ஜெயிலர் 2 எப்படி இருக்கு? சூப்பர் ஸ்டார் ஜொலித்ததா? டல் அடித்ததா? விமர்சனம் இதோ
சென்னை: ரஜினிகாந்த் ரசிகர்கள் இத்தனை நாளாக காத்திருந்த ஜெயிலர் 2 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அதிலும் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் இருந்தது.
வழக்கமாக பெரிய படங்கள் என்றாலே வெளியீட்டுக்கு முன்பே புரமோஷன், இசை வெளியீட்டு விழா என்று அமர்க்களப்படும். ஆனால், ஜெயிலர் 2 படக்குழுவினர் இந்த முறை அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இந்நிலையில், முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த விமர்சனங்களைப் பார்த்தால், ரஜினியின் மாஸ், நெல்சனின் காமெடி, அனிருத்தின் பின்னணி இசை எனப் பல விஷயங்கள் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கின்றன. அதே நேரத்தில், இரண்டாம் பாதி எப்படி இருக்கிறது என்பதிலும் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜெயிலர் 2 விமர்சனம்
ஜெயிலர் 2 படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகப் பல ரசிகர்கள் தங்களுடைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர். ரஜினிகாந்த் வரும் காட்சிகள், அவருடைய ஸ்டைல், நெல்சனின் டார்க் காமெடி எனப் பல இடங்களில் படம் ஜாலியாக நகர்வதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, ரஜினியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்துக்குப் பெரிய பலமாக இருப்பதாகப் பாராட்டுகள் வருகின்றன. அவர் அதிகமாகப் பேசாமல், தனது உடல்மொழியாலும் பார்வையாலும் ரசிகர்களைக் கவரும் தருணங்கள் ரசிக்க வைப்பதாகப் படத்தைப் பார்த்தவர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு அனிருத்தின் பின்னணி இசையும் சேரும்போது திரையரங்கில் கொண்டாட்டமான அனுபவம் கிடைப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
இரண்டாம் பாதி
முதல் பாதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இரண்டாம் பாதி விஷயத்தில் ரசிகர்களின் கருத்துகள் கலவையாக இருக்கின்றன. சிலர் இரண்டாம் பாதியில் வழக்கமான மசாலா காட்சிகளும் அதிகப்படியான மாஸ் தருணங்களும் இருப்பதாகக் கூறுகின்றனர். இன்னும் சிலருக்கு திரைக்கதை பல இடங்களில் தடுமாறுவது குறையாகத் தெரிந்திருக்கிறது.
குறிப்பாக, முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாகத்தில் முழுமையாக இல்லை என்பதுதான் சில ரசிகர்களின் கருத்து. கதையை இன்னும் ஸ்ட்ராங்காக கொண்டு சென்றிருக்கலாம் என்றும், சில கதாபாத்திரங்களுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்றும் விமர்சனங்கள் வருகின்றன.

எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன் தொடர்பான காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு ஸ்ட்ராங்காக அமையவில்லை என்றும் சிலர் சொல்லுகின்றனர். படத்தில் அடுத்தடுத்து மாஸ் காட்சிகள் வந்தாலும், அவற்றை இணைக்கும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது ஒரு தரப்பு ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.
கேமியோக்கள் என்ட்ரி
ஜெயிலர் 2 படத்தில் யார் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்திருந்தது. படத்தில் இடம்பெறும் கேமியோக்கள் குறித்து ரசிகர்கள் கலவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் கேமியோக்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறினாலும், ஹிருத்திக் ரோஷனின் என்ட்ரி கவனிக்க வைப்பதாக ஒரு விமர்சனம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்கள் திரையில் வரும் காட்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
ஆனால், முதல் பாகத்தில் கேமியோக்கள் ஏற்படுத்திய அதே அளவிலான ஆச்சரியத்தையும் தாக்கத்தையும் இரண்டாம் பாகத்தில் எதிர்பார்த்தவர்களுக்கு முழுத் திருப்தி கிடைக்கவில்லை என்பதும் சில விமர்சனங்களில் தெரிகிறது. அதாவது, பெரிய நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே எல்லா காட்சிகளும் மனதில் நிற்கவில்லை என்பதுதான் சிலருடைய கருத்து.

அனிருத் இசை
ரஜினியின் மாஸ் காட்சிகளுக்கு அனிருத்தின் பின்னணி இசை எப்போதுமே கூடுதல் உற்சாகத்தைக் கொடுக்கும். ஜெயிலர் 2 படத்திலும் அந்தக் கூட்டணி ரசிகர்களைக் கவர்ந்திருப்பதாகப் பல விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. ஆக்ஷன் காட்சிகள், ரஜினியின் மாஸ் தருணங்கள் எனப் பல இடங்களில் பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்ப்பதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர். திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு இருந்தாலும், இசையும் ரஜினியின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் சேர்ந்து படத்தைத் தொடர்ந்து பார்க்க வைக்கின்றன என்பதுதான் ஒரு தரப்பு விமர்சகர்களின் கருத்து.
Jailer 2: தனுஷ், ஐஸ்வர்யா ஒரே தியேட்டரில்.. அரசியல் கணக்கு நினைவாகிறதா? பின்னணி விஷயம்!
இதுதான் இப்போது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் முக்கியமான கேள்வி. முதல் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மாஸ், நெல்சனின் டார்க் காமெடி, எதிர்பாராத திருப்பங்கள் என எல்லாமே சரியான அளவில் அமைந்திருந்ததாகப் பலரும் நினைக்கிறார்கள். அதனால் இரண்டாம் பாகத்தையும் அதே அளவுகோலில் வைத்துப் பார்க்கின்றனர். ஆனால், இப்போதைக்கு வெளியாகியுள்ள ரசிகர்களின் விமர்சனங்களைப் பார்த்தால், ஜெயிலர் 2 முதல் பாகத்தின் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற கருத்தும் இருக்கிறது.
Jailer 2: ஜெய்லர் 2 படத்துக்கு சிவகார்த்திகேயன் போட்ட போஸ்ட்.. தனுஷின் அதிரடி பதிவு
மொத்தத்தில், ஜெயிலர் 2 படத்தைப் பார்த்த ரசிகர்களின் கருத்து ஒரே மாதிரியாக இல்லை. முதல் பாதியில் ஜாலியாக ரசிக்க வைக்கும் தருணங்கள் இருக்கின்றன; இரண்டாம் பாதியில் திரைக்கதை இன்னும் ஸ்ட்ராங்காக இருந்திருக்கலாம் என்பது சிலரின் குறை. ஆனாலும், ரஜினியின் ஸ்டைலையும் மாஸ் காட்சிகளையும் ரசிப்பவர்களுக்கு படம் சில நல்ல தருணங்களைக் கொடுக்கிறது என்பதுதான் இப்போதைய சமூக வலைதள விமர்சனங்களின் சாரம்.


Click it and Unblock the Notifications
