"உனக்கு அதிகாரமே இல்லை.." டிரம்பின் பவரை பிடுங்கிய அமெரிக்க நீதிமன்றம்! அடுத்து என்ன நடக்கும்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகளை முழுமையாக நீக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. நீதிமன்றம் ஏன் இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்தது. இதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன? இதன் பிறகு அமெரிக்காவில் என்ன நடக்கும்? சர்வதேச வர்த்தகம் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டிரம்ப் கடந்தாண்டு இந்தியா உட்பட உலக நாடுகள் மீது இறக்குமதி வரிகளை விதித்திருந்தார். இருப்பினும், இந்த வரி விதிக்கும் உரிமை டிரம்ப்பிற்கு இல்லை எனக் கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து டிரம்ப் தரப்பு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதிலும் டிரம்ப்பிற்கு அதிகாரம் இல்லை என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் சில விஷயங்களை நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.

வரி விதிக்கும் அதிகாரம்
அதாவது அமெரிக்க அரசியலமைப்பின் கீழ் வரி விதிக்கும் அதிகாரம் முழுவதும் நாடாளுமன்றத்திற்கே உரியது என்பதை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 1, பகுதி 8 ஆகியவை இறக்குமதி மற்றும் கலால் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு வரிகளையும் விதிக்கும் மற்றும் வசூலிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகிறது. இதை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக நீதிபதி ராபர்ட் கூறுகையில், "இந்த வரி விதிப்பு அதிகாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தே அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் இப்படி உருவாக்கியுள்ளனர். மிகத் தெளிவாக இறக்குமதி வரிகளை விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு" என்பதைச் சொல்லியுள்ளனர்.
அதிகாரம் கோர முடியாது
மேலும், தெளிவற்ற முறையில் நாடாளுமன்றத்திடம் இருந்து இத்தகைய அதிகாரத்தைக் கோர முடியாது. அமெரிக்காவின் $4 டிரில்லியன் பற்றாக்குறையைக் குறைப்பதாகக் கூறி அதிபர் நாடாளுமன்றத்திடம் இருந்து வரி விதிக்கும் அதிகாரத்தைக் கோரினார். இறக்குமதியை ஒழுங்குபடுத்துகிறேன் என பொதுவாகச் சொல்லி, நாடாளுமன்றத்திடம் இருந்து இந்த உரிமையை வாங்க முடியாது என நீதிமன்றம் சந்தேகம் தெரிவித்தது. அதாவது மிகத் தெளிவாக வரி விதிக்கும் உரிமை அதிபருக்குச் செல்கிறது எனச் சொல்லி, நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். அதை அதிபர் செய்யவில்லை!
இந்த இரு பாயிண்டுகளும் சொல்வது ஒன்றைத் தான். அதாவது அமெரிக்காவில் இறக்குமதி வரி விதிப்பு அதிகாரம் அதிபரிடம் இல்லை. நாடாளுமன்றத்திடமே இருக்கிறது. எனவே, குறிப்பிட்ட நாட்டின் மீது வரி விதிக்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம். அதாவது டிரம்ப்பிடம் அதிகாரம் இல்லை.. அதிகாரத்தை நாடாளுமன்றத்திடம் இருந்தும் அவர் பெறத் தவறிவிட்டார் என்பதையே இது காட்டுகிறது.
வரி விதிக்க முடியாது
அடுத்து அவசரக்காலப் பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA). இந்த சட்டத்தின் கீழ் தான் டிரம்ப் வரிகளை அறிவித்தார். இதன் கீழ் அதிபரின் பல்வேறு அதிகாரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், எந்தவொரு இடத்திலும் இறக்குமதி வரியை அதிபர் விதிக்கலாம் என்று குறிப்பிடப்படவில்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இறக்குமதி வரிகள், அல்லது இறக்குமதி கட்டுப்பாடுகள் ஆகியவை அவசரக்கால நடவடிக்கைகளில் இருந்து வேறுபடுகின்றன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இவை உள்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இறக்குமதி வரி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகளை எமர்ஜென்சி நடவடிக்கை எனச் சொல்ல முடியாது என்பதையும் நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியது.
அதிக பவர்
வரி விதிக்க டிரம்ப் நிர்வாகம் அளித்த விளக்கத்தைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இந்த விளக்கத்தை அப்படியே எடுத்துக் கொண்டால் அது அதிபருக்கு மிக அதிக பவரை கொடுக்கும் எனக் குறிப்பிட்டது. நீதிபதிகள் மேலும், "இந்த விளக்கத்தின் கீழ் ஒரு அதிபரால் எந்த நாட்டிலிருந்தும் எந்தப் பொருளின் மீதும் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் காலவரையை இல்லாமல் விதிக்க முடியும். இத்தகைய அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றம் அதிபருக்கு வழங்கவில்லை" என்று குறிப்பிட்டனர்.
அடுத்து என்ன?
இந்த தீர்ப்பு தடையற்ற வர்த்தகத்திற்குச் சாதகமான ஒரு தீர்ப்பு தான். இதன் மூலம் வர்த்தகம் தடை இல்லாமல் தொடரும். அதேநேரம் IEEPA சட்டத்தின் கீழ் மட்டுமே வரி விதிக்க முடியாது. வேறு சட்டங்களைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட நாட்களுக்கு வரி விதிக்கலாம். அதை தான் டிரம்ப் இப்போது செய்துள்ளார். இப்போது டிரம்ப் அதைத் தான் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications