மகாசிவராத்திரி..ஈஷா யோகா மையத்தில் இலவசமாக பங்கேற்க அழைப்பு..ஆன்லைனில் புக் பண்ணுங்க
ஈஷா யோகா மையத்தில் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய களைக்கட்ட உள்ளது. பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்படும்.
கோவை: மஹா சிவராத்திரி விழா பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
விரதம் இருப்பது என்பது நம் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவதற்காக நம் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்துச் சென்றுள்ள வழிமுறை ஆகும். இந்துக்களின் விரத தினங்களில் பல வகைகள் இருந்தாலும், குறிப்பாக வைணவ பக்தர்களின் வைகுண்ட ஏகாதாசி விரதமும், சைவ பக்தர்களின் மகாசிவராத்திரி விரதமும் முக்கியமான தினங்களாகும்.

நாடு முழுவதும் மகாசிவராத்திரி வரும் பிப்ரவரி 18ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. வைணவ பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று எப்படி உபவாசம் இருந்து துவாதசி தினத்தில் விரதத்தை முடிக்கின்றார்களோ, அது மாதிரியே சைவ பக்தர்கள் மஹாசிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் குளித்து முடித்து, விரதத்தை தொடங்கி. அன்று முழுவதும் சிறிதும் உறங்காமல் அருகிலுள்ள சிவன் கோயில்களுக்குச் சென்று அங்கு நடக்கும் நான்கு கால அபிஷேகங்களையும் கண்டு தரிசித்து, மறுநாள் அதிகாலையில் சிவாலயங்களில் அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின் தன்னுடைய விரதத்தை முடிப்பதையே வழக்கமாக கொள்வார்கள். இது தான் பெரும்பாலான பக்தர்கள் தீவிரமாகக் கடைபிடிக்கும் விரதமுறை ஆகும்.
'தென் கயிலாயம்' என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு மஹா சிவராத்திரி விழா பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.
இவ்விழாவில் நேரில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் https://isha.co/msr23-tn என்ற லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இலவசமாக பங்கேற்க விரும்புபவர்கள் 'தாமிரபரணி' என்ற பிரிவை தேர்வு செய்து பெயர், அலைபேசி எண், இ - மெயில் முகவரி போன்றவற்றை பதிவிட்டு முன்பதிவு செய்ய வேண்டும்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த முன்பதிவு நடைபெறும். வெற்றிகரமாக முன்பதிவு செய்த பிறகு, விழாவில் பங்கேற்பதற்கான இ - பாஸ் பதிவு செய்தவர்களின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பிப்ரவரி 18ஆம் தேதி ஈஷாவிற்கு வரும் போது, மலைவாசல் அருகே இருக்கும் நுழைவு சீட்டு வழங்கும் இடத்தில் இந்த இ-பாஸை காண்பித்து நுழைவு சீட்டை பெற்று கொள்ளலாம்.
இவ்விழா மாலை 6 மணிக்கு தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும். லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய களைக்கட்ட உள்ளது. விழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் அன்றைய தினம் இரவு மகா அன்னதானம் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications