டிரம்ப் பகீர் பிளான்.. "அதிபர் தேர்தலில் தோற்றால்.." அமெரிக்காவில் உள்நாட்டு போரே வந்திடும் போலயே.!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்னும் சில வாரங்களில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தலில் தோல்வி அடைந்தால் தேர்தல் முடிவுகளை ஏற்காமல் குழப்பத்தை ஏற்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் மிகப் பெரியளவில் உள்நாட்டுக் குழப்பம் வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

டிரம்ப்: அதேநேரம் அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், டிரம்ப் தரப்பினரால் அமெரிக்காவில் மிகப் பெரிய வன்முறை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த முறை நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்த நிலையில், தேர்தல் முடிவுகளை ஏற்காமல் அதில் முறைகேடு நடந்ததாக அவர் குற்றஞ்சாட்டினார். தேர்தலில் முறைகேடு நடந்ததற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்ற போதிலும் அவர் தேர்தல் மோசடி எனக் குற்றஞ்சாட்டி வன்முறையைத் தூண்டிவிட்டார்.
இதனால் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் உயிரிழப்புகளும் கூட நடந்தது. அது அமெரிக்க ஜனநாயகத்தின் கருப்பு நாளாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த முறையும் டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்தால் வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. கடந்த முறை டிரம்ப் அதிபர் பதவியில் இருந்ததால் அவருக்கு சில கூடுதல் பவர் இருந்தது. ஆனால், இந்த முறை தேர்தலில் தோற்றால் அந்த பவர் இருக்காது என்பது சற்றே ஆறுதல்.
கடும் போட்டி: இருந்தாலும் இந்த முறை தேர்தல் பணியாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் உள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக கடும் போட்டி நிலவும் 6, 7 மாகாணங்களில் வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் என்ன செய்யலாம் என்பது குறித்து டிரம்பும் அவரது சகாக்களும் கடந்த சில மாதங்களாகவே திட்டம் ஒன்றை வடிவமைத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
அங்கு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆகும். வாக்குகள் கைகளால் எண்ணப்படுவதால் சில நேரம் நாள் கணக்கில் கூட தாமதம் ஆகும். அந்த தாமதத்தைப் பயன்படுத்திக் குழப்பத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ட்ரம்ப் தோற்றது போன்ற நிலை ஏற்பட்டால், வாக்கு எண்ணிக்கை தாமதத்தைச் சுட்டிக்காட்டி அதில் மோசடி நடந்ததாகக் குழப்பத்தை ஏற்படுத்த அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வேலையை ஆரம்பித்த டிரம்ப்: கடந்த சில காலமாகவே டிரம்ப்பின் செயல்பாடுகளைக் கவனித்து வருவோருக்கு இது தெளிவாகப் புரியும். தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் தேர்தல் பணியாளர்களை ஜெயிலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறி வருகிறார்.
சமீபத்தில் மிச்சிகனில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், "நான் தோற்றால் அவர்கள் செய்யும் மோசடியே அதற்கு ஒரே காரணமாக இருக்கும். நாம் இந்தத் தேர்தலில் நிச்சயம் வெல்வோம். நாம் இதில் தோற்கிறோம் என்றால் அதற்குத் தேர்தல் முறைகேடுகளே நிச்சயம் காரணமாக இருக்கும்" என்று பேசியிருந்தார். அதாவது தேர்தலில் வென்றால் அது நியாயமான தேர்தல்.. தோல்வி அடைந்தால் முறைகேடு நடந்துள்ளது என்று பிரச்சினை செய்ய வேண்டும் என்பதே இப்போது டிரம்பின் திட்டமாக இருக்கிறது.
வெடிக்கும் மோதல்: இதற்கான நடவடிக்கைகளை டிரம்ப் தரப்பு ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. கடும் போட்டி நிலவும் மாகாணங்களில் டிரம்ப் தரப்பினர் ஏகப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். மேலும், தேர்தலில் முறைகேடு செய்ய ஜனநாயக கட்சியினர் திட்டமிட்டு வருவதாகவும் டிரம்ப் தரப்பு கூறி வருகிறது. ஒருவேலைத் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தால் இந்த வழக்குகளையும் காரணமாகக் காட்டி பெரிய குழப்பத்தை ஏற்படுத்த டிரம்ப் தரப்பு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் உள்நாட்டுக் குழப்பம் கூட வெடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications