இந்தியாவை சரி பண்ணனுமாம்! டிரம்ப் அரசு சொன்ன சர்ச்சை கருத்து.. அமெரிக்க நலன் மட்டும்தான் முக்கியமா?
வாஷிங்டன்: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. டிரம்பும் அவருடைய சகாக்களும் இந்தியா குறித்துச் சொல்லும் கருத்துகள் சர்ச்சையைக் கிளப்புவதாகவே இருக்கிறது. இதற்கிடையே இந்தியாவைச் சரி செய்ய வேண்டும் என்றும் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அமெரிக்காவின் வர்த்தகத் துறை ஹோவர்ட் லட்னிக் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
டிரம்ப் அரசின் நடவடிக்கை இந்தியா அமெரிக்கா உறவுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. முதலில் இந்தியா மீது டிரம்ப் 50% வரியை விதித்தார். அதன் பிறகும் அவரும் அவரது நிர்வாகத்தில் இருப்போரும் இந்தியா குறித்து தேவையே இல்லாத சர்ச்சை கருத்துகளைக் கூறி வருகிறார்கள். இதற்கிடையே அமெரிக்காவின் வர்த்தகத் துறை ஹோவர்ட் லட்னிக் மீண்டும் சர்ச்சை கருத்தைக் கூறியிருக்கிறார்.

சர்ச்சை கருத்து
அமெரிக்கா இந்தியா இடையே ஒரு பக்கம் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், இந்தியாவைச் சரிசெய்ய வேண்டும் என அவர் சர்ச்சை கருத்தைத் தெரிவித்துள்ளார்.. அமெரிக்க மக்களுக்குத் தங்கள் பொருட்களை விற்க விரும்பினால், அதிபரின் கொள்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் தங்கள் மார்கெட்டை திறக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அமெரிக்க நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் மேலும், "சுவிட்சர்லாந்து, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளை நாம் சரி செய்ய வேண்டியுள்ளது. அவை அமெரிக்காவிற்குச் சரியாகப் பதிலளிக்க வேண்டும். தங்கள் சந்தைகளைத் திறந்து, அமெரிக்காவிற்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
இந்தியா முக்கியம்
அமெரிக்க மக்களுக்குத் தங்கள் பொருட்களை விற்க விரும்பினால், அமெரிக்க அதிபருடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதை இந்த நாடுகள் (இந்தியா மற்றும் பிரேசில்) புரிந்து கொள்ள வேண்டும்.. பல வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தீர்க்கப்படாமல் இருப்பது உண்மை தான். அதைத் தீவிரமாக நடத்தி வருகிறோம். குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதேபோல தைவான் இன்னும் இருக்கிறது. இதுபோல பல நாடுகள் இருந்தாலும் பெரிய நாடாக இந்தியா மற்றும் பிரேசில் இருக்கிறது. அவர்களுடன் நிலைமை சீக்கிரம் சரி செய்வோம்" என்றார்.
கடும் வரிகள்
இப்போது இந்தியா மீது அமெரிக்கா கடுமையான வரிகளை விதித்துள்ளன. முதற்கட்டமாக 25% வரி விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரஷ்யக் கச்சா எண்ணெய்யை வாங்குவதாகச் சொல்லிக் கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா மீதான அமெரிக்காவின் ஒட்டுமொத்த வரி 50%ஆக உயர்ந்தது. இதனால் இரு நாட்டு வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியப் பொருட்கள் சுமார் 40%க்கு மேல் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
மீண்டும் பேச்சுவார்த்தை
இப்படியொரு சவளான சூழலுக்கு நடுவே, இந்தியா மற்றும் அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியுள்ளன. வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான இந்தியக் குழு, செப்டம்பர் 22 முதல் 24 வரை வாஷிங்டனுக்குச் சென்று, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் மற்றும் இந்தியாவிற்கான தூதர் செர்ஜியோ கோர் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்புகள் பயனுள்ளதாக இருந்ததாக வர்த்தக அமைச்சகம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் மேலும், "ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தியக் குழு அமெரிக்க அரசுடன் ஆலோசனை நடத்தியது. இரு தரப்பினரும் ஒப்பந்தம் குறித்து விரிவான ஆலோசனைகளை நடத்தினர். மேலும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக எட்டத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications