ராஷ்மிகாவின் 'அந்த' வீடியோ.. பகீர் கிளப்பும் AI டெக்னாலஜி.. உள்ளே வரும் அமிதாப் பச்சன்.. உண்மை என்ன
டெல்லி: நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இது தொடர்பான பகீர் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் இப்போது டாப் இடத்தில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் டிரெண்டானார்.

தொடர்ந்து புஷ்பா, சீதா ராமம் என்று பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்த அவர், தளபதி விஜய் உடன் "வாரிசு" படத்திலும் நடித்திருந்தார். இப்போது பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து வரும் அவர், இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா: இதற்கிடையே கடந்த சில நாட்களாக நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ என்று இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் நடிகை ராஷ்மிகா மந்தனா லிப்ட் ஒன்றில் நுழைவது போல இருக்கிறது. கருப்பு நிற ஆடையில் லிப்ட் மூடும் சில நொடிகளுக்கு முன்பு ராஷ்மிகா மந்தனா அதில் உள்ளே வருவது போல இருக்கிறது. இந்த வீடியோ தான் இணையத்தில் நேற்று வேகமாகப் பரவியது. பலரும் இது ராஷ்மிகா மந்தனா என்றே நினைத்தனர்,
இந்த வீடியோ 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்று டிரெண்டாகி வந்தது. இதற்கிடையே அது உண்மையில்லை என்பது தெரிய வந்துள்ளது. டீப் ஃபேக் (Deepfake) என்ற முறையில் அவர்கள் இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர். வளர்ந்து வரும் ஏஐ கருவிகள் குறித்த அச்சங்களில் முக்கியமானது இந்த டீப் பேக் தொழில்நுட்பம்..
உண்மை என்ன: சைபர் குற்றவாளிகள் தங்களை வேறு ஒரு நபராகக் காட்டிக் கொள்ள இது உதவும். முன்பெல்லாம் சைபர் குற்றவாளிகள் தங்கள் குரலை மட்டும் தான் மற்றொரு நபர் போல மாற்றிக் கொள்வார்கள். ஆனால், இந்த டீப் பேக் தொழில்நுட்பம் மூலம் முகத்தையும் கூட மற்றொரு நபர் போல அப்படியே மாற்ற முடியும். அதற்கு மிக சிறந்த உதாரணம் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா விவகாரம்.
ராஷ்மிகா மந்தனா என்று சொல்லிப் பரவும் இந்த வீடியோ முதலில் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் பரவ தொடங்கியது. ஆனால், உண்மையில் அந்த வீடியோவில் இருப்பவர் ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் வாழ் இந்தியப் பெண்.. தன்னை ராஷ்மிகா மந்தனா போல இப்படி டீப் பேக் முறையில் எடிட் செய்துள்ளனர் என்பது ஜாரா படேலுக்கு கூட தெரியாது. யாரோ விஷமிகள் செய்த செயல்தான் இது. யார் இப்படிச் செய்தார்கள் என இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
டீப் பேக்: மேலும் டீப் பேக் முறையில் பிரபலங்களைச் சித்தரித்து வீடியோ பரவுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களில் பல முறை பிரபலங்களை வைத்து டீப் பேக் முறையில் வீடியோவை உருவாக்கியுள்ளனர். இதுபோன்ற டீப் பேக் வீடியோக்களால் வரும் காலத்தில் மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த விவகாரத்தில் உரியச் சட்டங்கள் தேவை என்று செய்தியாளர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் இரண்டு வீடியோக்களையும் கூட பகிர்ந்திருந்தார்.

அமிதாப் பச்சன்: இதனைப் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் கூட தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த டீப் பேக் விவகாரம் எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சியாக இருக்கிறது. ராஷ்மிகா மந்தனாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பார்த்தால் உங்களுக்கு ஒன்று தெரியும். அதாவது வீடியோவின் தொடக்கத்தில் ஒரு நொடி மட்டும், லிஃப்ட்டில் நுழையும் போது அதில் ஜாரா படேலின் முகம் தெளிவாகத் தெரியும். அதன் பிறகு உடனடியாக அது ராஷ்மிகா மந்தனாவின் முகமாக மாறிவிடும்.
இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், பலரும் இது குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். பொதுவாக இயற்கைக்கு மாறான முகபாவனைகள் அல்லது அசைவுகள், அடிக்கடி கண் சிமிட்டுவது போன்றவை மூலம் டீப் பேக் வீடியோவை அடையாளம் காணலாம். மேலும், டீப் பேக் வீடியோவில் மங்கலான கண்கள் இருக்கும்.












Click it and Unblock the Notifications