அப்படி ஒரு அதிசயம் குறித்த விரிவான ஆய்வு நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் டெக்டோனிக் தட்டுகளில் ஏற்படும் மாற்றங்கள் பூமியை எப்படி மாற்றுகிறது என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
மீன்கள்: கோயிலாகாந்த் என்ற வகை பண்டைக் கால மீன்களை ஆய்வு செய்த போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயிலாகாந்த் இனங்களின் புதை படிவங்களை ஆய்வு செய்ததில் பரிணாம வளர்ச்சி மிகத் தெளிவாகத் தெரிகிறது. இதில் ஆச்சரியமான உண்மை என்னவென்றால் கோயிலாகாந்த் மீன்களின் பரிணாம வளர்ச்சிக்கு கடல் காரணமில்லை.. நாம் இதுவரை யோசிக்காத ஒன்று தான் காரணமாக இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மிக மிகப் பழமையான மீன்களான இந்த கோயிலாகாந்த் மீன்கள், டைனோசர்களின் காலத்தில் அதாவது சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வேறுபட்டு இருந்தது. அப்போது உலகம் முழுவதிலுமிருந்து 175க்கும் மேற்பட்ட புதை படிவ இனங்களில் இதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டன.
மீன் படிவங்கள்: கிரெட்டேசியஸ் காலத்தின் முடிவாகக் கருதப்படும், 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இந்த கோயிலாகாந்த் மீன்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இருப்பினும் அதன் பிறகு அனைத்து புதைபடிமங்களும் மர்மமான முறையில் மறைந்துவிட்டன. சிறுகோள் தாக்கியதில் டைனோசர்களுடன் இந்த கோயிலாகாந்த் மீன்கள் முற்றிலும் அழிந்து போனதாகவே ஆய்வாளர்கள் கருதினர்.
பல காலமாக கோயிலாகாந்த் மீன்கள் அழிந்துவிட்டதாகவே மக்கள் நினைத்தனர். இருப்பினும், 1938இல் தென்னாப்பிரிக்காவில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது தான் மீண்டும் இந்த வகை மீனைப் பிடித்துள்ளனர். இது இன்றும் வட அமெரிக்காவின் காடுகளில் சுற்றித் திரியும் ஒரு உயிருள்ள டைனோசரை பிடித்தது போன்ற நிகழ்வு. இத்தனை காலம் உயிரிழந்துவிட்டதாக நினைத்த கோயிலாகாந்த் மீன் உயிருடன் பிடிக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
என்ன காரணம்: இந்த மீனையும் பண்டைக் காலத்தில் கண்டறியப்பட்ட கோயிலாகாந்த் மீன்களின் படிவத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளனர். அதில் முதலில் இரண்டுமே ஒன்று போலவே இருந்துள்ளது. இருப்பினும், கூர்ந்து கவனிக்கும் போது அதில் பல மாற்றங்கள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. கோயிலாகாந்த் மீன்கள் பரிணாம வளர்ச்சி அடைகிறது என்ற போதிலும் அது மெதுவாகவே மாறுகிறதாம்.
இந்த மாற்றத்திற்கான காரணம் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றத்திற்குக் கடல் தான் காரணம் என்று நாம் நினைப்போம். ஆனால், உண்மையில் டெக்டோனிக் மூவ்மெண்ட் தான் இதற்குக் காரணமாக இருக்கிறதாம். டெக்டோனிக் மூவ்மெண்ட்களே பல வகையான மீன்கள், விலங்குகள் மற்றும் செடி கொடிகள் தோற்றத்துக்குக் காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
டெக்டோனிக் மூவ்மெண்ட்களால் புதிய தீவுகள் உருவாகும் போது, அதில் தனித்து இருக்கும் விலங்குகள், பாலூட்டிகள் அந்த குறிப்பிட்ட பகுதிக்கு ஏற்ற வகையில் மாறிக் கொள்கின்றன. இப்படி அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்களே புதிய உயிரினங்களை உருவாக்குகின்றன. அதன் பரிணாம வளர்ச்சிக்கும் காரணமாக இருக்கின்றன.












Click it and Unblock the Notifications