492 தமிழ் அகதிகளை கனடாவுக்கு கடத்தி வந்த வழக்கு: மேலும் ஒருவருக்கு வலை!
டோரண்டோ: 492 தமிழ் அகதிகளை இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடாவிற்கு கப்பலில் கடத்தி சென்றது தொடர்பாக குற்றசாட்டப்பட்ட 5வது குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை கனடா போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி எம்.வி.சன்.சி.கப்பல் மூலம் இலங்கையில் இருந்து 492 தமிழ் அகதிகள் சட்டவிரோதமான முறையில் கனடாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்காக கப்பலில் பயணித்தவர்களிடம் ஆயிரக்கணக்கான டாலர் பணம் வசூலிக்கப்பட்டது.
பிரிட்டீஸ் கொலம்பியா வழியாக கனடாவை சென்றடைந்த எம்.வி.சன்.சி.கப்பலில் தமிழ் அகதிகளை கடத்தியதாக 6 பேர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. கப்பலில் பயணித்தவர்களில் பலரும் தீவிரவாதம் மற்றும் மனித கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்று உளவுத்துறையின் எச்சரித்தனர். இது குறித்த விசாரணைக்கு பிறகு சிலர் மட்டும் அகதிகளாக கனடாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அகதிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் வெளிநாட்டில் குடியேறுதல் சட்டத்தின் கீழ் 6 பேர் மீது குற்றச்சாட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தாய்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நார்வே நாடுகளும் விசாரணைக்கு உதவி வருகிறது.
இந்த நிலையில் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய தம்பீரநாயகம் ராஜரத்னம், குணராபின்சன் கிறிஸ்துராஜ், லிஸி ஜன இம்மானுவேல் தயாகரன் மார்க்கண்டு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கடத்தல் திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட தயாகரனுக்கு 320 டாலர் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. மற்ற 3 பேரிடம் விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது நடராஜா மகேந்திரன் என்ற முக்கிய குற்றவாளி டோரண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் இருந்து வெளியே வந்த போது, கைது செய்யப்பட்டார். இந்த தகவலை கனடா மவுன்டன்ட் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இவரை போலீசார் டோரண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பிறகு காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பாக சத்தியபாவன் ஆசீர்வாதம் என்ற முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். இவர் தற்போது கனடாவில் இருக்க வாய்ப்பில்லை என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications