Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி.. சித்ரகுப்தரை வணங்கி தானம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சித்ரா பவுர்ணமி நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மேலும் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். சித்ரகுப்தரை விரதமிருந்து வணங்கினால் பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் சேரும். ஆத்ம பலமும் ஆயுள் பலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

சித்திரை மாதப் பவுர்ணமி சித்ரகுப்தருக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. அன்று தான் அவரது அவதார தினம். மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை மிகத் துல்லியமாக எழுதும் பணியை வெகு சிறப்பாகச் செய்து வருபவர் சித்ரகுப்தர். அவர் அவதரித்த நாள் என்பதால் சிறப்பு வாய்ந்த நாளாக போற்றப்படுகிறது.

Chitra Poornami Viratham: If you worship Chitragupta and donate, you will increase your life

ஜோதிட ரீதியாக சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்று நேர்எதிரில் சந்திரனின் சம உச்சவீடான துலாத்தில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பவுர்ணமி திதியே,சித்ரா பவுர்ணமி ஆகும். ஆத்மகாரகனும், மனோகாரகனும் 180 பாகையில் சந்திக்கும் நாள்.

தாய் கிரகமான சந்திரன், தந்தை கிரகமான சூரியனிடம் இருந்து வெப்ப ஒளியைப்பெற்று, பூமிக்கு குளிர்ந்த ஒளியைக் கொடுக்கும் சூரியன் அதிக ஒளிதரும் உச்ச நிலையான சித்திரை மாதத்தில் சந்திரன் அதிக சக்தி மிக்க அந்த ஒளியைப் பெற்று பூமிக்கு தருவதால் அன்று மிகப் பிரகாசமாகவும்,களங்கம் இல்லாமலும் மிக அதிகசக்திமிக்கதுமாக ஒளிர்கிறது. சந்திரன் அந்த சக்திமிக்க ஒளியை சித்ரா பவுர்ணமி அன்றுதான் கொடுக்கிறது. அறிவியல் ரீதியாக மனிதர்களின் ஆரோக்கியம் கூடுகிறது. சந்திரன் மனதுக்காரகன் ஆதலால் மனபலம் கூடுகிறது.

இந்திரன் பாவ விமோசனம் வேண்டி அனைத்து சிவஸ்தலங்களையும் சென்று வணங்கி வரும் நிலையில், மதுரை சொக்கநாரைத் தரிசித்து பாவ விமோசனம் பெற்ற புண்ணிய நாள் சித்ரா பவுர்ணமி நாளில்தான். மதுரை வைகைக்கரையில் கள்ளழகர் எழுந்தருளியநாள் சித்ரா பவுர்ணமி எனவும் புராணங்கள் கூறுகின்றன.

Chitra Poornami Viratham: If you worship Chitragupta and donate, you will increase your life

சித்ரா பவுர்ணமி நாளில் பாவ புண்ணியக்கணக்கு எழுதும் சித்ரகுப்தர் வழிபாடு மூலம், மனோசக்தி கூடி பலம் பெறும் அந்த நாளில் மனதை செம்மைபடுத்துகிறார் சித்ரகுப்தர். நிலவு ஒளியில் குடும்பம், உறவுகள் இணைந்து உண்டு மகிழ்வதால் மனமகிழ்வும் ஆரோக்கியமும் ஆத்ம பலமும் கூடுகிறது.

நவக்கிரக கேதுவின் தேவதை 'சித்ரகுப்தர் எனவே கேதுவின் தோஷங்கள், தடைகள் குழப்பங்கள் தீரும் கடன் பிரச்சினைகள் சத்ரு துன்பங்கள் நீங்கி சிவவழிபாடு, கிரிவலம், நவக்கிரகதோஷங்கள்,பாவ விமோஷனம் நீங்குகிறது. புத்திரபாக்கியம் ஏற்படுகிறது திருமணத்தடைகள் நீங்கி திருமணம் நடப்பது, தொழில் தடைகள் நீங்கி தொழில் மேன்மை கிடைக்கிறது. சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் அம்மன் வழிபாட்டால் செவ்வாய் தோஷம் நீக்குகிறது.

இந்த வருடம் சித்ரா பவுர்ணமி மே மாதம் 5ஆம் தேதி வருகிறது. அன்று சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால் பூஜித்து வணங்கலாம். பானகம், நீர் மோர் போன்றவற்றை நிவேதனமாகப் படைத்து தர்மம் செய்யலாம். சித்ரா பவுர்ணமி நாளில் சித்ர குப்தர் அவதாரம் நிகழ்ந்தது ஏன் என்று தெரிந்து கொள்வோம்.

அஷ்டதிக்கு பாலகர்களும் ஒருநாள் கைலாயத்திற்குச் சென்று ஈசனையும் உமையம்மையையும் வணங்கினார்கள். அனைவரது முகமும் மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது. ஆனால் எமதர்ம ராஜாவின் முகம் மட்டும் சற்றே வாட்டமாக இருந்தது. காரணம் கேட்டார் சிவபெருமான்.

அதற்கு எமனோ, இறைவா பூமியில் மக்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் நானோ ஒருவன் அனைவரது பிறப்பு இறப்பு கணக்குகளையும் அவர்களது பாவ புண்ணிய கணக்குகளையும் என் ஒருவனால் சமாளிக்க முடியவில்லை. எனக்குத் துணையாக கணக்கு வழக்குகளை மிகக் கவனமாகப் பாதுகாத்து எழுதி வைக்கும் நம்பிக்கையான உதவியாளன் ஒருவன் கிடைத்தால் என் பாரம் குறையும் என்று வேண்டுகோள் வைத்தான்.

சிவனும், உன் கோரிக்கை நியாயமானது தான். உரிய நேரம் வரும் போது உனக்கு சரியான உதவியாளன் கிடைப்பான்! என்று கூறினார். அதைக் கேட்ட எமன் தன் உலகம் சென்றான். பிரம்ம தேவர் குழம்பிப் போனார். ஏனெனில், உதவியாளனைப் படைக்கும் பொறுப்பை அவரிடம் விட்டு விட்டார் ஈசன்.

பிரம்மா ரொம்ப யோசித்தார், சூரியன் ஒருவனால்தான் இத்தகைய ஒருவனைப் பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார். பிரம்ம தேவர் சூரியன் மனதில் ஆசையைத் தோற்றுவித்தார். அதனால் அவன் மனதில் காதல் உண்டானது. வானவில்லை அழகான பெண்ணாக மாற்றி, நீளாதேவி என்று பெயரிட்டு, அவளைத் திருமணம் செய்துகொண்டார் சூரிய பகவான் அவர்களுக்கு சித்திரா பவுர்ணமியன்று பிறந்தவர் தான் சித்ரகுப்தர்.

இன்னொரு புராண வரலாற்றின்படி, கைலாயத்தில் அழகான தங்கத் தகட்டில் சித்திரம் ஒன்றை வரைந்தாள், பார்வதி, சிவபெருமான், அதற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்திலிருந்து தோன்றியதால் சித்ரகுப்தர் எனப்பட்டார். சித்திர புத்திரன் எனவும் சித்ரகுப்தரை சொல்வார்கள்.

சித்ரகுப்தருக்கு உரிய வயது வந்தவுடன் கல்வி கற்பித்தார் சூரிய பகவான். கல்வி, கணிதம், இலக்கணம் என அனைத்திலும் சிறந்து விளங்கினார். அவர். தந்தையின் யோசனைப்படி ஈசனை நோக்கி தவமிருந்தார். சிவபெருமான் அவரது தவத்திற்கு மெச்சி அவர் முன்னால் தோன்றினார். இனி நீ நினைத்தது அனைத்தும் நடக்கும் என்று வரமளித்தார்.

அதை சோதித்துப் பார்க்க படைப்பு தொழிலில் இறங்கினார் சித்ரகுப்தர். கவலைக்கு உள்ளன பிரம்மா, சூரியனை அழைத்து விஷயத்தைக் கூறினார். உடனே சூரியன், மகனை அழைத்தார். மகனே! படைப்புத் தொழில் பிரம்மனுக்கு உரியது என்று மகேஸ்வரனால் முன்பே ஏற்படுத்தப் பட்டுவிட்டது. அதனால் அதில் நீ தலையிடக் கூடாது என்று சொன்னார்.

நீ பிறந்ததே எமதர்மனின் உதவியாளனாக இருந்து, மக்களின் பாவ புண்ணியக் கணக்குகளை கவனித்துக் கொள்ளத்தான். எனவே நீ அங்கு சென்று உயிர்களின் கணக்குகளை எமனுக்கு எடுத்துக் கூறு! அவர் அதற்குத் தகுந்தபடி தண்டனை அளிப்பார். என்று சொல்லி ஆசிர்வதித்தார். அதோடு என்றும் தீரவே தீராத கணக்கு எழுதும் புத்தகத்தையும் அளித்தார்.

அதைச் ஏற்றுக்கொண்ட சித்ரகுப்தர். எமலோகம் சென்று விவரங்களைக் கூறினார். தன் நம்பிக்கைக்குரிய உதவியாளன் கிடைத்து விட்டான் என்று உடனே சம்மதித்தார் எமதர்ம ராஜன். சிவனுக்கு நன்றி தெரிவித்தார். அன்று முதல் இன்று வரை மக்களின் மனதில் ஒளிந்திருக்கும் எண்ணங்களையும் அவர்கள் செய்யும் நல்வினை, தீவினைகளையும் சாரணர்கள் என்ற ஒற்றர்களின் உதவியால் கண்டறிந்து எழுதி வருகிறார் அவர். அனைத்தையும் மிக மிக ரகசியமாகப் பாதுகாப்பதால் சித்ரகுப்தர் என்ற பெயர் ஏற்பட்டது. குப்தர் என்றால் ரகசியம் காப்பவர் என்று பொருள்.

இவர் வலக்காலை ஊன்றி இடக்காலை மடித்து சுகாசன நிலையில் வீற்றிருப்பார். வலது கையில் எழுத்தாணியும் இடக்கையில் சுவடியும் இருக்கும் மயன் மகள் பிரபாவதி மனுவின் மகள் நீலாவதி, விஸ்வ கர்மாவின் மகள் கர்ணிகி ஆகியோர் இவரது மனைவியர் அக்கிர சந்தானி என்பது இவரது கணக்குப் புத்தகத்தின் பெயர்.

சித்ரா பவுர்ணமி நாளில் சந்திரனின் கரகத்துவமான தனம், உடல், மனம் மேன்மையடைகிறது. அன்னை தினம் தாய்க்கிரகம் சந்திரன் அதிபலம் பெறும் இந்த நாள் பெண்கள் தாயையும் தாய் வம்சத்திற்கு செய்ய வேண்டிய ஆகம கடமைகளையும் செய்ய வேண்டிய நாள். மாங்கல்ய பலம் பெறும் நாள். இன்றைய தினம் சித்ரகுப்தரை வழிபட்டால் மனோபலமும் ஆயுள் பலமும் கைகூடி வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+