ஐப்பசி முதல் நாள்.. ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்.. தன்வந்திரியிடம் வேண்டுதல்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு காவிரி பாயும் திருச்சிக்கு சென்று ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து தன்வந்திரி பகவானையும் வேண்டிக்கொண்டுள்ளார் துர்கா ஸ்டாலின்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று காலை 11 மணியளவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவர் கருடாழ்வார், மூலவர் ரெங்கநாதர், தன்வந்திரி, தாயார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

ஐப்பசி மாதத்தில் சூரியன், துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது என்பது ஐதீகம். இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவர். துலா ஸ்நானம் செய்தால் நம்முடைய பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
நேற்று ஐப்பசி முதல்நாள் அக்டோபர் 18ம் தேதி துலாம் மாத பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு காவிரி ஆற்றில் இருந்து தங்கக் குடத்தில் புனிதநீர் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது.
இந்த நாளில் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிறப்புமிக்க ஐப்பசி முதல் நாளான நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மகாவிஷ்ணுவின் 108 திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் கோயிலாக திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயம் விளங்குகிறது. ஸ்ரீரங்கம் ஆலயம் சுக்கிரன் ஸ்தலம். பரணி, பூரம், பூராடம் என்பது சுக்கிரனுக்கு உகந்த நட்சத்திரம். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்ரீரங்கநாதர் உகந்த தெய்வம்.
அங்குள்ள தன்வந்திரி பகவான் நோய்கள் நீக்கும் கடவுள். புதன்கிழமையில் சக்கரத்தாழ்வாரையும், தன்வந்திரி பகவானையும் தரிசனம் செய்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. முதல்வர் ஸ்டாலின் நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் என்பதால் சுக்கிரன் ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்ததுடன் தன்வந்திரி பகவான், சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்துள்ளார் துர்கா ஸ்டாலின்.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதிலும் உள்ள சிறப்பு வாய்ந்த பெருமாள் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார் துர்கா ஸ்டாலின். புரட்டாசி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமையில் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டார். நேற்று ஐப்பசி முதல்நாளில் ஸ்ரீரங்கநாதரை வழிபட்டுள்ளார். புதன்கிழமை என்பதால் பச்சை நிற பட்டுப்புடவை கட்டி வந்து ரங்கநாதரையும் ரங்கநாயகித்தாயாரையும் வழிபட்டுள்ளார் துர்கா ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications