Idli Kadai: சின்ன வயசுல 50 பைசா கொடுத்து இட்லி சாப்பிட கூட காசு இருக்காது! தனுஷ் உருக்கம்
சென்னை: சிறு வயதில் இட்லி சாப்பிட கூட காசு இருக்காது என "இட்லி கடை" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த கதை உருவான விதம் குறித்தும் அவர் விவரித்துள்ளார். இட்லி கடை என படத்திற்கு ஏன் பெயர் வைக்கப்பட்டது என்பது குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் 'இட்லி கடை' திரைப்படம் வரும் அக்டோபர் 1, 2025 அன்று வெளியாகிறது. இத்திரைப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சத்யராஜ், மற்றும் சாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

கதைச் சுருக்கம்: ஒரு சிறிய உணவகம் நடத்தும் சாதாரண மனிதனின் வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுவதும், அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுமே படத்தின் முக்கிய கரு.
படத்தை பற்றிய தகவல்கள்
தயாரிப்பு: இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பாடல்கள்: இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
படப்பிடிப்பு: சென்னை, மதுரை மற்றும் வெளிநாடுகளிலும் படத்தின் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
டிரெய்லர் எப்போது
இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட தனுஷ் பேசியதாவது: "நான் சிறுவயதில் இருந்தே எங்கள் ஊரில் ஒரு இட்லி கடை இருக்கும்.
இட்லி கடை
தினமும் அந்த இட்லி கடையில் எப்படியாவது இட்லி சாப்பிட வேண்டும் என எனக்கு ஆசை இருக்கும். எனது சிறுவயதில் ரொம்ப முக்கியமான கேரக்டர் அந்த இட்லி கடைதான். அங்கு இட்லி சாப்பிட என் கையில் பணமிருக்காது. அப்போது என்ன செய்வார்கள் என்றால் காலையில் வயலில் இறங்கி பூ பறிக்க சொல்வார்கள்.
பூக்களை பறித்தோம்
எவ்வளவு பூக்கள் பறித்துக் கொடுக்கிறோமோ அவ்வளவு காசு கொடுப்பார்கள். எனவே நான், என் அக்கா இருவர் காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து அந்த வயலுக்கு சென்று பூக்களை பறிப்போம். தொடர்ந்து இடைவிடாமல் 2 மணி நேரம் பறிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஆளுக்கு 2 ரூபாய் கிடைக்கும்.
2 ரூபாய் கொடுத்தால் 4 இட்லி
அதை எடுத்துக் கொண்டு நேராக ஒரு தோட்டத்துக்கு செல்வோம். அங்கு இருந்த ஒரு குட்டையில் ஆசை தீர குளிப்போம். பின்னர் அந்த இட்லி கடைக்கு சென்று 2 ரூபாய் கொடுத்து 4 இட்லி வாங்கி சாப்பிடுவோம். அப்படி உழைத்து சாப்பிடும் போது வரும் சுவையும் நிம்மதியும் சந்தோஷமும் பெரிய ஹோட்டல்களில் கூட கிடைக்காது.
கதாபாத்திரம்
இந்த இட்லி கடையை வைத்து நாம் ஏன் ஒரு படம் எடுக்கக் கூடாது என தோன்றியது. வெறும் இட்லி கடை மட்டுமின்றி அந்த கிராமத்தில் என் மனதை பாதித்த ஒரு சில உண்மை கதாபாத்திரங்களையும் அதன் பிறகு நாங்கள் சென்னை வந்த பிறகு என் மனதை பாதித்த சில உண்மை கதாபாத்திரங்களையும் வைத்து எழுதப்பட்ட கற்பனையான கதைதான் இந்த இட்லி கடை என தனுஷ் தெரிவித்தார்.
வறுமை
ஒரு பேட்டியில் தங்களது சிறு வயது காலம் குறித்து தனுஷின் சகோதரன் செல்வராகவன் கூறுகையில், தனுஷ் பிறப்பதற்கு முன்பு எங்கள் குடும்பத்தில் அத்தனை வறுமை இருந்தது. சட்டை கஞ்சி போட வேண்டும் என சொல்லி என் அம்மா பக்கத்து வீட்டிற்கு சென்று சாதம் வடித்த கஞ்சியை வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பார். அதில் உப்பு சேர்த்து குடிப்போம் என மிகவும் உருக்கமாக தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications