"குடியுரிமை ரத்து.." டிரம்ப் சொன்ன அந்த ஒரு வார்த்தை! பல லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஆபத்து
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை அதிபராகப் பதவியேற்ற முதல் நாளே ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த முடிவு ஏன் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.. இதனால் இந்தியர்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே டிரம்ப் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய அனைவரையும் வெளியேற்றுவோம் என்று தொடர்ந்து கூறி வந்தார்.

டிரம்ப்: அதாவது சட்டவிரோதமாகக் குடியேறுவோரால் தான் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும் அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், முறைகேடாக நாட்டில் இருப்போர் வாக்களிக்கக் கூட அனுமதிக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கிடையே அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினரைத் தடுக்க தன்னிடம் உள்ள திட்டங்கள் குறித்து டிரம்ப் தடாலடியாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் அடுத்த மாதம் 20ம் தேதி அதிபராகப் பதவியேற்கவுள்ள நிலையில், அதிபர் பதவிக்கு வந்தவுடன் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை நிறுத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்..
சர்ச்சை பேச்சு: அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரையும் நாடு கடத்துவதற்கான தனது திட்டத்தை அவர் தெளிவுபடுத்தினார். இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "இதற்கு விரிவான திட்டம் இருக்கிறது. முதலில் குற்றப் பதிவுகள் கொண்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். அவர்களை உடனடியாக நாடு கடத்துவோம். இது கடினமான பணி என்றாலும் கூட நிச்சயம் அதைச் செய்து முடிப்போம்" என்றார்.
பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்கக் குடியுரிமை தருவது தொடர்பாகப் பேசிய டிரம்ப், "பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை என்பது அபத்தமானது. இதை முடிவுக்குக் கொண்டு வர ஒரு நிர்வாக உத்தரவே போதும். நான் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற முதல் நாளே இந்த உத்தரவைப் பிறப்பிக்கப் போகிறேன். நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திலும் பல திருத்தங்கள் தேவைப்படுகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் முன்னேற வேண்டும்.. அமெரிக்கர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால் இதை நாம் செய்தாக வேண்டும். இதை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் உடன் கூட பேசத் தயாராக இருக்கிறேன்" என்றார்.
இந்தியர்களுக்கு ஆபத்து: கடந்த 2022ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி சுமார் 48 லட்சம் இந்திய-அமெரிக்கர்கள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். அவர்களில் 34 சதவீதம் அதாவது 16 லட்சம் பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள். அமெரிக்காவின் தற்போதைய சட்டப்படி பெற்றோர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவராக இல்லை என்றாலும் கூட அமெரிக்க மண்ணில் பிறந்தால் அந்த குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படும். இதைத் தான் நிர்வாக உத்தரவு மூலம் ரத்து செய்யப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இது அங்குள்ள இந்திய அமெரிக்கர்களைப் பாதிக்கும்.
அமெரிக்கக் குடியுரிமை அல்லது கிரீன் கார்டு இல்லாத பெற்றோரை இது பாதிக்கும். டிரம்ப் இந்த சட்டத்தை ரத்து செய்தால், அவர்களின் குழந்தை அமெரிக்காவிலேயே பிறந்திருந்தாலும் அந்நாட்டின் குடியுரிமை கிடைக்காது. ஏற்கனவே க்ரீன் கார்டு பெறப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இந்த நேரத்தில் பிறப்புரிமை குடியுரிமையை டிரம்ப் நீக்கினால், அது நாட்டில் உள்ள பல லட்சம் இந்தியர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.











Click it and Unblock the Notifications