விஜயகாந்த் இறப்பதற்கு முன்! "நான் பாடிய அந்த பாடல்" சூப்பர் சிங்கரில் உடைந்து அழுத ஆர்.வி. உதயகுமார்
சென்னை: சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியில் என்றென்றும் கேப்டன் சுற்றில் கலந்து கொண்ட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், விஜயகாந்தை எண்ணி கண் கலங்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமாரும், ரமேஷ் கண்ணாவும் கலந்து கொண்டனர்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் விஜயகாந்தின் சூப்பர் ஹிட் பாடல்களை போட்டியாளர்கள் பாடினர். அந்த வகையில் முத்து மணி மாலை என்ற பாடல் பாடப்பட்டது. இந்த பாடல் குறித்த நினைவலைகளை சின்ன கவுண்டர் என்ற படத்தின் இயக்குநர் என்ற முறையில் ஆர்.வி. உதயகுமார் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், முத்துமணி மாலை என்ற பாடலை இளையராஜா கம்போஸ் செய்ததும் எனக்கு பி.சுசீலாவை பாட வைக்க ஆசையாக இருந்தது. எனது படத்தில் அவர் அதுவரை பாடியதே இல்லை என்பதால் அவரை வைத்து பாட வைக்க முயற்சித்தேன்.
இதற்காக எஸ்பிபியிடம் சொல்லி ஏற்பாடு செய்து பாட வைத்தேன். விஜயகாந்த் திரைப்படக் கல்லூரி மாணவர்களை வாழ வைத்தார் என்றே சொல்லலாம். ஆபாவாணனுடன் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தேன். அப்போதுதான் விஜயகாந்திடம் ஆபாவாணன்தான் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அப்போது அவரிடம் சின்ன கவுண்டர் குறித்த கதையை ஒரே வரியில் கூறினேன். ஆனால் விஜயகாந்துக்கு நான் சொன்ன அந்த ஒரு வரி புரியவில்லை. இதையடுத்து ராவுத்தரிடம் தனக்கு கதை புரியவில்லை என்பதை குழந்தை போல் கூறியிருந்தார். அதற்கு ராவுத்தரும்,"இல்ல விஜி, உதய் பண்ணா சரியாத்தான் வரும்" என கூறிவிட்டார்.
அப்போது பரதன் படம் சூட்டிங் நடந்தது. இரவெல்லாம் அந்த படத்தில் நடித்துவிட்டு காலையில் அவினாசியில் படப்பிடிப்பில் எங்களை எல்லாம் தண்ணீர் தெளித்து எழுப்பிவிடுவார். அப்போது அவருடைய கண்கள் சிவந்து காணப்படும். இதனால் நான் அவரை "சிறிது நேரம் ஓய்வு எடுங்க, நான் மற்ற காட்சிகளை முடித்துவிட்டு அழைக்கிறேன் என்பேன்".
அவரும் ஒரு ஓலைக் கீற்றை எடுத்து போட்டுக் கொண்டு 5 நிமிடங்களில் குழந்தை போல் தூங்கிவிடுவார். பிறகு அவரை எழுப்பி மேக்கப் போட்டுக் கொண்டு வரச் சொல்லி அவருக்கான சீன்களை எடுப்பேன்.
ஆனால் சின்ன கவுண்டர் படம் ஓடும் என விஜயகாந்திற்கு நம்பிக்கையே வரவில்லை. பிறகு அந்த படம் பிளாக்பஸ்டரான போதுதான் அவருக்கு அத்தனை சந்தோஷம்! அந்த படத்தில் வந்த எல்லா பாடல்களையும் நான்தான் எழுதினேன்.
அதில் நான் எழுதிய அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே என்ற பாடல் அவரை தவிர வேறு யாருக்குமே பொருந்தாது! கலங்கும் போது சேறு , அது தெளியும் போது நீறு என்றெல்லாம் எழுதியிருந்தேன்.
விஜயகாந்த் இறப்பதற்கு முன்பு அவரது உடல்நிலை குறித்து கேள்விப்பட்டு, நான் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன் உள்ளிட்டோர் அவரை போய் பார்த்தோம். எப்படியிருந்த கேப்டன் இப்படி முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு இருப்பதை கண்டு எங்கள் மனம் பாதிக்கப்பட்டது.
அப்போது நான் அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தேன். என் கைகளை பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது "அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே" என்ற பாடலை பாடினேன். அப்போது நான் அழ , விஜயகாந்தும் அழ மிகவும் வேதனையாக இருந்தது. இவ்வாறு ஆர்.வி. உதயகுமார் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications