கிரீன்லாந்து மீது போரை ஆரம்பிக்கும் அமெரிக்கா? வெடியை வீசிய டிரம்ப்! சர்வதேச அளவில் எகிறும் பதற்றம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தினசரி எதாவது ஒன்றைச் சொல்லிப் பரபரப்பைக் கிளப்பி வருகிறார். இதற்கிடையே இப்போது அவர் கனடாவை மீண்டும் அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைப்பது குறித்துப் பேசியிருக்கிறார். மேலும், கிரீன்லாந்து மீது அமெரிக்கா போர் தொடுக்குமா என்பது குறித்த கேள்விக்கு அவர் சொன்ன பதில் உலக நாடுகளைக் கவனிக்க வைத்துள்ளது.
அமெரிக்கா அதிபராகப் பதவியேற்றது முதலே டிரம்ப் அவ்வப்போது பரபர கருத்துகளைக் கிளப்பி வருகிறார். அவர் கூறும் கருத்துகள் சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்புவதாகவே அமைகிறது. குறிப்பாக அவர் அதிபரான சமயத்திலேயே கனடாவை 51வது அமெரிக்க மாகாணமாக இணைப்பதாகச் சர்ச்சை கிளப்பி வந்தார்.

கிரீன்லாந்து விவகாரம்
கடந்த சில காலமாகவே இது குறித்துப் பேசாமல் டிரம்ப் கொஞ்சம் அமைதியாக இருந்த நிலையில், இப்போது அவர் மீண்டும் இது தொடர்பாகச் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். பிரபல அமெரிக்க ஊடகமான என்பிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாகச் சில கருத்துகளைத் தெரிவித்தார். குறிப்பாக கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை வராது என்று குறிப்பிட்ட அவர், ஆனால் கிரீன்லாந்து இதைச் சொல்ல முடியாது என்று கூறினார்.
டிரம்ப்
அதாவது கிரீன்லாந்து மீது ராணுவ நடவடிக்கையை எடுக்க வேண்டி இருக்கும் என்பது போன்ற கருத்தை அவர் கூறியுள்ளார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஒருவேளை கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால் அது மிகப் பெரிய ஒரு போரின் தொடக்கப் புள்ளியாகவும் அமைந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.
கனடா விவகாரம்
இது தொடர்பாக டிரம்ப் மேலும் கூறுகையில், "கனடா பிரதமர் மார்க் கார்னி வெள்ளை மாளிகைக்கு வந்து என்னைச் சந்திக்கவுள்ளார். அப்போது இது குறித்து (கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது) குறித்து ஆலோசிக்கவுள்ளேன். நான் ஏன் இதைச் சொல்கிறேன் தெரியுமா? கனடாவுக்கு நாம் ஆண்டுக்கு $200 பில்லியன் மானியம் வழங்குகிறோம்.
அதேநேரம் நமக்கு அவர்களின் கார்கள் தேவையில்லை. உண்மையில் அது நமக்குத் தேவையே இல்லை. கார்கள் மட்டுமின்றி, அவர்களின் மின்சாரம் உட்பட எதுவும் தேவையில்லை. தேவையான அனைத்தும் நம்மிடம் இருக்கிறது. சுற்றுச்சூழலைக் காக்கிறேன் என சொல்வோரை மட்டும் காலி செய்தால் போதும். நமக்குப் பிரச்சினை இல்லை. அவர்களிடம் (கனடா) இருக்கும் எதுவும் நமக்கு தேவையில்லை.
ஏன் மானியம் தர வேண்டும்
நாம் தான் ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன் டாலர் அவர்களுக்குக் கொடுக்கிறோம். இதைத் தான் நான் ட்ரூடோவிடம் கேட்டேன்.. இதனால் தான் அவரை கனடா பிரதமர் என குறிப்பிடாமல் கனடா மாகாண ஆளுநர் என்று குறிப்பிட்டேன். அவரை சந்தித்தபோது நான், 'கவர்னர் ட்ரூடோ, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? நாங்கள் ஏன் உங்களுக்கு $200 பில்லியன் தருகிறோம்? நாங்கள் ஏன் கனடாவுக்கு மானியம் வழங்குகிறோம்? கனடா எங்களின் ஒரு மாகாணமாக இருந்தால் இந்தச் செலவு எங்களுக்கு இருக்காது. சிறப்பாக இருக்குமா' எனக் கேட்டேன். ஆனால், இதற்கு அவர் பதில் அளிக்கவில்லை.

சிறப்பாக இருக்கும்
கனடா அமெரிக்காவுடன் இணைந்தால் அது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.. அது ஒரு சிறந்த அமெரிக்க மாகாணமாக இருக்கும். நீங்கள் மேப்பை பாருங்கள்.. புவியியலைப் பார்த்தால்.. நான் இன்னும் மனதளவில் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தான். அதை வைத்துச் சொல்கிறேன். அமெரிக்கா கனடா இடையேயான எல்லை கோடு என்பது ஆட்சியாளர்களால் வரையப்பட்ட செயற்கை கோடு. அது இரு நாடுகளைப் பிரிக்கிறது. இரு நாடுகளுக்குக் குறுக்கே செல்கிறது. அந்த செயற்கை கோடு இல்லை என்றால் அழகாக இருக்கும்.
கனடாவுக்கு நாம் ஒவ்வொரு ஆண்டும் மானியமாக 200 பில்லியன் டாலரை கொடுப்பதை அமெரிக்கப் பொதுமக்கள விரும்பவில்லை என்று நினைக்கிறேன். நான் மீண்டும் சொல்கிறேன்.. அவர்களின் கார்கள், எனர்ஜி உட்பட எதுவும் நமக்குத் தேவையில்லை.. நாம் கனடாவுடன் மிகக் குறைவான அளவே வர்த்தகம் செய்கிறோம்.. அவர்கள் தான் நம்முடன் அதிக வர்த்தகம் செய்கிறார்கள்.. அமெரிக்காவுக்கு கனடா தேவையில்லை.. கனடாவுக்குத் தான் அமெரிக்கா தேவை" என்றார்.
ராணுவ நடவடிக்கை
அப்போது செய்தியாளர் ஒருவர் கனடாவைக் கைப்பற்ற ராணுவ நடவடிக்கை எடுப்பீர்களா எனக் கேட்டார். அதற்கு ஒரு நொடி யோசித்த டிரம்ப், "அந்தளவுக்கு நிலைமை மோசமாகாது என நினைக்கிறேன்.. அதேநேரம் கிரீன்லாந்து விவகாரத்தில் நீங்கள் சொல்வது நடக்கலாம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் சர்வதேசப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து நமக்குத் தேவை. அதேநேரம் கனடாவுக்கு நாம் இதைச் சொல்ல முடியாது.

கிரீன்லாந்து மீது போர்
அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து கண்டிப்பாகத் தேவை. கிரீன்லாந்தில் மக்கள்தொகை குறைவாகவே இருக்கிறது. அங்குள்ள மக்களை நாங்கள் கவனித்துக் கொள்வோம். அவர்களை நல்லபடியாகப் பார்த்துக் கொள்வோம். இருப்பினும் சர்வதேச பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து தேவை" என்றார். அதாவது கிரீன்லாந்து மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்பதை டிரம்ப் வெளிப்படையாகச் சொல்லவில்லை. அதேநேரம் அதை அவர் மறுக்கவும் இல்லை. இதுவே இப்போது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கிரீன்லாந்து விவகாரம்
ஐரோப்பாவில் உள்ள டென்மார்க் நாட்டில் ஒரு பகுதியாக உள்ள தீவு தான் கிரீன்லாந்து. பகுதியளவு சுயாட்சி உரிமைகளைக் கொண்ட பகுதியாக கிரீன்லாந்து திகழ்கிறது. ஏற்கனவே கிரீன்லாந்தில் பிடுஃபிக் (Pituffik) என்ற பகுதியில் அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான ராணுவத் தளம் ஒன்று அமைந்துள்ளது. அமெரிக்காவுக்கு மிக அருகே அட்லான்டிக் கடலில் கிரீன்லாந்து இருக்கிறது. கிரீன்லாந்திற்கு அருகே உள்ள பிராந்தியங்களில் ரஷ்யா கடந்த சில கலமாகவே தனது முதலீடுகளை அதிகரித்து வருகிறது. இதை அமெரிக்கா தனது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கிறது.
ஏன் முக்கியம்
இதன் காரணமாகவே கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்பதில் டிரம்ப் தீவிரமாக இருக்கிறார். அதேநேரம் கிரீன்லாந்தை வாங்க டிரம்ப் ஆர்வம் காட்டுவது இது முதல்முறை இல்லை. இதற்கு முன்பு 2016-2020 காலக்கட்டத்தில் அதிபராக இருந்தபோதே கிரீன்லாந்தை வாங்க டிரம்ப் ஆர்வம் காட்டினார். கடந்த 2019ல் கிரீன்லாந்தை வாங்க டிரம்ப் ஆர்வம் காட்டினார். இருப்பினும், அப்போது டென்மார்க் அரசும் கிரீன்லாந்து மக்களும் நிராகரித்துவிட்டனர்.
இந்தாண்டு தொடக்கத்திலும் கூட டிரம்ப் தனது யோசனையைப் பகிர்ந்த போது இரு தரப்பும் கடுமையாக எதிர்வினையாற்றியது. இந்தச் சூழலில் தான் ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயார் என்பது போல டிரம்ப் பேசியிருக்கிறார். இது சர்வதேச அளவில் முக்கியமானதாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications