கூரைக்குள் பணம் கொட்ட இந்த தேங்காய் பரிகாரம் போதுமே.. ஆமா, கர்ப்பிணிகள் கோயிலில் தேங்காயை உடைக்கலாமா
சென்னை: வீட்டு விசேஷங்கள் முதல் தீபாவளி, பொங்கல், அமாவாசை, போன்ற விரத நாட்கள் வரை அனைத்து நிகழ்வுகளிலுமே தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.. தேங்காய்கள் மங்களகரமான பொருளாக திகழ காரணமே, தேங்காயின் ஒரு கண் பிரம்மாவாகவும், 2வது கண் லட்சுமியாகவும், 3வது கண் சிவனாகவும் பார்க்கப்படுகிறது. அதனால்தான் தேங்காய் உடைக்கும்போது சில முக்கிய விஷயங்களை கடைப்பிடிக்க சொல்கிறார்கள். அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
தேங்காய் உடைப்பது நம் கர்வத்தை அழிப்பதன் சின்னமாகும்.. அதிலும் கடவுளின் முன்னால் உடைப்பது, நம்முடைய அகங்காரத்தை அழித்து, ஆன்மாவைப் பரம்பொருளுடன் இணைப்பதாக கருதப்படுகிறது.

எனவேதான், தேங்காய் இல்லாத பூஜையே கிடையாது.. ஆனால் சிலர் தேங்காயை கடையில் வாங்கியதுமே அப்படியே பயன்படுத்துகிறார்கள்.. இது தவறானதாகும்.. தேங்காயை பயன்படுத்துவதற்கு முன்பு சுத்தமான நீரில் நன்றாக கழுவ வேண்டும்..
பரிகாரங்கள், பூஜைகளின்போது மட்டுமல்லாமல், ஏகாதசி, அமாவாசை போன்ற தினங்களில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யலாம். அதேபோல, சனி, ராகு, கேது தோஷம் இருந்தால் தேங்காயில் கற்பூரம் வைத்து எரித்து ஆற்றில் விடலாம். வியாழக்கிழமைகளில் மஞ்சள், குங்குமம் பூசி தேங்காயை கோவிலில் சமர்ப்பிக்கலாம்.
கலச தேங்காய்
அதேபோல தேங்காயை கலசத்தில் வைப்பதாக இருந்தால், தேங்காய் நாருடன் இருக்கும் பகுதியில் விபூதி, சந்தனம் பூசி, கலசத்தின் வாயில் வைத்து பூஜை செய்ய வேண்டுமாம்.. எந்த பூஜை முடிந்தாலும், தேங்காயை அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும். உடைந்த தேங்காயை பசு, பறவை, ஏழைகளுக்கு அளிப்பது நல்லது.
தேங்காய் உடைக்கும் நேரத்தை வைத்தும் பலன்கள் உள்ளன.. அதாவது காலையில் தேங்காய் உடைத்தால், நினைத்த காரியம் பத்து நாட்களில் நடந்தேறும்.. மதிய நேரத்தில் தேங்காய் உடைத்தால், அந்த காரியம் முப்பது நாளில் நடக்கும். இரவு நேரங்களில் தேங்காய் உடைத்தால் ஆறு மாதத்திற்குள் அதற்குரிய பலன் உங்களை வந்து சேருமாம்.
தேங்காயை எங்கே உடைப்பது
அதேபோல பரிகாரத்துக்காக தேங்காயை எங்கே உடைப்பது என்பதை வைத்தும் பலன்கள் உள்ளன. உதாரணத்துக்கு குடும்பத்தில் கஷ்டங்கள், நஷ்டங்கள் குறைய வேண்டுமானால், தேங்காயை கடலில் விட வேண்டும் என்பார்கள்.. அதேபோல புதிதாக வேலைக்கு செல்வதாக இருந்தால் அல்லது பயணம் மேற்கொள்வதாக இருந்தால், கோவிலின் முன்பு தேங்காயை உடைக்கலாம். இதனால் சுற்றியுள்ள தடைகள் நீங்கி, வெற்றிகள் கிடைக்கும்.
ஒரே ஒரு பரிகாரம்
அதேபோல, வியாபாரத்தில் நஷ்டம், நிதி நெருக்கடி, திருமணத்தடை, குடும்பத்தில் சச்சரவு உள்ளிட்ட பிரச்சனைகள் தீர வேண்டுமானால், வீட்டிலேயே தேங்காய் பரிகாரம் ஒன்று செய்யலாம்.
இந்த பரிகாரத்தை புதன்கிழமைகளில் செய்யலாம்.. மாலை 6 மணி முதல் 9 மணிக்குள் தேங்காய் வாங்கி, வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலை 3 மணி முதல் 5 மணிக்குள், குளித்து முடித்ததுமே, அந்த தேங்காயை விநாயகர் கோயிலுக்கு எடுத்து செல்ல வேண்டும்.
விநாயகரிடம் நம்முடைய பிரார்த்தனையை சொல்லிவிட்டு, மனமுருக வேண்டிக்கொண்டு, சிதறு தேங்காயாக உடைக்க வேண்டும். இப்படி 14 வாரங்கள் தொடர்ந்து செய்து வரும்போது, உங்களது எந்த பிரார்த்தனையாக இருந்தாலும் அது நிறைவேறும் என்பார்கள்.
கர்ப்பிணிகள் தேங்காய் உடைக்கலாமா
பெண்கள் தேங்காய் உடைக்கக் கூடாது என்பார்கள்.. வீட்டின் மகாலட்சுமியே பெண்கள்தான் என்பதால், அவர்கள் உடைப்பது, அழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.. அதுமட்டுமல்ல தேங்காயை உடைப்பது என்பது, ஒருவகை பலியாக பார்க்கப்படுகிறது.. எனவே பெண்கள் இதனை செய்வது குடும்பத்திற்கு நல்லதல்ல என்பார்கள். அப்படி செய்வதால், குழந்தை பாக்கிய பாதிப்பை தந்துவிடும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கர்ப்பிணிகளும் கோவிலில் தேங்காய் உடைக்கக்கூடாது.. காரணம், கர்ப்பத்தில் வளரும் குழந்தை ஒரு விதை போன்றது.. எனவே, கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைப்பது அவர்களின் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்பார்கள்.. எனவே, கர்ப்பிணிப் பெண்கள் இதைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று ஆன்மீகம் கூறுகிறது.












Click it and Unblock the Notifications