மீண்டும் இந்தியர்கள் நாடு கடத்தல்! பறக்கும் அமெரிக்க விமானங்கள்! லிஸ்டில் மொத்தம் 487 பேர்! பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக உள்ள இந்தியர்களை டிரம்ப் அரசு நாடுகடத்தி வருகிறது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுடன் முதலாவது விமானம் கடந்த பிப்ரவரி 5ம் தேதி அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பிய நிலையில், இரண்டாவது விமானம் இரு நாட்களில் இந்தியா திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் தொடர்ச்சியாகப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அங்குச் சட்டவிரோதமாக இருப்போரை நாடுகடத்தும் நடவடிக்கைகளில் அவர் இறங்கியுள்ளார்.

நாடு கடத்தல்:
அதன்படி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். கடந்த பிப்ரவரி 5ம் தேதி சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் கைவிலங்கிடப்பட்டு மிக மோசமான முறையில் நாடு கடத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது.
இதற்கிடையே அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் உடனான இரண்டாவது விமானம் வரும் சனிக்கிழமை அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி அமிர்தசரஸில் தரையிறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு மற்றொரு விமானமும் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அழைத்து வரும் எனத் தெரிகிறது. இது அமெரிக்கா மேற்கொள்ளும் மிகப் பெரிய நாடுகடத்தல் நடவடிக்கைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இரண்டாவது விமானம்:
இந்தத் தகவலை வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதி செய்துள்ளார். அமெரிக்காவில் இருந்த 487 இந்தியர்களை நாடுகடத்தும் உத்தரவு வந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் அங்கீகரிக்கப்படாத வழிகளில் அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றவர்கள் என்றும் மிஸ்ரி தெரிவித்தார். இந்தியர்கள் முறையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளதாகவும் இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளிடம் எழுப்ப உள்ளோம் என்றும் மிஸ்ரி தெரிவித்தார்.
மத்திய அமைச்சர்:
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ராஜ்யசபாவில் கூறுகையில், "அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடு கடத்தும் முறை பல ஆண்டுகளாக அமலில் இருக்கிறது. 2009 முதல் இதுபோல 15,668 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் அவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து அமெரிக்காவிடம் எழுப்பப்படும்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொந்தளிக்கும் பஞ்சாப் அரசு:
அதேநேரம் அமிர்தசரஸில் விமானத்தைத் தரையிறக்கும் முடிவும் உள்நாட்டில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அங்கு ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ள நிலையில், மாநில அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே மத்திய பாஜக அரசு அமிர்தசரஸில் விமானத்தைத் தரையிறக்க முடிவு செய்துள்ளதாகப் பஞ்சாப் நிதி அமைச்சர் ஹர்பால் சீமா சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நாடுகடத்தப்பட்ட இந்தியர்களை அமிர்தசரஸில் தரையிறங்க வைப்பதன் மூலம் மத்திய அரசு பஞ்சாபை அவமதிக்கிறது.. ஏன் ஹரியானா அல்லது குஜராத்தில் விமானத்தை தரையிறக்கவில்லை.? பஞ்சாபின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவே பாஜக அரசு இதுபோல செய்கிறது. இந்த விமானத்தை ஏன் அகமதாபாத்தில் தரையிறங்கக் கூடாது?" எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பி இருந்தார்.
அமெரிக்காவும் சட்டவிரோத குடியேற்றமும்:
அமெரிக்காவை பொறுத்தவரைச் சட்டவிரோத குடியேற்றம் என்பது பெரிய பிரச்சினையாகவே இருந்து வந்துள்ளது. அமெரிக்கா சென்றால் செட்டிலாகிவிடலாம் என நினைக்கும் பலர் மெக்சிகோ அல்லது கனடா வழியாக ஆபத்தான முறையில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயல்கிறார். அவர்கள் மிகவும் அடித்தட்டு வேலையைச் செய்தே வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
சட்ட விரோதமாகக் குடியேறியவர்களாலேயே அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்று டிரம்ப் திரும்பக் திரும்ப கூறி வருகிறார். ஆனால், சட்ட விரோதமாகக் குடியேறியவர்களை ஒரே நேரத்தில் நாடு கடத்தினால் அது அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்கலாம் என்றே வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications