விமான பயணிகள் 88 பேரை வலை வீசி தேடும் உலக சுகாதார அமைப்பு! பீதியை கிளப்பிய ஹன்டா வைரஸ்
வாஷிங்டன்: ஹண்டா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்த இருவர், இறப்பதற்கு முன்பாக பயணம் செய்த விமானத்தில் சென்ற 88 பேரை கண்டறியும் பணியில் உலக சுகாதார அமைப்பு ஈடுபட்டுள்ளது. சொகுசு கப்பலில் இருந்து வெளியேறிய நெதர்லாந்து பெண்ணும் அவரது கணவரும் செயிண்ட் ஹெலேனாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு விமானத்தில் பயணம் செய்தனர். பின்னர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.
அட்லாண்டிக் கடலில் சென்ற சொகுசு ஆடம்பர கப்பலான 'ஹோண்டியஸ்' (Hondius) என்ற சொகுசு கப்பலில் பயணித்தவர்களுக்கு ஆபத்தான ஹன்டாவைரஸ் (Hantavirus) எனும் கொடிய வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது. இது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபக்கம் இருக்க இந்த கப்பலில் பயணம் செய்த இருவர், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். முன்னதாக அவர்கள் இருவரும் விமானத்தில் சென்றுள்ளனர். 88 பேர் பயணம் செய்த அந்த விமானத்தில் யாரெல்லாம் பயணம் செய்தார்கள்.. அவர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என அச்சம் நிலவியுள்ளது.
இதையடுத்து உலக சுகாதார நிறுவனம் விமானத்தில் பயணித்த 88 பேரையும் வலை வீசி தேட தொடங்கியுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதாவது:- நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரும் அவரது கணவரும் சொகுசு கப்பலில் இருந்து இறங்கிய பிறகு, செயிண்ட் ஹெலனாவில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து சமீபத்தில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் விமானத்தில் பயணம் செய்தவர்கள் ஆகியோரை கண்டறியும் பணி தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஏர் லிங் விமானத்தில் அந்த இருவரும் பயணித்துள்ளனர். விமானத்தில் 82 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகள் என 88 பேர் பயணம் செய்துள்ளனர். தென் ஆப்பிரிக்க அரசிடமும் இது தொடர்பான தகவலை தெரிவித்து பயணம் செய்தவர்களை கண்டறியுமாறு கோரியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.
வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட எம்வி ஹண்டியஸ் கப்பலில் 88 பயணிகள், 59 சிப்பந்திகள் பயணித்துள்ளனர். 23 நாடுகளை சேர்ந்த பயணிகள் இதில் பயணம் செய்து இருப்பதால், சர்வதேச அளவில் சுகாதார கவலை ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பொதுவாக பாதிக்கப்பட்ட எலிகள் போன்ற கொறித்து தின்னும் விலங்குகளின் சிறுநீர், மலம் அல்லது உமிழ்நீருடன் தொடர்பு கொள்ளுவதன் மூலம் பரவுகிறது. ஆனால், ஹொண்டியஸ் கப்பலில் மிகவும் நெருக்கமான தொடர்பில் இருந்த சிலருக்கு அரிதான மனிதர் - மனிதர் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO)சந்தேகம் தெரிவித்துள்ளது.














Click it and Unblock the Notifications