அச்சன்கோவில் ஆராட்டு விழா... ஐயப்பன் திருவாபரண பெட்டி ஊர்வலம்.. தென்காசியில் பக்தர்கள் தரிசனம்
தென்காசி: அச்சன்கோவிலில் நடைபெறும் ஆராட்டு மஹோற்சவ திருவிழாவை ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி தென்காசி வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
தமிழகத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை போன்று ஐயப்பனுக்கு கேரளாவில் ஐந்து படை வீடுகள் உள்ளன. இவற்றில் ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, பந்தளம் ஆகியவை சபரிமலைக்கு அடுத்தபடியாக புகழ் பெற்றவையாகும். இதில் ஆரியங்காவு, அச்சன்கோவில் தமிழகத்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளன.

ஆண்டுதோறும் அச்சன்கோவிலில் மார்கழி மாதம் ஆராட்டு மஹோற்சவ திருவிழா தொடங்குவது வழக்கம். மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அச்சன்கோவில் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக தங்ககிரீடம், முகம், மார்பு, கைகள், கால்கள், உடல் கவசம் மற்றும் வாள் உள்ளிட்ட ஆபரணங்கள் புனலூர் அரசு கருவூலத்திலிருந்து திருவிழா தொடங்குவதற்கு முதல் நாள் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்படும்.
வைரம் மற்றும் விலை உயர்ந்த முத்துக்களால் செய்யப்பட்டுள்ள இந்த ஆபரணங்கள் கொண்டு வரப்படும் வழியில் செங்கோட்டை, தென்காசி ஆகிய இடங்களில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.
இந்த ஆண்டு ஆராட்டு மஹோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருவாபரண பெட்டி தென்காசிக்கு நாளை கொண்டு செல்லப்படுகிறது. தென்காசி காசி விசுவநாதர் கோயில் முன்பு ஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகிறது.
நாளை 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அச்சன்கோவில் ஆராட்டு மஹோத்சவ திருவிழா காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 2,3,4,5 ம் நாள் திருவிழாக்களில் உற்சவபலி பூஜை. 7,8ம் நாள் திருவிழாக்களில் கருப்பன் துள்ளல் நடைபெறும்.
9ஆம் திருவிழா அன்று தேரோட்டம். 10 ஆம் திருவிழா அன்று சுவாமிக்கு ஆராட்டு திருவிழா நடைபெறுகிறது. 27ஆம் தேதி மண்டல பூஜை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷேசத்துடன் 12 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications
