வைகாசி விசாகம் முருகன் ஆலயங்களில் கோலாகலம். பால்குடம் சுமந்து வந்து பக்தர்கள் அபிஷேகம்
சென்னை: அறுபடை வீடுகளிலும் முருகனின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும், திருச்செந்தூரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளிலும் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அவதாரத்திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
முருகப் பெருமானுக்குரிய விழாக்களாக தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொன்னாலும் இவையாவும் சிவனோடும் சம்பந்தப்பட்டவை. முருகனது தனிப்பட்ட விழாக்களில் விசாகமும் ஐப்பசி சஷ்டியுமே மிக முக்கியமானவை.

வருடத்தை ஆறு காலங்களாக வகுத்த நம் முன்னோர்கள் சித்திரை, வைகாசி இரண்டு மாதங்களையும் இளவேனில் காலமாகப் பிரித்தனர். இடபம் என்பது வைகாசி மாதத்தைக் குறிக்கும். முற்காலத்தில் நட்சத்திரங்களைக் கணக்கிடும்போது கார்த்திகையை முதலாவதாகக் கொண்டு கணக்கிட்டார்கள். அதன்படி கணக்கிட்டால் விசாகம் பதினான்காவது நட்சத்திரம் ஆகும். அதாவது இருபத்தியேழு நட்சத்திரங்களில் நடுவில் இருக்கும் நட்சத்திரம் விசாகம். இதைத்தான் 'ஒரு பதின்மேலும் ஒரு மூன்று சென்றபின்' என்றும் 'மீனத்து (நட்சத்திரங்களின்) இடைநிலை' என்றும் மணிமேகலை கூறுகிறது. இதன்மூலம் முற்காலத்திலும் வைகாசி விசாகம் சிறந்த விழாவாகக் கொண்டாடப்பட்டதை அறியலாம்.
வைகாசி என்பதை 'விகாஸம்' என்றும் கூறுவதுண்டு. விகாஸம் என்றால் மலர்ச்சி என்றும் பொருள். வைகாசியே வடமொழியில் வைஸாகம். வைணவர்கள் இம்மாதத்தை 'மாதவ மாதம்' என்றழைப்பார்கள். சூரபத்மன் போன்ற அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். உடனே அவர்களை காத்தருள சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார்.
இந்தத் தீப்பொறிகள் வாயு, அக்னி முதலிய தேவர்கள் மூலம் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கையோ அவற்றை சரவணப் பொய்கையில் சேர்த்தது. அங்கு வந்து சேர்ந்ததும் அவை வைகாசி விசாகத்தன்று ஆறு குழந்தைகளாக மாறின. விஷ்ணு பகவான் கார்த்திகைப் பெண்கள் மூலமாக அக்குழந்தைகளுக்கு பாலூட்டி விட்டார். ஆறுமுகம் கொண்ட முருகன் தோன்றி தேவர்களைக் காத்தருளினார். எனவே, இந்நாளில் முருகனை வழிபடுவதால் நம் பகைகள் யாவும் தொலைந்து விடும் என்பர். இந்நாளில் தானமும், தர்மமும் செய்தால் நல்லது. தயிர்சோறு, மோர், பானகம் போன்ற குளிர்பான தானம், குலம் காக்கும் என்று சொல்வார்கள்.
இந்நாளில் முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளிலும் மற்ற முருகன் தலங்களிலும் விசேஷமான பூஜைகளும் கோலாகலமான விழாவும் நடைபெறுகின்றன. முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வந்து சுப்ரமணியரையும் சண்முகரையும் வழிபட்டு வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத் திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 7ம் நாள் நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. மாலை 4.30 மணியளவில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்தே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் காவடி எடுத்தும், பாட்டுப்பாடியும் மலைக்கோவிலுக்கு வந்தனர்.
கோவையிலிருந்து காரமடை செல்லும் வழியில் சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள குருந்தமலை குழந்தை வேலாயுதருக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபடுவர். இதனால் இல்லறம் சிறக்கும். வியாபாரம் செழிக்கும் என்பது நம்பிக்கை. முருகன் ஆலயங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள வைணவ தலங்களிலும் சிவாலயங்களிலும் வைகாசி விசாகத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம், சிம்மாசலத்தில் நரசிங்கப் பெருமாளை விசாக நாளில் தரிசனம் செய்வர். இந்நாளில் பெருமாளின் உருவத்தை முழுவதுமாக மறைத்திருக்கும் சந்தனக்காப்பை அகற்றிவிட்டு திருமஞ்சனம் செய்வர். பக்தர்களுக்கும் தரிசனம் கிடைக்கும். மறுநாளே மீண்டும் சந்தனக் காப்பிட்டு விடுவார்கள். மீண்டும் அடுத்த வைகாசி விசாகத் தினத்தன்றுதான் திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது.
மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்தருக்கு 10 நாட்கள் விழாக் கொண்டாடப்படுகிறது. மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயிலில், வைகாசி திருவாதிரை நட்சத்திர நாள் முதல் விசாக நட்சத்திர நாள் வரை விழா, 10 நாட்களுக்கு நடைபெறும். 10ம் நாள் பால், மாங்காய் நைவேத்யம். சுவாமி புது மண்டபம் புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வருவார். திருஞானசம்பந்தர் விழா 3 நாட்களும் மூல நட்சத்திர நாளில் அறுபத்து மூவர் புறப்பாடும் இரவில் வெள்ளி ரதத்தில் திருஞான சம்பந்தர் புறப்பாடும் நடக்கும்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 14 நாட்கள் விழா நடைபெறுகிறது. முதல் 3 நாட்கள் மலைமீதும் மற்ற நாள் வைபவங்கள் அடிவாரத்திலும் நடக்கும். 9ம் நாள் விசாக நட்சத்திர நாளில் இறைவன் தேரில் வலம் வருவார். 14ம் நாள் மீண்டும் மலைக்கு எழுந்தருளுவார். திருச்சி-உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது.
நாகை மாவட்டம் ஆச்சாள்புரத்தில் மூல நட்சத்திர நாளில் திருஞான சம்பந்தர் திருநட்சத்திரம் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி அன்று ஏகவசந்தம். அன்று அன்னாபிஷேகமும், பால் மாங்காய் நிவேதனமும் செய்யப்படுகின்றன. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மங்களாம்பிகைக்கும் கும்பேஸ்வரருக்கும் திருக்கல்யாண விழா நடைபெறும்.












Click it and Unblock the Notifications