பாயாசம் எது? சனாதனம் எது? இளையராஜாவுக்கு "கேட்" போட்ட பூசாரி.. முர்மு நிலைமையே இதான்.. பிரபலம் நறுக்
சென்னை: இளையராஜா கருவறைக்குள் சென்று, பிறருக்கு முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது.. குடியரசு தலைவரே என்றாலும், அவர் வந்துசென்ற இடத்தை கழுவி விட்டுடுவாங்க.. இளையராஜாக்களே உள்ளே போக முடியாத சூழலில்தான் சனாதனம் இருக்கிறது" என்று பத்திரிகையாளர் ஜீவா தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் ஜீவா, இளையராஜா விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து முக்கிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

"எல்லா மக்களாலும் நேசிக்கக்கூடியவர் இளையராஜா.. காரணம், அவரது அசாத்திய திறன்.. இசையின் மீது அவருக்குள்ள காதலை வெளிப்படுத்தும்போது, அனைவருமே அதில் விழுந்துவிடுகிறோம். அற்புதமான கலைஞர் இளையராஜா. உலகம் முழுவதும் கொண்டாடக்கூடிய நபர்.. நம்ம பாஜக அரசுகூட அவருக்கு எம்பி பதவி தந்திருக்காங்க.. அவரை வைத்து நூல் வெளியீட்டு விழா நடத்தியிருக்கிறார்கள்.. காசி சங்கமும் நடத்தினார்கள்.
விமர்சனங்கள்: அந்தவகையில், இளையராஜாவுக்கு புகழுக்கும், பணத்துக்கும் குறைச்சலில்லை. துறைசார்ந்துகூடி அவரை யாருமே இதுவரை விமர்சித்தது இல்லை. ஆனால், இப்படிப்பட்ட இளையராஜாகூட, கோயில் கருவறைக்குள் நுழைய முடியாது. இதுதான் சனாதனம். இதுதான் இந்துத்துவா. ஆனால், இதே இளையராஜா பள்ளிவாசலுக்குள்ளும் போக முடியும்.. இதே இளையராஜா சர்ச்சுக்குள்ளும் போக முடியும். அங்கே யாரும் எந்த பாகுபாடும் பார்க்க மாட்டார்கள்.. இவர் எந்த மதம் என்றுகூட பார்க்க மாட்டார்கள்.
ஆனால், தன்னுடைய சொந்த மதத்தில், இளையராஜா என்ற மாமேதைக்கே இங்கே உரிமை கிடையாது. அவர்களது மொழியில் சொல்ல வேண்டுமானால், சனாதனம், அதற்கான தகுதியான நபராக இளையராஜாவை பார்க்கவில்லை. இதுதான் பிறப்பின் அடிப்படையான வேறுபாடு.
இளையராஜா: எல்லார்கிட்டயும் கம்பீரமாக பேசும் இளையராஜாவுக்கு இந்த நிலைமையா? இவருடைய இசைநிகழ்ச்சியில் ஒருத்தர் குடிக்கறதுக்கு தண்ணி கொண்டு வந்துட்டாரு. அதுக்கு எவ்ளோ திட்டு திட்டினாரு இளையராஜா? பத்திரிகையாளர் கேள்வி கேட்டால் அவ்ளோ கோபப்படுவாரே? அப்பக்கூட இளையராஜாவுக்காக நம்ம மக்கள் பரிந்துதான் பேசினார்கள்.
மிகப்பெரிய கடவுள் நம்பிக்கையாக இளையராஜா இருந்தும்கூட, இடதுசாரிகள், பெரியாரிஸ்ட்கள்கூட இளையராஜாவை நேசிப்பார்கள். பாஜக ஆதரவாக இருந்தாலும்கூட, திமுக, அதிமுக, திக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என யாருமே அவரை விமர்சித்ததில்லை காரணம், இந்த மண்ணின் மைந்தன், நம்ம தமிழன் என்பதால், அனைவருக்குமே இளையராஜா மீது பாசம், பற்று அதிகம் உண்டு.
கருவறை: ஆனால், கோயில் கருவறைக்குள் நுழைய கூடாது என்று சொல்வதற்கு, இளையராஜாவை விட இவர்கள் எல்லாம் என்ன சாதித்தார்கள் என்றுதான் எனக்கு தெரியவில்லை.
குடியரசு தலைவர் மட்டுமல்ல, நாளைக்குகூட பிரதமரைகூட தலித்துகளிலிருந்து பாஜக கொண்டுவரலாம். மாநில தலைவர்களாக தலித்துகளை கொண்டுவருவார்கள்.. மாவட்ட செயலாளர்களாக, மாநில தலைவர்களாக தலித்துகளை கொண்டு வருவாங்க.
ஆனால், இவர்கள் அந்த பதவிகளுக்கு ஆளுமைகளை கொண்டு வருகிறார்களா? அல்லது கீ கொடுத்து இயக்கும் பொம்மைகளையா? என்பதை பார்க்கவேண்டும்.
முர்மு நிலைமை: முதல் குடிமகன் ராம்நாத்கோவிந்த்தை கோயிலுக்குள் விடலையே? முர்முவை என்ன நிலைமையில் இவர்கள் வைத்திருக்கிறார்கள்? பாராளுமன்ற கட்டிட விழாவுக்கு கூப்பிடலையே? ராமர் கோயிலுக்கு கூப்பிடலியே? ஒருமுறை கோயிலை முர்மு சுத்தப்படுத்தியதற்கு, அந்த போட்டோவை போட்டு பாராட்டறாங்க.. ஒரு குடியரசு தலைவரின் வேலை கோவிலை சுத்தப்படுத்துவதா? அங்கீகாரம், சுயமரியாதையை இவர்கள் தரவே மாட்டாங்க
எம்பி பதவியை இளையராஜாவுக்கு தருவார்கள். ஆனால், அவருக்கான ஆளுமைக்கான, அவரது மரியாதையை இந்த சனாதனம் கொடுப்பதில்லை. இதுதான் பெரியாரின் போராட்டமாகும். என்ன இருந்தாலும் இளையராஜா, ஒரு சூத்திரரோ, பஞ்சமரோதான்.. அதுதான் நால்வர்ணம்.. நீங்க மேஸ்ட்ரோவா இருங்க, ஆனால், உள்ளே வரக்கூடாதுன்னு அந்த நாமம் போட்டவர் எடுத்து சொல்றாரு. "உள்ளே போயிடாருதங்க, கேட் கிட்ட நில்லுங்க சார்"
ஸ்டாலின் அதிகாரம்: ஸ்ரீவில்லிப்புத்துர் கோயில் தமிழ்நாட்டில் ஸ்டாலின் கன்ட்ரோலில் தானே இருக்கிறது? அப்ப ஸ்டாலின் இதுகுறித்து நடவடிக்கை எடுத்திருக்கலாமே? என்ற சிலர் கேட்கிறார்கள். ஸ்டாலின் என்றில்லை, ஜெயலலிதா, எடப்பாடி, காமராஜர் யாராலும் அது முடியாது என்பதே உண்மை.. இதுதான் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்.
இளையராஜா கருவறைக்குள் சென்று, முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது.. குடியரசு தலைவரே என்றாலும், அவர் வந்துசென்ற இடத்தை கழுவி விட்டுடுவாங்க.. இளையராஜாக்களே உள்ளே போக முடியாத சூழலில்தான் சனாதனம் இருக்கிறது.
எது பாயாசம்: சாதாரண பூசாரிதானே? அந்த வேலைக்கு ஏன் ஆசைப்படறீங்க? பூசாரிகளே அந்த வேலையை செய்யட்டும்ன்னு கேட்கறாங்க. அந்த சம்பளம் குறைவாக வாங்குற சாதாரண பூசாரிக்கு இருக்கிற அதிகாரம்கூட, மேஸ்ட்ரோ இளையராஜாவுக்கு இல்லை என்றால், இதற்கு பெயர் என்ன? தயவுசெய்து சிந்தியுங்கள் மக்களே... எது பாசிசம்? எது பாயாசம்? எது சனாதனம்? எது கொடுமை? என்பதை புரிந்து கொள்ளுங்கள்" என்றெல்லாம் கூறியிருக்கிறார் பத்திரிகையாளர் ஜீவா.












Click it and Unblock the Notifications