சைவ நாரை.. மீன்களை உண்ணாமல் விரதம்.. முக்தி அளிக்க சிவன் ஆடிய திருவிளையாடல்
மதுரை: மீன்களை உண்ணாமல் பிற உயிர்களை துன்புறுத்தாமல் இருந்த நாரை ஈசன் அருளால் முக்கியடைந்து சிவகணமாக மாறிய கதை எத்தனை பேருக்கு தெரியும்? மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலையை பார்த்தாலோ அது பற்றி படித்தாலே போதும் சிவனின் திருவிளையாடலை புரிந்து கொள்ளலாம்.
திருவிளையாடல்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் ஆவணி மூலம் திருவிழாவை முன்னிட்டு இன்று முதல்நாளில் கருங்குருவிக்கு உபதேசம் செய்த சிவன், நாளைய தினம் இரண்டாம் நாள் நாரைக்கு முக்தி கொடுத்தார். சைவ நாரை சிவனை வணங்கி சிவகணமாக மாறியது. நாரையின் வேண்டுகோளின் படி இன்றைக்கும் பொற்றாமரைக்குளத்தில் மீன்களோ தவளைகளோ வசிக்காமல் சுத்தமாக இருக்கிறது.

நாரைக்கு கொடுத்த வரம்: இறைவனின் 64 திருவிளையாடல்களில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை இறைவன் மீது நாரை கொண்ட அன்பை பற்றி கூறுகிறது. மதுரையின் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லாமல் போனதற்கான காரணம் பற்றி இப்படலம் கூறுகிறது. நாரைக்கு ஏற்பட்ட மனமாற்றம், சொக்கநாதரை நாரை வழிபடுதல், இறைவனார் நாரைக்கு கொடுத்த வரம், பொற்றாமரை குளத்தில் மீன்கள் இல்லாமல் போனது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது. நாரைக்கு முக்தி கொடுத்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி எட்டாவது படலமாக அமைந்துள்ளது.
தண்ணீர் வற்றிய தடாகம்: பாண்டிய நாட்டில் வைகை ஆற்றிற்கு தெற்கே அழகிய தாமரை மலர்களைக் கொண்ட குளம் ஒன்று இருந்தது. அக்குளத்தில் இருந்த மீன்களை பிடித்து உண்டு நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு சமயம் மழை இல்லாமல் போனதால் தடாகத்தில் இருந்த தண்ணீர் வற்றி விட்டது. எனவே அத்தடாகத்தில் மீன்கள் இல்லாமல் போனது. இதனால் நாரை உணவில்லாமல் தவித்தது. உணவு தேடி பல பகுதிகளுக்கு சென்றது. ஒரு காட்டில் சிவனடியார்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் தடாகம் ஒன்று இருப்பதை நாரை கண்டது. அத்தடாகத்தைச் சுற்றிலும் படித்துறை அமைந்திருந்தது. அத்தடாகத்தைச் சுற்றிலும் மரங்கள் நிறைந்திருந்தன.
மதுரைக்கு வந்த நாரை: அதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்த நாரை இதுதான் தங்குவதற்கு சிறந்த இடம் என்று எண்ணிய நாரை அங்கேயே தங்கியது. அங்கே துள்ளிக்குதித்த மீன்கள் முனிவர்கள் மீதும் விளையாடின. அதைப்பார்த்த நாரை, அடடா அந்த மீன்களை நான் சாப்பிடக்கூடாதே என்று நினைத்து பட்டினி கிடந்தது. தீர்த்தத்தில் நீராடிய முனிவர்களிடம் சத்தியன் என்ற முனிவர் மதுரையின் பெருமைகளையும், சொக்கநாதரின் திருவிளையாடல்களையும் விரிவாக எடுத்துக் கூறினார். அதைக்கேட்ட நாரைக்கு மனமாற்றம் ஏற்பட்டது. சொக்கநாதரை வழிபடும் எண்ணம் அதிகரிக்கவே காட்டை விட்டு மதுரைக்கு வந்தது.

தவம் இருந்த நாரை: மதுரையை அடைந்த நாரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி சொக்கநாதரையும், அங்கையற்கண்ணி அம்மையையும் வழிபட்டது. பதினைந்து நாட்கள் வழிபட்ட சைவமாக எதையும் சாப்பிடலாம் இருந்த நாரைக்கு பதினாறாம் நாள் சோதனை காத்திருந்தது. பொற்றாமரைக் குளத்தில் நீராட செல்லும்போது அங்கு மீன்கள் துள்ளுவதைக் கண்டது. உடனே அதற்கு மீனை கொத்தி சாப்பிடும் ஆசை ஏற்பட்டது. சொக்கநாதர் தரிசனமே முக்கியம். மீன் தேவையில்லை என்று எண்ணி மனதை மாற்றிக்கொண்ட நாரை 16ஆம் நாளும் பக்தியோடு வழிபட்டது. இறைவன் நாரைக்கு காட்சி கொடுத்தார் சிவபெருமான். நாரையே உன் வேண்டுதல் என்ன என்று கேட்டார். அதற்கு நாரையோ இந்த பிறவியை விட்டு நீங்கி சிவ லோகத்தில் உமக்கு சேவை செய்ய வேண்டும் என்று கேட்டது.
சிவகணமாக மாறிய நாரை: பொற்றாமரைக்குளத்தில் மீன்களோ பிற உயிரினங்களோ வசிக்கக் கூடாது. ஏனென்றால் இங்கு வசிக்கும் உயிரினங்களை பிடித்து சாப்பிட்டால் பாவம் வரும் என்றது. இதைக்கேட்ட சிவன் அப்படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார். உடனே நாரை சிவகணமாக மாறி சிவலோகத்தை அடைந்தது. நாரைக்கு வரம் அளித்த நாள் முதல் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் மட்டும் இன்றி நீரில் வாழும் உயிரினங்கள் ஏதும் இல்லாமல் போயின. பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது இறைவனை அடைய சிறந்த வழி என்பதே நாரைக்கு முக்தி கொடுத்த படலம் கூறும் கருத்து.












Click it and Unblock the Notifications