செங்கடலில் வர்த்தகம் நடப்பது ஏன் முக்கியம்? ஹவுதிக்கு எதிராக அமெரிக்கா வரிந்து கட்டுவதன் பின்னணி
வாஷிங்டன்: அரேபிய தீபகற்பத்தில் இருக்கும் ஏமன் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதல் தற்போது வளைகுடா நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தாக்குதல் நடத்தியது ஏன்? என்ற கேள்வி எழலாம். அதுகுறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்..
ஆசிய கண்டமும் ஆப்பிரிக்க கண்டமும் இணைகிற இடமான செங்கடல் பகுதியில் தான் ஏமன் அமைந்துள்ளது. ஏமனின் அண்டை நாடுகளாக சவுதி அரேபியா, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய வளைகுடா நாடுகள் அமைந்துள்ளன. இவை அரேபிய தீபகற்ப நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆப்பிரிக்க கண்டத்தில் திபுத்தி, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த இருகண்டங்களுக்கும் இடையேதான் செங்கடல் அமைந்துள்ளது.

செங்கடலின் நீளம் 2,250 கி.மீட்டர், அகலம் 200 கி.மீட்டர் ஆகும். செங்கடலானது அரபிக் கடலுடன் இணையும் இடம் அதாவது ஏமனுக்கும் திபுத்திக்கும் இடையிலான பகுதியில் 20 கி.மீட்டர் அகலத்திற்கும் குறைவாக சுருங்குகிறது. அரபிக்கடலில் இருந்து செங்கடலுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும்.
27 முறை தாக்குதல்: இதனால், தினமும் 50-க்கும் மேற்பட்ட வணிக கப்பல்கள் இந்த பாதை வழியாகத்தான் ஐரோப்பா கண்டத்திற்கு செல்கின்றன. ஆண்டுக்கு சுமார் 17 ஆயிரம் பயணிகள் கப்பல் இந்த வழியாக பயணம் செய்கின்றன. ஏமனில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக உள்ளனர். ஈரானின் ஆதரவு செயல்படும் ஹவுதி அமைப்பு மிகவும் செல்வாக்கு மிக்க அமைப்பாக ஏமனில் செயல்பட்டு வருகிறது.
தற்போது ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக சண்டையை நிறுத்தும் நோக்கத்தில், செங்கடலில் பன்னாட்டு வர்த்தக கப்பல்கள் மீது ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். டிரோன்கள், ஏவுகணைகள் ஆகியவற்றின் மூலமும் தாக்குதல்கள் நடத்தினர். கடந்த நவம்பர் 19-ந் தேதியில் இருந்து இதுவரை சுமார் 27 தடவை தாக்குதல் நடத்தி உள்ளனர்.
10 இடங்களில் குண்டுகள்: கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கண்டிப்புடன் தெரிவித்தன. ஆனால், அவர்கள் கேட்கவில்லை. அவர்களுக்கு ஈரான் நாடு, ஆயுதங்களை வழங்கி வருவதாக தெரிகிறது. கடந்த வாரம், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை விடுத்தது. அதை கண்டுகொள்ளாத ஹவுதி அமைப்பினர், ஏமன் வளைகுடாவில் ஒரு சரக்கு கப்பல் மீது நேற்று முன்தினம் பாலிஸ்டிக் ஏவுகணையை வீசினர்.
இந்நிலையில், ஏமன் நாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து ராணுவங்கள் நேற்று அதிகாலையில் வான்வழி தாக்குதலை தொடங்கின. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தும் 10-க்கும் மேற்பட்ட தளங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. கடலோர ரேடார் மையங்கள், டிரோன், ஏவுகணைகள் ஆகியவற்றை சேமித்து வைக்கும் இடங்கள், ஏவுகணை செலுத்தும் தலங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இரண்டாவது நாளாக: அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ்.ட்விட் ஐஸ்நோவரில் இருந்து புறப்பட்ட போர் விமானங்களும், விமானப்படை போர் விமானங்களும் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டன. போர்க்கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. நீர்மூழ்கி கப்பலில் இருந்து 'டொமஹாக்' ஏவுகணைகளும் செலுத்தப்பட்டன.
இதனால், ஏமன் வளைகுடா பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதற்றமான சூழல் உள்ளது. ஹவுதி அமைப்பினருக்கும் சொந்தமான 60- க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு அண்டை நாடு சவுதியும் தனது அதிருப்தியை தெரிவித்தது. எனினும் இரண்டாவது நாளாக அமெரிக்காவின் ராயல் ஏர்போர்ஸ் மூலமாக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
சுற்றி செல்லும் நிலை: ஆசிய கண்டத்தில் இருந்து ஒரு கப்பல் ஐரோப்பா செல்வதற்கு முக்கிய கடல் வழித்தடமாக இருக்கும் செங்கடல் பகுதியில் போக்குவரத்து முடங்கினால் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பும் ஏற்படும். அதாவது, ஆசியாவில் இருந்து ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுக்ளுக்கு ஒரு வணிக கப்பல் செங்கடல் வழியாக செல்லாமல் மாற்று வழியில் செல்ல வேண்டும் என்றால் ஆப்பிரிக்க நாடுகளை சுற்றி பயணிக்க வேண்டும்.
இது பயண நேரத்தை அதிகரிக்கும். ஆனால், தற்போது ஏமன் கடல் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தாக்குதல் காரணமாக கப்பல்கள் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஜெர்மனியில் இயங்கி வரும் ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் உதிரி பாகங்கள் தட்டுப்பட்டால் மூடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு?: ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் போரால் உலக அளவில் பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் தற்போது ஏமன் மீது நடத்தப்படும் தாக்குதலால் கச்சா எண்ணெய் உள்ளிட்டவை விலை உயர்வு இருக்கலாம் என்றும் சர்வதேச நிபுணர்கள் கருத்தாக உள்ளது.
ஏமன் மீதான தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இருந்தாலும் 2-வது நாளாக ஹவுதி நிலைகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இது தொடருமேயேனால் அடுத்து வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்பட பல்வேறு பொருட்களின் விலை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications