Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி பிரம்மோற்சவம்.. நாக தோஷம் நீக்கும் சேஷ வாகனம்.. சகல பயங்களை நீக்கும் கருட வாகன சேவை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. முதல்நாளன்று மலையப்பசுவாமி 7 தலைகள் கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதி உலா வந்தார். சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமியை தரிசனம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

புராண இதிகாச காலத்தில் பிரம்மனே திருமலைக்கு வந்து மலையப்பசாமிக்கு பிரம்மோற்சவ விழாவைக் கொண்டாடியதாக ஐதிகம். பிரம்மோற்சவ நாட்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

Tirupathi Brahmotsavam 2023: Malayappa Swamy Shesha vaganam and Garuda vahana Seva Benefits

கி.பி 614-ம் ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதல் பிரம்மோற்சவம் நடைபெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பல்லவ நாட்டை ஆண்ட 'பெருந்தேவி' என்றழைக்கப்பட்ட 'சமவை' என்பவர்தான் முதன்முதலில் இந்த பிரம்மோற்சவத்தை நடத்தியுள்ளார். அப்போது அவர் வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட 'மணவாளப் பெருமாள்' என்னும் சிலையைத் திருப்பதி கோயிலுக்கு வழங்கினார். அந்தச் சிலைதான், போக சீனிவாசமூர்த்தி என்று இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் திங்கட்கிழமை மாலை தங்கக்கொடிமரத்தில் கருடக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கருடாழ்வார் என்ற கருடன் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்று இந்துக்களால் வணங்கப்படுகிறார். கருடனை வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய் என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார் பெருமாள். எனவேதான் பெருமாள் கோவில்களில் கருட கொடி ஏற்றப்படுகிறது.

பிரம்மோற்சவம் தொடங்கியதை அடுத்து ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருமலைக்கு வந்து, புதிய பட்டு வஸ்திரங்களைக் காணிக்கையாக வழங்கினார். அன்று இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். சீனிவாச பெருமாள் குடியிருக்கும் மலையும் அவர் சயனித்து இருப்பதும் ஆதிசே‌ஷன் மீது என்பதால் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று 7 தலைகளுடன் கூடிய பெரிய சே‌ஷ வாகனத்தில் எழுந்தருளினார். இன்று காலை சின்னசேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார். 2வது நாளான இன்று காலையில் 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மாட வீதியில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சின்னசேஷ வாகன சேவையை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்தார். அங்கு தங்க சின்ன ஷேச வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு திருவாபரண சமர்ப்பணம், தூபதீப நெய்வேத்திய சமர்ப்பணம் ஆகியவை சாஸ்திர முறையில் நடத்தப்பட்டன. சேஷ வாகனம் என்பது 'தாஸானு தாஸ' பக்திக்கு எடுத்துக்காட்டு. இதில் சுவாமி எழுந்தருளி உலா வரும்போது தரிசனம் செய்தால், நம் மனதில் இருக்கும் மிருகத்தன்மை நீங்கி சாத்விகமான குணங்கள் ஏற்பட்டும். மற்றவர்களுக்குப் பயன்படும் வாழ்க்கை அமையும். சேஷ வாகனத்தில் சுவாமி உலா வரும்போது, தரிசனம் செய்பவர்களுக்குக் குண்டலினி யோக பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்று மாலையில் அன்னவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

நாளைய தினம் 20ஆம் தேதி காலையில் சிம்ம வாகனத்தில் நரசிம்ம சுவாமியாக வீதி உலா வந்தார். இரவு 7 மணிக்கு முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார் மலையப்பசுவாமி. 21ஆம் தேதியன்று கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வலம் வருகிறார் மலையப்பசுவாமி. கற்பக மரம் கேட்கும் வரங்களைத் தரும் மரம். இந்த வாகனத்தில் ஏழுமலையான தரிசனம் செய்பவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருவார் மலையப்பசுவாமி. இரவு 7 மணிக்கு சர்வ பூபால வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.

பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான 22ஆம் தேதி மலையப்பசுவாமி மோகினி அவதாரத்தில் அழகாய் அருள்பாலிக்கிறார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டுவஸ்திரம் சூடி எழுந்தருள்கிறார் பெருமாள். மோகினி அவதாரத்தில் வலம்வரும் பெருமாளை தரிசனம் செய்ய வாழ்வில் நன்மை என்னும் அமிர்தம் பொங்கும் என்பது ஐதிகம்.

மலையப்பசுவாமியை கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தருவதாகும். அதனால் தான் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பிரம்மோற்சவ நாட்களில் கருட சேவையை தரிசனம் செய்யவே அதிக பக்தர்கள் வருகை தருகின்றனர். மலையப்ப சுவாமியை கருட வாகனத்தில் தரிசிக்க திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கருடவாகன சேவையை தரிசித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. நாகதோஷம் தீரும், திருமண வரம் தருவார் ஏழுமலையான் என்பதால் பல லட்சம் பேர் திருப்பதிக்கு வருகை தருவார்கள்.

மகாவிஷ்ணுவின் வாகனம் கருடன். இந்த கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளுவது சிறப்பம்சம். கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளும் இந்நாளில் மட்டும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் வருவார்கள். இதையொட்டித் திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பெருமாளே வரமாகக் கேட்டுப் பெற்ற சிறப்பினுக்கு உரியது கருட வாகனம். கருட சேவையில் எழுந்தருளும் பகவானை தரிசித்தால் சகல பயங்களும் நீங்கும் என்பது ஐதிகம். பெருமாளை கருட வாகனத்தில் தரிசித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. எனவேதான் பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது. பெருமாளே வரமாகக் கேட்டுப் பெற்ற சிறப்பினுக்கு உரியது கருட வாகனம். கருட சேவையில் எழுந்தருளும் பகவானை தரிசித்தால் சகல பயங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. நாகதோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

திருமால் சீனிவாசனாக திருப்பதியில் இருந்த பொழுது, தான் வைகுண்டத்தில் இருந்ததைப் போல இங்கும் இருக்க ஆசை கொண்டார். அதனை அறிந்த கருடன், வைகுண்டத்தில் இருக்கும் ஏழு மலையையும் பெயர்த்து எடுத்து திருப்பதியில் சேர்த்தார். அங்கு திருமால் சீனிவாசனாக குடியிருக்கிறார். தான் ஆசைப்பட்டதை செய்த கருடனை தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டார்.இதனை நினைவு படுத்தும் விதமாக திருப்பதியில் கருட சேவை, பிரம்மோற்சவ திருவிழாவின் பொழுது நடத்தப்படுகிறது.

கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன்புறம் நீட்டியவாறு இருப்பார்.
பெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார். நாச்சியார் கோவிலில் கல்கருடன் தனி சன்னிதியில் கம்பீரமாக காட்சி தருகிறார்.

Tirupathi Brahmotsavam 2023: Malayappa Swamy Shesha vaganam and Garuda vahana Seva Benefits

நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் உடையவர்கள் கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளை தரிசிப்பதால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி சகலசெல்வங்களும் பெறுவார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. கருட சேவையை தரிசிப்பதற்கு , மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருட சேவையை தரிசிக்க சென்றால் பெருமாள் ஆசியுடன், நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். எனவேதான் லட்சக்கணக்கான பக்தர்கள் கருடசேவையில் மலையப்பசுவாமியை தரிசிக்க திருமலைக்கு வருகின்றனர்.

சுவாதி நட்சத்திர நாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று கருடனை வழிபடுவதால் திருமணம் யோகம் மற்றும் வண்டி வாகன யோகமும் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை. எனவேதான் பெருமாளை கருட வாகன சேவையில் தரிசிப்பதை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+