அமெரிக்க மாகாண தேர்தல்களில் 5 பெண்கள் உள்பட இந்திய வம்சாவளியினர் 12 பேர் வெற்றி
அமெரிக்காவில் நடைபெற்ற மாகாண சட்டசபை தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியினர் 5 பெண்கள், 7 ஆண்கள் என 12 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற மாகாண சட்டசபை தேர்தல்களிலும் இந்திய வம்சாவளியினர் 5 பெண்கள், 7 ஆண்கள் என 12 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த வெற்றியை இம்பேக்ட் என்று அழைக்கப்படுகிற இந்திய வம்சாவளி அரசியல் நடவடிக்கை குழு பாராட்டி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுடன் நாடாளுமன்றத்துக்கும், பல மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் அமி பெரா, ரோகன்னா, பிரமிளா ஜெயபால் ஆகியோர் அபாரவெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் தமிழர்கள் ஆவார்கள்.
அமெரிக்காவில் உள்ள 50 மாகாணத் தேர்தல்களில் 12க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 5 பேர் பெண்கள். நியூயார்க் மாகாண சட்டப்பேரவைக்கு இந்திய அமெரிக்கர் ஜெனிபர் ராஜ்குமார், கென்டகி மாகாணத்தில் நிமா குல்கர்னி, வெர்மான்ட் மாகாணத்தில் கேஷா ராம், வாஷிங்டன் மாகாணத்தில் வந்தனா ஸ்லாட்டர், மிச்சிகன் மாகாணத்தில் பத்மா குப்பா ஆகிய 5 பெண்கள் தேர்வாகியுள்ளனர். ஆண்களில் ஒஹியோ மாகாணத்தில் நீரஜ் அந்தானி, வடக்கு கரோலினா மாகாணத்தில் ஜெய் சவுத்ரி, அரிசோனாவில் அமிஷ் ஷா, பென்சில்வேனியாவில் நிகில் சாவல், மிச்சிகனில் ரஞ்சீவ் புரி, நியூயார்க்கில் ஜெரமி கூனி, கலிபோர்னியாவில் ஆஷ் கல்ரா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய வம்சாவளியினருக்கு பாராட்டு
இந்திய வம்சாவளியினர் அபார வெற்றி பெற்றிருப்பதை இம்பேக்ட் என்று அழைக்கப்படுகிற இந்திய வம்சாவளி அரசியல் நடவடிக்கை குழு பாராட்டி உள்ளது. இந்த அமைப்பு, அமெரிக்க தேர்தல்களில் இந்திய வம்சாவளியினர் அதிக எண்ணிக்கையில் வென்றிருப்பதை வரலாற்று தேர்தல் என்று கூறி உள்ளது. இந்த அமைப்பின் ஆதரவை இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் பெற்றிருந்தனர். இவர்களுக்காக 10 மில்லியன் டாலர் இந்திய ரூபாயில் சுமார் ரூ.75 கோடி இந்த அமைப்பு தேர்தல் நிதியாக திரட்டி உதவியது. இந்த ஆண்டு தேர்தல் அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் பெரிய பங்களிப்புக்கு வழிவகுத்துள்ளது என்று இம்பேக்ட் அமைப்பின் செயல் இயக்குனர் நீல் மகிஜா கூறியுள்ளார்.

ஜெனிபர் ராஜ்குமார்
நியூயார்க் மாகாண சட்டசபைக்கு இந்திய வம்சாவளி பெண் வக்கீல் ஜெனிபர் ராஜ்குமார், 38, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவர் குடியரசு கட்சி வேட்பாளர் ஜியோவானி பெர்னாவை வீழ்த்தி, அந்த மாகாண சட்டசபைக்கு தேர்வு பெற்றுள்ள முதல் தெற்காசிய பெண் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

ஜெய் சவுத்ரி
வட கரோலினா மாகாண செனட் சபை தேர்தலில் ஜெய் சவுத்ரி, 51 ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அரிசோனா மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அமிஷ் ஷா ஜனநாயக கட்சி சார்பில் களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளார்.

நிகில் சாவல்
பென்சில்வேனியா மாகாண செனட் சபைக்கு நிகில் சாவல், 37 ஜனநாயக கட்சி தரப்பில் போட்டியிட்டு வென்றுள்ளார். மிச்சிகன் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ரஞ்சீவ் பூரி வெற்றி பெற்றுள்ளார்.

ஆஷ் கல்ரா
நியுயார்க் மாகாண செனட் சபை தேர்தலில் ஜெரேமி கூனி ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு அபார வெற்றி பெற்றுள்ளார். கலிபோர்னியா மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய ஆஷ் கல்ரா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

கேஷா ராம்
வெர்மாண்ட் மாகாண செனட் சபைக்கு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கேஷா ராம், 34 வெற்றி பெற்று, முதல் பெண் செனட் உறுப்பினர் என்ற சிறப்பை அங்கு பெற்றுள்ளார். கென்டகி மாகாண சட்டசபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு நிமா குல்கர்னி என்ற பெண் வெற்றி பெற்றுள்ளார்.

நீரஜ் அந்தானி
ஓஹியோ மாகாண சட்டசபையின் மேல்சபையான செனட் சபைக்கு இந்திய வம்சாவளி நீரஜ் அந்தானி ,29 குடியரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஜனநாயக கட்சி வேட்பாளர் மார்க் போகலை வீழ்த்தி, ஓஹியோ மாகாண செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி என்ற சாதனையை செய்துள்ளார். தனது வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார் நீரஜ். ஓஹியோ மாகாண மக்களுக்காக கடுமையாக பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

வந்தனா சிலேட்டர்
வாஷிங்டன் மாகாண சட்டசபைக்கு வந்தனா சிலேட்டர் என்ற பெண் விஞ்ஞானி, ஜனநாயக கட்சி தரப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். மிச்சிகன் மாகாண சட்டசபைக்கு பத்மா குப்பா என்ற பெண், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த மாவட்ட நீதிபதி தேர்தலில் ரவி சாண்டில் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

20 லட்சம் இந்திய அமெரிக்கர்கள்
இந்த ஆண்டு தேர்தலில் அமெரிக்கா முழுவதும் 20 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனர் என்று வாஷிங்டனில் உள்ள அமெரிக்க முன்னேற்ற மையம் தெரிவித்துள்ளது. புளோரிடா, பென்சில்வேனியா, மிச்சிகன் மாகாணங்களில் மட்டும் சுமார் 5 லட்சம் அமெரிக்க இந்தியர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications