டிரம்பிடம் பணிந்த மோடி? இந்தியா மீதான வரியை 16% குறைக்கும் அமெரிக்கா? கையெழுத்தாகும் ஒப்பந்தம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது. இதுதொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான் தற்போது அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இது வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் இந்தியாவுக்கான வரியை 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை டிரம்ப் குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி 25 சதவீத வரியும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 25 சதவீத வரியையும் டிரம்ப் விதித்துள்ளார். நம் நாட்டின் வர்த்தக ஏற்றுமதிக்கு அமெரிக்கா முக்கிய நாடாக உள்ளது.

டிரம்பின் இந்த 50 சதவீத வரியால் தற்போது இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் சரிவை சந்தித்து உள்ளன. இது நம் நாட்டு வர்த்தகத்துக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படியான சூழலில் தான் இருநாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் வரி பிரச்சனையை தீர்க்கும் வகையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பேச்சுவார்த்தை என்பது எனர்ஜி மற்றும் விவசாய பொருட்களை மையப்படுத்தி நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தம் என்பது அமெரிக்காவின் சோளம் மற்றும் சோயாபவுடரை (Soymeal) நம் நாட்டில் அனுமதிக்கும். முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம், சோயாபீன்ஸ் பவுடரை அனுமதிக்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்தது.
ஆனால் நம் நாடு அதனை அனுமதிக்க மறுத்துவிட்டது. தற்போதைய ஒப்பந்தத்தில் மரபணு மாற்றப்படாத சோளம், சோயாபீன்ஸில் இருந்து தயாரிக்கும் பவுடரை நம் நாட்டின் மார்க்கெட்டில் விற்பனை செய்ய அமெரிக்காவுக்கு, நம் நாடு அனுமதி வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று கூறப்படுகிறது.
இது நடக்கும் பட்சத்தில் அமெரிக்காவின் சோளம், சோயாபவுடர் நம் நாட்டுக்கு வரும். இது அமெரிக்காவின் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும். அதேபோல் எனர்ஜி துறை சார்ந்து சில ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட உள்ளது. அதில் ஒரு பகுதியாக நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைக்கும் என்ற அம்சம் இடம்பெற உள்ளது. இதனால் அமெரிக்கா நம் நாட்டுக்கான வரியை 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த ஒப்பந்தத்தை இந்த மாத இறுதிக்குள் முடிக்கும் வகையில் பணி நடக்கிறது. இந்த மாத இறுதியில் ASEAN உச்சி மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டுக்கு முன்னதாக இருநாடுகளும் ஒப்பந்தத்தை முடித்து அந்த மாநாட்டில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுபற்றி நம் நாட்டின் மத்திய வர்த்தக துறை அமைச்சகம் மற்றும் வெள்ளை மாளிகையிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்கள் இதுபற்றி பதிலளிக்க மறுத்துவிட்டனர். இருப்பினும் மேற்கூறிய ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறி அமெரிக்கா நம் நாட்டுக்கான வரியை 15 முதல் 16 சதவீதம் வரை குறைத்தால் அது நம் நாட்டின் வர்த்தகர்களுக்கு பெரிதும் உதவும். இது மீண்டும் அமெரிக்காவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும். இதனால் அமெரிக்கா - இந்தியா இடையேயான இந்த பேச்சுவார்த்தை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேவேளையில் டிரம்பிடம், மோடி பணிந்தாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. ஏனென்றால் நம் நாட்டின் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயில் 38 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து தான் வாங்குகிறோம். அதுமட்டுமின்றி ரஷ்யாவிற்கும், நமக்கும் நெருங்கிய நட்பு உள்ளது. இப்படியான சூழலில் தான் அமெரிக்காவிற்காக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைப்பது டிரம்பிடம், மோடி பணிந்தாரா? என்ற கேள்வியை உருவாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications