"தீதி தேரா தீவர் திவானா" பாட்டில் தேனில் கலந்த அந்த குரல்! மறக்க முடியாத பாடும் நிலா எஸ்.பி.பி.
சென்னை: பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை மறக்கவே முடியாது என்பதற்கு அவருடைய பல்வேறு பாடல்கள்தான் உதாரணம். அதிலும் ரஜினி, கமலுக்கு குரலை மாற்றி பாடுவதிலும் எஸ்பிபி வல்லவர்தான்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: எஸ்.பி.சாம்பமூர்த்தின்னு ஒரு ஹரிகதா வித்துவான் ஆந்திரால இருந்தாரு. இவருக்கும், இவர் மனைவி சகுந்தலாவுக்கும் ஐந்து மகன்கள். மூன்று மகள்கள். மகன்களில் ஒரூவர் தான் எஸ்.பி.பி.

பாலுவுக்கும் மனைவி சாவித்திரிக்கும் இரு குழந்தைகள். பல்லவி, சரண்(ணம்) என இருவர். சரண் தன் முதல் மனைவிக்கு இரு குழந்தைகள். விவாகரத்தாகி அமெரிக்கா போய்விட்டார். அபர்ணா என்கிற ஆந்திரத்தை சேர்ந்தவரை மணந்திருக்கிறார். பல்லவி காதலன் படத்தில் பாடி இருக்கிறார். இவர் திருமணமாகி அனிருத், சாம்பவி என்கிற இரண்டு குழந்தைகளுடன் வெளிநாட்டில் இருக்கிறார்.
பாலுவின் மூன்று சகோதரிகளில் ஒருவர் எஸ்.பி.ஷைலஜா. சலங்கை ஒலியில் நடித்தவர். இவர் தெலுங்கு நடிகர் சுபலேகா சுதாகரை மணந்தார். சித்தி, தென்றல் சீரியல்களில் சுதாகர் ஃபேமஸ் தானே.. இவர்களுக்கு ஒரு மகன். எம்.ஜி.ஆரின் 'நாளை நமதே' படத்தில் அன்பு மலர்களே பாடுவாரே நடிகர் சந்திரமோகன். எஸ்.பி.பியின் அண்ணியும், சந்திரமோகனின் மனைவியும் சகோதரிகள்.
சந்திரமோகனுக்கு பாலு பாடிய 'சுஜாதா ஐ லவ் யூ பாடல்' சூப்பர் ஹிட் ஆந்திராவில். சலங்கை ஒலி, சங்கராபரணம் எடுத்த தனுஷின் தாத்தாவாக நடித்த இயக்குனர் கே.விஸ்வநாத் யார் தெரியுமா? சந்திரமோகனின் பெரியப்பா மகன். 'பொட்டு வைத்த முகமோ' பாடல் நான் சிறுவனாக இருக்கும் போது வாரம் மூன்று முறையாவது ரேடியோவில் வந்துவிடும்.
அப்போதே இந்த பாடல் கவர்ந்துவிடும். என் அப்பா நல்ல மூட் என்றால் பாட்டுப் புத்தகத்தை எடுத்து வைத்து பாட ஆரம்பித்து விடுவார். அப்போது சிலோன் ரேடியோவில் ஹிட்டான ஒரு பாடல் உண்டு. 'உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்...'. அந்தப் பாடலின் மயக்கும் குரல் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் என்கிற பெயரை தினம் தினம் ரேடியோவில் கேட்டுக்கொண்டே பள்ளிக்கு போவோம்.
தெருவழியில் முதல் வீட்டில் சப்தமாக 'உன்னை நான் பார்த்தது' எனக் கேட்டு ஐந்தாவது வீட்டில் 'கம்பன் மகனாக நான் வாழ வேண்டும்...'..இப்படி தோளில் புத்தகப்பையோடு பாட்டு கேட்டுக் கொண்டே பாடல் முடிவதற்குள் பள்ளி வளாகம் வந்து விடும். அந்த பாடலை அப்பா பாடுவதை கேட்டு கேட்டு மனப்பாடமாகி விட்டது. பாலு என்கிற பாடகர் வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா, உனக்கென்ன மேலே நின்றாய் மூலம் எங்கள் பள்ளிக்கால இளமைக் காலத்தில் ரத்தமும் சதையுமாக கலந்து விட்டதே உண்மை..
ராஜபார்வை பார்த்துக் கொண்டிருக்கும் போது 'அந்தி மழை பொழிகிறது' பாட்டு தொடங்கும் போது தியேட்டரில் திடீர் பரபரப்பு.. விசில்.. எஸ்.பி.பி.... எஸ்.பி.பி என குரல்கள்... கண்ணாடி சதுரத்துக்குள் கண்களுக்குக் கீழ் கருவளையத்துடன் முன்னாள் சுருண்டு விழும் முடியுடன் பாடி நடித்தது இத்தனை நாள் குரலால் மயக்கிய எஸ்பி.பி என தெரிந்து கொண்ட தருணம்.
இவர் தான் எஸ்.பி.பாலசுப்ரமண்யமா? முதன் முதலில் மாமா கேசட் ப்ளேயர் வாங்கி வந்த வேளை அதில் பேசி ரெக்கார்ட் செய்து நம் குரலை நாமே கேட்பது.... நானோ பாடி பதிவு செய்தேன். 'சங்கீத மேகம்.. தேன் சிந்தும் நேரம்'.. பாலுவின் குரல் லாவண்யம் நமக்கு வராது என உணர்ந்த தருணம். கேரளாவில் இருந்த போது மலையாள நண்பர்கள் ஜமாபந்தியில் பாடிய 'பச்சமலப்பூவு... நீ உச்சிமலைத்தேனு..', முதன்முதல் போன் வாங்கியதும் குருவாயூரப்பனுக்கு நன்றியுடன் 'குருவாயூரப்பா...' பாடலின் ரிங் டோன்...
பாலு... உமது குரலுக்கு அருகே எந்த பாடகனாலும் வரமுடியாதையா?..
Didi tera dewar deewaanaa...பாட்டின் அந்த குழைவை எந்த பாடகனும் கொடுக்க முடியாதோ.. பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ளும் பாடலின் அந்த சிரிப்புக்காக யூடியூபில் எத்தனை முறை பார்த்திருப்பேன்.. சிவாஜி இரட்டை வேடத்தில் நடிக்கும் போது மூத்த சிவாஜிக்கு டி.எம்.எஸ் பாடும் போது, இளைய சிவாஜிக்கு பாலு தான் என விஸ்வநாதன் தீர்மானிக்கும் போதே தெரிகிறது.
குரல்களுக்கும் வயது இருக்கிறது. "யமுனா நதி இங்கே.. ராதை முகம் இங்கே.. கண்ணன் போவதெங்கே..." என சுசீலா பாடும் போது ஹாஹ்ஹா என ஹம் பாடும் பாலுவின் குரலில் தெரியும் இளமை தான் பாலு ஸ்பெஷல். திரிசூலம் படத்தில் சிவாஜிக்கு பாடும் போது டி.எம்.எஸ். மலர் கொடுத்தேன் என அப்பாவாக அமைதியாக பாட, அண்ணன் சங்கர் சிவாஜி போலீஸ் அதிகாரி என்பதால் "திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே" என ஆர்ப்பாட்டமில்லாத குரலில் யேசுதாஸ் பாடும் போது "என் ராஜாத்தி வாருங்கடி..." என ஆர்ப்பரிக்கும் குரலோடு குதித்து பாடிய பாலுவின் குரல் தான் மூன்று பேரில் இளையக்குரல். மூத்த டி.எம்.எஸ், அண்ணா யேசுதாஸ் பாடல்களுக்குப்பின் இளைய பாலுவின் குரல் தம்பியின் குரல்.
சல்மான்கான் 24 வயதில் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் பாலு 'மேரே ரங்குனே ரங்குன்ன வாலே' எனப்பாடும் போது சல்மானுக்கு மூத்தக் குரலாக பாலுவின் குரல் இல்லை என்பது எத்தனை வரம்.
வில்லனும், நாயகனும் பாடும் இரட்டைப் பாடகர்கள் பாடல்களில் மிக்கப் பாடல்களிலும் நாயகனுக்கு பாலுவின் குரல் தான் நியாயம் சேர்க்கும்.
"என்னம்மா கண்ணு..." என மலேஷியா வாசுதேவன் சத்யராஜுக்கு பாடினாலும் "ஆமாம்மா கண்ணு" என ரஜினிக்கு பாலுதான் பாட வேண்டும். உற்சாகக் குரல் வேண்டுமா?..."கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம். மூணும் மூணு பொண்ணுங்க. ஜாடை மத்தாப்பு. பார்வை கித்தாப்பு. மூணுக்கும் நாலரைக் கண்ணுங்க.... ஹேஹேஹே" என்ன உற்சாகம் இந்தப் பாட்டில். கித்தாப்பு... புதிய சில வார்த்தைகள் புழக்கத்தில் வந்தது பாலுவின் பாடல்களில்.
கித்தாப்பு தான் பின்னாளில் கெத்து என மாறியதோ என்னவோ?. "என்னடா பொல்லாத வாழ்க்கை" பாடல் வந்தது முதல் "ரொம்ப அலட்டுறான்டா", "அவன் அல்டாப்பு" என்கிற வார்த்தைகளெல்லாம் பேச்சு வழக்கத்துக்கு வந்தன. மான்டெஜ் ஸாங்...அதுவும் வெளிநாடுகளில் என்றால் பாலுவின் குரல் அடடா..."மான் கண்ட சொர்க்கங்கள்..." பாடலும், "அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம்" பாடலும், "சயனோரா.. வேஷம் கலைந்தது" பாடலும் அழகான காட்சியின் விரிவை குரல்களில் கொடுத்தவை.
ஒரே மாதிரி குரல் சலிச்சிடுச்சா... இந்தாங்க வெரைட்டி..."ஆடிம்மாசக் காத்தடிக்க வாடி புள்ள சேத்தணைக்க","எங்கெங்கும் கண்டேனம்மா" என குரல்களின் வெரைட்டியில் இது பாலு பாடியது தானா. வேறு ஆளா எனக் குழப்பமுறும் குரல் மாற்றம்....
"ஆள அசத்தும் மல்லி தான் மல்லி தான்" பாடல் எப்போக் கேட்டாலும் உடைச்சி வச்ச கோக் பாட்டில் மாதிரி. அப்படியே பொங்கி வழியும். என்ன ஒரு உற்சாகக் குரல்வளம் உற்சாகம் மட்டுமா? துயரங்களை அழகாக நமக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்வதில் பாலுவுக்கு நிகர் வேறு யார்?
"தேனே தென் பாண்டி மீனே.. நீ தான் செந்தாமரை... நெற்றி மூன்றாம் பிறை." என்ன ஒரு பாவம். துயரை அப்படியே நம் உள்ளுக்குள் அடித்து இறக்கும் குரல்... மறக்க முடியாது பாலு.... வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள்..... இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications