தன திரயோதசி நாளில் அவதரித்த தன்வந்திரி பகவான்..நோய் நீக்கும் மந்திரத்தை வீட்டிலிருந்து உச்சரியுங்கள்
சென்னை: மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி தன்வந்திரி ஜெயந்தி நாளாகும். அன்று உலக ஆயுர்வேத தினமாகவும் இது கொண்டாடப்படுகிறது. நோய் நீக்கும் மந்திரத்தை தன்வந்திரி ஜெயந்தி நாளில் நாம் உச்சரித்தால் ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
தன்வந்திரி அவதாரம்: தேவர்களும் அசுரப் படைகளும் பாற்கடலைக் கடைந்தபோது ஒரு கையில் அமிர்தகலசம் மற்றொரு கையில் மருத்துவ சாஸ்திரம் மற்றும் அதன் வழிமுறைகளோடு கூடிய ஓலைச் சுவடிகளோடு தன்வந்திரி வெளிவந்தார். பாற்கடலில் அவதரித்த தன்வந்திரி பகவான் ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை இந்த அவதாரம் சுட்டிக்காட்டுகிறது.

மருத்துவ கடவுள்: ஆயுர்வேத சாஸ்திர முறைகளை உலகுக்கு உபதேசிக்க வந்த இவரை உலக மருத்துவர்கள் மானசீகக் குருவாகவும் கடவுளாகவும் ஏற்று வணங்கி வரும்போது தான் சார்ந்த மருத்துவ துறைகளில் உயர்நிலை பெறலாம் என்பது ஒரு நம்பிக்கை. இதற்காக ஆயுள் ஸ்திர தந்திரம் என்கிற வழிபாட்டு விதிகளே தன்வந்திரி பகவானைப் பற்றி இருக்கிறது.
பானை கரண்டி: நோய் தீர்க்கும் கடவுளாக, மாமருத்துவராக நம்மால் வணங்கப்படுபவர் ஸ்ரீதன்வந்திரி பகவான். இந்த உலகின் ஆதி மருத்துவக் கடவுளாக ஸ்ரீதன்வந்திரி பகவானைப் போற்றிப் புகழ்கின்றன புராணங்கள். பாற்கடலில் இருந்து அவதரிக்கும்போது அமிர்த கலசத்தோடு வந்தவர் தன்வந்திரி பகவான். அதன் பின் அந்த அமிர்தம் ஒரு அகப்பையால் தேவர்கள் அனைவரும் விநியோகம் செய்யப்பட்டது. எனவே தீபாவளியின்போது கரண்டி, கலசம் போன்ற சில பாத்திரங்களை வாங்குவது வட இந்தியர்களின் வழக்கம். நம் ஊரிலும் தனத்திரயோதசி நாளில் பானை, கரண்டி போன்றவைகளை வாங்கலாம்.
தீபாவளி மருந்து: தீபாவளிக்கு முந்தைய திரயோதசி தினத்தில் ஸ்ரீதன்வந்திரி பகவான் விக்கிரகத்துக்கு அன்றைய தினத்தில் விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். தீபாவளி தினத்தன்று தன்வந்திரி பகவானை தரிசித்து அவரது ஆசிகளைப் பெற வேண்டும். தீபாவளி தினத்தில் எப்படி எண்ணெயில் லட்சுமி, சீயக்காயில் சரஸ்வதி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கவுரி, மலர்களில் மோகினி, தண்ணீரில் கங்கை, இனிப்பு பலகாரத்தில் அமிர்தம், புத்தாடையில் மகாவிஷ்ணு ஆகியோர் உறைவதாகச் சொல்கிறோமோ, அதுபோல் தீபாவளி மருந்தில் தன்வந்திரி பகவான் உறைகிறார்.
நோய் நீக்கும் மருந்து: தீபாவளி மருந்து உட்கொள்ளும்போது ஸ்ரீதன்வந்திரி பகவானை மனப்பூர்வமாகப் பிரார்த்திக்க வேண்டும். எந்த ஒரு தீராத நோய்க்கும், உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் தன்வந்திரி பகவானை வழிபட்டு, அவரது பிரசாதத்தைப் பெற்று உண்டால், நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடு. தன்வந்திரியின் மந்திரத்தை ஜபம் செய்வதால் தைரியம் ஏற்பட்டு பாபம், வியாதி, விஷம், கிரக தோஷங்கள் இவை அனைத்தும் நீங்குகின்றன.
விரதம் முறை: அதிகாலையில் எழுந்து மஞ்சள்தூள், துளசி இட்ட நீரில் குளித்துவிட்டு அன்று முழுவதும் விரதம் இருந்து தன்வந்திரி வரலாறு அவரை பற்றிய துதிகளை படிக்க வேண்டும். மாலைப் பொழுது சாயும் முன் நீர்நிலை தீர்த்தக் கட்டங்களுக்குச் சென்று தீபம் ஏற்றிவிட்டு தன்வந்திரியையும் யம தர்மராஜனையும் வழிபடுவார்கள். விளைநிலத்தில் சிறிது உழுத பிறகு மண் எடுத்துப் பசும்பாலில் கலந்து இலவம் பஞ்சு மரக் குச்சியைக் கொண்டு மறுபடியும் கலக்கித் தங்கள் உடல்மேல் தெளித்துக்கொள்வார்கள். இந்த விரத நாளன்று வஸ்திர தானம் செய்தாலும் யமனை குறித்து துதிக்கப்படுகிற யமாஷ்டக துதி படிப்பதாலும் மரணங்கள் துர்மரணங்களில் இருந்து மீண்டு தீர்க்கமான ஆயுளை பெற முடியும் என நம்பப்படுகிறது.
வைத்தியராக தரிசனம் தரும் தன்வந்திரி: வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீதன்வந்திரி பகவான் சுமார் ஏழடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். இந்த பகவானின் திருமார்பில் வலப்பக்கம் தங்கத்தால் ஆன ஸ்ரீலட்சுமிதேவியின் ரூபம் இருக்கிறது. சற்றுக் கீழே ஸ்ரீகஜலட்சுமி தேவி காட்சி தருகிறாள். வலது மேல் கரத்தில் சக்கரம், வலது கீழ்க் கரத்தில் அமிர்த கலசம், இடது மேல் கரத்தில் சங்கு, இடது கீழ்க் கையில் சீந்தல் கொடி. வலது தொடையில் வெள்ளியால் ஆன அட்டைப் பூச்சி. வெள்ளியால் ஆன ஸ்டெதாஸ்கோப்பும் கைக்கடிகாரமும் வைத்து கத்தியும் இடுப்பில் பெல்ட்டுமாக, தலைமை அலோபதி வைத்தியராகத் தரிசனம் தருகிறார் இந்த தன்வந்திரி பகவான். இவர் பிரதிஷ்டை ஆகி இருக்கும் பீடத்தில் தன்வந்திரி மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் தன்வந்திரி: தீபாவளி தினத்தில் இந்த தன்வந்திரி பகவானுக்கு டாக்டர் கோட் அணிவித்து, 'டாக்டர் தன்வந்திரி' என்று பொறிக்கப்பட்ட பேட்ஜையும் அணிந்து ஸ்பெஷலாகத் தரிசனம் தருவார். அன்றைய தினம் திரளான பக்தர்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வருகிறார்கள். தன்வந்திரியின் மகா மந்திரங்களைச் சொல்லி வணங்குகிறார்கள். நெய், மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம் இவை கலந்து லேகியமாக தயாரித்து தன்வந்திரி பகவானுக்கு நிவேதிக்கப்பட்ட விசேஷ மருந்து, தீபாவளியன்று ஆலயத்துக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாகத் தரப்படுகிறது. இதை நீர், தேன், பாலில் கலந்து உட்கொண்டால் சரீரம் பலம் பெறும். பித்தம், வாதம், சிலேத்துமம் போன்ற முத்தோஷங்களைப் போக்கும் கண்கண்ட மருந்தாகும்.
நோய் நீக்கும் மந்திரம்: ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமிகள் அவர்களின் ஆசியுடனும், அருளுடனும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம் வாலாஜாபேட்டை நவம்பர் 10 வெள்ளிக்கிழமை, ஐப்பசி ஹஸ்தம், திரயோதசி திதியில் தன்வந்திரி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதனை கொண்டாடும் விதமாக உலகளாவிய தன்வந்திரி மூல மந்திரம் உச்சரிப்பில் பங்கேற்க உலகெங்கிலும் உள்ள அனைத்து பக்தர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
*ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்தராயே அம்ருதகலச
ஹஸ்தாய சர்வமாய வினாஷனாய த்ரைலோக்ய
நாதாய ஶ்ரீமஹா விஷ்ணுவே நமஹ*
வீடுகளில் இருந்து மந்திரம் உச்சரிக்கலாம்: அனைத்து நோய்களையும், துன்பங்களையும் குணப்படுத்தவும், உங்கள் வீட்டிலிருந்து உலகெங்கிலும் உள்ள சுய மற்றும் லோகாஷேமத்திற்காக நல்ல மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பெறவும், உலகளாவிய மூல தன்வந்திரி மந்திரம் பாராயணம் செய்வதற்கு, இந்த புனிதமான சந்தர்ப்பத்தில் பல கோடி மந்திரங்களை உச்சரிப்பதற்கு இலக்காக கொள்வதற்கும் நமக்கு அதிகமான பக்தர்கள் தேவை. உங்கள் வீட்டிலிருந்து தன்வந்திரி பகவானுக்கு மந்திரம் பாராயணம் செய்யுங்கள். இச்செய்தியை முடிந்தவரை பல்வேறு குழுக்களுக்கும் பக்தர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். உங்கள் அனைவரின் பங்கேற்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
தொடர்பு எண் 9443330203












Click it and Unblock the Notifications