திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம்..ஏப்ரல் மாத ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் ரிலீஸ் எப்போது
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் வசந்த உற்சவ விழா நடைபெற உள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெறும் வசந்த உற்சவ விழாவில் பங்கேற்க விருப்பம் உள்ள பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு டிக்கெட்கள் Tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகள் மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி ஏப்ரல் மாத ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வரும் 27ம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பக்தர்கள் www. http://tirupathibalaji.ap.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வசந்த உற்சவ விழா ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் வசந்த உற்சவ விழா தொடங்கி பவுர்ணமி அன்று நிறைவடைவது வழக்கம் அதன்படி 3ஆம் தேதி காலை 7 மணிக்கு ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் 4 மாட வீதிகள் வழியாக வசந்த மண்டபத்தை சென்றடைகின்றனர். பின்னர் பூஜைகள் முடிந்து மாலை கோவிலுக்கு திரும்புகின்றனர்.
4ஆம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை ஏழுமலையான் 4 மாட விதிகளில் தங்க தேரில் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதன்பின் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. 5ஆம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஏழுமலையான், சீதாராமர் லஷ்மணர், ஆஞ்சநேயர், ருக்மணி, கிருஷ்ணர் ஆகிய உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் கோவிலுக்கு வந்தடைகின்றனர்.
கோவிலுக்கு மேற்கு பகுதியில் உள்ள வசந்த மண்டபத்தில் தினமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஏழுமலையான் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்னபன திருமஞ்சனம் நடைபெறுகிறது. வசந்த உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தேன், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், சாதம் ஆகியவை மூலம் அபிஷேகம் ஆராதனை நடைபெறுகிறது. மாலை 6 முதல் 6-30 மணி வரை ஆஸ்தானம் கோலாகலமாக நடைபெறுகிறது.
வசந்த உற்சவத்தையொட்டி வசந்த மண்டபம் பலவண்ண மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. வசந்த உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் அஷ்டதள பாத பத்மாராதனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் உள்ள பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு டிக்கெட்கள் Tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடுகிறது. கோடை காலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருவார்கள் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் வரும் ஜூன் மாதம் கட்டண சேவையில் தரிசிப்பதற்கான டிக்கெட்டுகள் இம்மாதம் 23ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையானை சுப்ரபாதம், கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, கட்டண பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை போன்ற கட்டண சேவைகளில் பக்தர்கள் தினமும் தரிசித்து வருகின்றனர். அவற்றுக்கான டிக்கெட்டுகள் கடந்த 23ஆம் தேதி காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்பட்டது.
ஏழுமலையான் கோவிலில் அங்கப் பிரதட்சணம் செய்ய தேவையான டிக்கெட்டுகள் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலே முடிந்து விட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர். ஏழுமலையானை தரிசிக்க தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், கட்டண சேவை டிக்கெட்டுகள் ஆகியவற்றை முன்பதிவு செய்ய பக்தர்கள் ஆதார் அட்டையை மட்டுமே இனிமேல் பயன்படுத்த முடியும் என்று தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications