அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா உறுதி! வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்திக் கொண்டார்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
உலகெங்கும் ஓமிக்ரான் கொரோனா காரணமாகக் கடந்த ஆண்டு இறுதியில் மிகப் பெரிய அளவில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் தினசரி பாதிப்பு பெரியளவில் உயர்ந்தது.

இருப்பினும், நல்வாய்ப்பாக ஓமிக்ரான் கொரோனா டெல்டாவை போல இல்லாமல் லேசான கொரோனா பாதிப்பையே ஏற்படுத்தியது. இதனால் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த போதிலும் உயிரிழப்பு அதிகரிக்கவில்லை.
அதன் பின்னர் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இந்தச் சூழலில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு ஊரடங்கு குறித்த அச்சமும் எழுந்துள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 79 வயதாகும் பைடனுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதாகக் கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இரண்டு டோஸ் வேக்சின் மற்றும் இரு முறை பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டுள்ள அவர், இப்போது வெள்ளை மாளிகையில் தனிமையில் இருப்பதாகவும் அப்படியே அவர் தனது பணியைத் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அதிபர் ஜோ பைடன் ஃபைசரின் கொரோனா மாத்திரையான பாக்ஸ்லோவைட் எடுக்கத் தொடங்கி உள்ளதாகவும் வெள்ளை மாளிகை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் விரைவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய வேண்டும் எனப் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
