"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா?
டெல்லி: டெல்லி சாலைகளில் ஓடும் ஆட்டோக்களுக்கு இப்போது ஒரு 'ஸ்பெஷல்' லுக் கிடைத்துள்ளது.! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் போட்டோ மற்றும் "ஹேப்பி பர்த்டே அமெரிக்கா" என்கிற வாசகங்களுடன் ஆட்டோக்கள் வலம் வரத் தொடங்கியுள்ளன. இது ஏதோ விளம்பரம் மட்டுமல்ல, இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்பின் அடுத்த கட்டம் என்கிறார்கள். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்பு நீண்ட காலமாகவே சிறப்பாகவே இருந்து வருகிறது. இடையில் சில காலம் வரி உள்ளிட்ட காரணங்களால் இரு நாட்டு உறவு பாதிக்கப்பட்ட போதிலும், இப்போது அவை மீண்டும் சீராகத் தொடங்கிவிட்டது. இதற்கிடையே அமெரிக்கா தனது 250வது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறது.

அமெரிக்கா 250
இதை முன்னிட்டு 'Freedom 250' என்கிற நிகழ்வின் ஒரு பகுதியாக, டெல்லியில் அமெரிக்கத் தூதரகம் இந்த ஆட்டோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் அடையாளமான ஆட்டோக்களில் அமெரிக்க அதிபரின் படம் இருப்பது, இரு நாட்டு மக்களிடையேயான நெருக்கத்தைக் குறிப்பதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது. விரைவில் டெல்லி முழுவதும் இந்த 'டிரம்ப் ஆட்டோக்கள்' வலம் வரத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா - இந்தியா உறவின் வலிமையையும் ஆற்றலையும் இந்த கொண்டாட்டங்கள் கவுரவிப்பதாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் கோர் தெரிவித்துள்ளார்.
ஆட்டோ
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "டெல்லியில் #Freedom250 கொண்டாட்டங்களைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சிறப்புமிக்க பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், அதிபர் மற்றும் அமெரிக்கச் சின்னங்களைக் கொண்ட வாகனங்கள் நகரம் முழுவதும் இயக்கப்படும். அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த தருணத்தில், அமெரிக்கா-இந்தியா உறவின் வலிமையையும், ஆற்றலையும் நாம் மதிக்கிறோம். #Freedom250 இந்தியா முழுவதும் பயணிக்கும், தொடர்ந்து இணைந்திருங்கள்" பதிவிட்டுள்ளார்.
ஃபிரீடம் 250 என்பது அமெரிக்க அரசின் ஓராண்டுக் கால முன்முயற்சியாகும். அமெரிக்காவில் வரும் ஜூலை 4ம் தேதி 250வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக அமெரிக்கா முழுவதும் மட்டுமின்றி, உலகளவில் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நல்லுறவு
இதற்கு நடுவே பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் தொலைப்பேசி வழியாகவும் உரையாடினார்கள். இருவருக்கும் இடையே நல்லுறவு உள்ள சூழலில் இரு தலைவர்களும் நீண்ட நேரம் பேசியுள்ளனர். மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் குறித்தும், உலகப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியின் (Strait of Hormuz) பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் இருவரும் ஆலோசித்துள்ளனர். "இந்த ஆண்டில் மட்டும் இருவரும் பலமுறை பேசியுள்ளனர்; பல உரையாடல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன" என அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த கேபினட் அமைச்சர்களையும் நான் சந்தித்துப் பேசிவிட்டு வந்திருக்கிறேன். அடுத்த சில வாரங்களில் இந்தியா - அமெரிக்கா உறவில் சில முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார். இது பாதுகாப்புத் துறை அல்லது வர்த்தகத் துறை தொடர்பான மெகா ஒப்பந்தமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை
அடுத்து மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ முதல்முறையாக இந்தியா வருகிறார். இந்தியாவில் அமைச்சர்கள் அளவிலான குவாட் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது தான் ராணுவம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் புதிய ஒப்பந்தங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு குறித்துக் கோர் மேலும் கூறுகையில், "இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான கூட்டாளி மட்டுமல்ல, ஒரு அற்புதமான பார்ட்னர். அதிபர் டிரம்ப்பிற்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான தனிப்பட்ட நட்பு, இந்த உறவை ஒரு புதிய உச்சத்துக்கே கொண்டு சென்றிருக்கிறது!" என்றார்.












Click it and Unblock the Notifications