மதுரை சித்திரை திருவிழா கொடியேறப்போகுது..மீனாட்சி திருக்கல்யாணம் எப்போ? என்னென்ன விஷேசம்?
மதுரை: மல்லிகை மணக்கும் மதுரை மாநகரத்தில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. மீனாட்சி அம்மனின் அரசாங்கம் ஆரம்பமாகப்போகிறது. பட்டாபிஷேகமும், திருக்கல்யாணமும் தேரோட்டமும் களைகட்டப்போகிறது மதுரையில். கள்ளழகரும் வரப்போவதால் வேரை வரவேற்க தயாராகி வருகின்றனர் மதுரை மக்கள். எந்த நாளில் என்ன விஷேசம் நடைபெறும் என்ற முழு விபரத்தையும் பார்க்கலாம்.
தூங்கா நகரம், நான்மாடக்கூடல் என பல சிறப்புகளை பெற்றது மதுரை மாநகரம். பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நகரம். சிவனும், பார்வதியும் மீனாட்சி சொக்கநாதராக இங்கு வந்து அரசாட்சி செய்யும் நகரம் என்பதால் தெய்வீக புகழ் பெற்றது. சிவபெருமானின் பல திருவிளையாடல்கள் அரங்கேறிய நகரமும் மதுரைதான்.

வைகை ஆற்றங்கரை நாகரீகம் கொண்ட மதுரையை தலைநகரமாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆண்டுள்ளனர். கண்ணை இமை காப்பது போல மக்களை காத்து வருகிறாள் அன்னை மீனாட்சி. மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு ஆண்டுதோறும் திருவிழாதான் அதிலும் சித்திரை மாதத்தில் நடைபெறும் 12 நாட்கள் திருவிழா சிறப்பு வாய்ந்தது.
மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா நாளை கொண்டியேற்றத்துடன் மதுரை மாநகரே விழாக்கோலம் காணப்போகிறது. கோவிலின் 4 கோபுரங்களும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது.
நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 10 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர்-மீனாட்சி ஆகியோர் சுவாமி சன்னதியின் முன்உள்ள கொடிமரம் முன்பு எழுந்தருள்வர்.காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
விழா நடக்கும் நாட்களில் தினமும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் கற்பகவிருட்சம், பூதம், வெள்ளி சிம்மாசனம், தங்க சப்பரம், ரிஷபம், மரவர்ண சப்பரம், இந்திர விமானம் உள்ளிட்ட வாகனங்களில் 4 மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். மதுரை மாநகரம் எங்கும் மல்லிகை மணக்கும்.
ஏப்ரல் 30ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். மதுரையின் பட்டத்து அரசியாக வைர கிரீடம் சூடி கைகளில் செங்கோல் ஏந்தி மீனாட்சி அம்மன் அருள்பாலிக்கும் அழகை காண கண்கோடி வேண்டும். அரசியாக முடி சூட்டிய அம்மன் மறுநாள் திக் விஜயம் வருவார். மே 1ஆம் திக் விஜயம் வருவதை காண பக்தர்கள் கூட்டம் மாசி வீதிகளில் அலை மோதும்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 2ஆம் தேதி நடக்கிறது. மதுரையின் அரசியாம் மீனாட்சிக்கு திருமணம் என்றால் சாதாரணமாக இருக்குமா? பிரம்மாண்டமாக இருக்கும். பந்தல் அலங்காரத்தை பற்றிதான் ஊரெல்லாம் பேசும். மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு ஆடி வீதி, மேல ஆடி வீதி சந்திப்பில் பிரமாண்டமான மணமேடை அமைக்கப்பட்டு, வெட்டிவேர் பந்தல் போட்டு, கோடிக்கணக்கான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தயாராகும் மணமேடை.வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்து அன்னை மீனாட்சியும் அலங்காரமாக சுந்தரேஸ்வரரும் பிரியவிடையுடன் மண மேடையேறுவார்கள்.
அன்னை மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரர் தாலி கட்டும் போது இங்கே திருமணமான பெண்களும் புதுதாலி மாற்றிக்கொள்வார்கள். தம்பதியரின் அழகைக் காண பட்டி தொட்டி எங்கும் இருந்தும் மக்கள் திரண்டு வருவார்கள். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை கண்ணார கண்டால் நம் வீட்டில் மணமாகாமல் இருக்கும் மகளுக்கோ மகனுக்கோ திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
மனிதர்களின் திருமணத்திற்கே விருந்து களைகட்டும். தெய்வீக திருமணம் என்றால் கேட்கவா வேண்டும் வகை வகையாக விருந்தும் வடை பாயசத்துடன் பலகாரங்களும் சாப்பிட்டு அசந்து போவார்கள் மதுரை மக்கள். மாலையில் புதுமண தம்பதிகள் வீதி உலா வருவார்கள். மாலையில் மாப்பிள்ளை யானை வாகனத்திலும், புதுப்பெண் மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள்.
சித்திரை தேரோட்டம் மே 3ஆம் தேதி மாசி வீதிகளில் நடக்கிறது. அம்மை அப்பனுமாக வலம் வருவதை காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருப்பார்கள். திருக்கல்யாணத்தை காண முடியாதவர்கள் கூட தேரோட்டம் காண வந்து விடுவார்கள் மதுரைக்கு. ஏனென்றால் அன்றைக்குத்தான் கள்ளழகரும் அழகர் மலையில் இருந்து கண்டாங்கி பட்டு கட்டி தங்க சப்பரத்தில் அதிர்வேட்டு முழங்க புறப்பட்டு வருவார். அழகர் கோவிலில் போடப்படும் அதிர்வேட்டு மதுரை வரை எதிரொலிக்கும்.
மே 3ஆம் தேதி கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அழகர் மலையில் இருந்து புறப்பாடாகி வரும் அழகரை மதுரை மக்கள் 4ஆம் தேதி எதிர்கொண்டு வரவேற்பார்கள். எதிர்சேவை நிகழ்ச்சியை காண எல்லோரும் மூன்று மாவடிக்கு செல்வார்கள். அன்றிரவு தல்லாக்குளத்தில் தங்கும் கள்ளழகர் சித்திரா பவுர்ணமி நாளான 5ஆம் தேதி அதிகாலையில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்குகிறார். கள்ளழகரை காண பல லட்சம் மக்கள் வைகை ஆற்றங்கரையில் திரள்வார்கள்.
வைகை ஆற்றங்கரை ஓரத்திலேயே குதிரை வாகனத்தில் வண்டியூருக்கு செல்வார் கள்ளழகர். மே 6ம் தேதி காலை 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுகிறார். மே 6ம் தேதி மாலை 3 மணிக்கு தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அழகர் மதுரைக்கு வந்த நோக்கம் நிறைவேறியதும் அன்றைய தினம் நள்ளிரவு விடிய விடிய திருவிழாதான். இராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மே 7ம் தேதி காலை 6 மணிக்கு கள்ளழகர் மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் அழகர். அன்று பிற்பகல் 2 மணிக்கு கள்ளழகர் இராஜாங்க அலங்காரத்துடன் அனந்தராயர் பல்லக்கில் புறப்படுவார். இராமநாதபுரம் மன்னர் சேதபதி மண்டபத்தில் தங்கும் கள்ளழகர் மே 8ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர்கோயில் நோக்கி புறப்படுகிறார். அப்போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை நேரத்திலும் வந்து வழியனுப்பி வைப்பார்கள். மே 9ம் தேதி காலை 10.32 மணிக்கு கள்ளழகர் கோயிலுக்கு வந்தடைகிறார்.
கொடியேற்றம் தொடங்கி தீர்த்தவாரி வரைக்கும் சாமி அம்மன் ஊர்வலத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதே போல எதிர்சேவை தொடங்கி பூப்பல்லக்கில் கள்ளழகரை வழியனுப்பு வைப்பது வரைக்கும் மதுரை எங்கும் மல்லிகை வாசம் வீசும். இந்த ஆண்டு திருவிழாவை காண தமிழகம் முழுவதிலும் இருந்தும் பல லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications