தூரத்தில் உள்ள மகளை நினைத்து பாடிய ராஜேஷ்.. அவள் பறந்து போனாளே.. டிரஸ்ஸை பார்த்து பூரிப்பு.. பிரபலம்
சென்னை: இதுவரை நடிகர் ராஜேஷ் மீது எந்தவிதமான கிசுகிசுவும் வந்ததில்லை.. இப்போதுதான் முதல்முதலாக அவரது மரணத்தை மர்மமாக சிலர் பேசுகிறார்கள்.. அப்படி யாருமே பேசக்கூடாது.. இது இயற்கையான மரணம்.. வயது மூப்பு காரணமாகவே இந்த மரணம் வந்துள்ளதால், சர்ச்சையாக பேசவேண்டிய அவசியமில்லை" என்று தெளிவுபடுத்தியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "காரல் மார்க்ஸ் கல்லறைக்கு ஒருமுறை சென்றிருந்த ராஜேஷ், அதுபோலவே தனக்கும் கல்லறை கட்ட முடிவு செய்தார்.. அந்த கல்லறையின் வடிவமைப்பு, கட்டுமான பணிகள், நுணுக்கங்கள், போன்றவற்றை விரிவாக ஆராய்ந்துள்ளார்..

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கொருமுறை, சிலகுறிப்பிட்ட அடிகளுக்கு அந்த கல்லறை கீழே இறங்குமாம்.. இதற்கு அடுக்கு கல்லறை என்பார்கள்.. இப்படி பல நுட்பங்களை அறிந்து வந்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் கல்லறையை கட்டியிருக்கிறார்..
பைபிள் வாசகம் - சிலுவை
அந்த கல்லறையில் முதல்முதலாக தன்னுடைய அம்மாவை அடக்கம் செய்தார்.. பிறகு தன்னுடைய அப்பா, தன்னுடைய மனைவியை அதே கல்லறையில் அடக்கம் செய்தார்.. நல்ல பொருட்செலவில் அந்த கல்லறையை உருவாக்கியிருந்தார்..
அத்துடன் தன்னையும் அங்குதான் அடக்கம் செய்ய வேண்டும், தனக்கு பிடித்த பைபிள் வசனங்களையும் கல்லறையில் பொறிக்க வேண்டும், சிலுவை இருக்க வேண்டும் என்றெல்லாம் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தாராம்...
எந்த காலத்திலும் தன்னுடைய மரணத்தை பற்றி அவர் பயப்படவே இல்லை. கடைசியாக, தன்னுடைய மரணத்தை உணர்ந்துதான், ஆம்புலன்ஸில் மருத்துவமனை செல்லும்போது, மகனின் கன்னத்தை வருடி, கைகளில் முத்தம் தந்துள்ளார்..
அவள் பறந்து போனாளே
கனடாவில் வசித்து வரும் தன்னுடைய மகள் மீது அதிக பாசத்தை வைத்திருந்தார். ராஜேஷ்.. ஒரு பேட்டியில் சொல்லும்போது, அவள் பறந்து போனாளே என்ற பாடலை பாடி காட்டியிருந்தார்.. இந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் என் மகள் ஞாபகம் வந்துவிடும்.. என் வீட்டு படிக்கட்டிலிருந்து இறங்கும்போதெல்லாம் மகளின் நினைவு வாட்டிஎடுத்து விடும். அவ்வளவு தூரத்தில் மகளை கட்டிக் கொடுத்து விட்டேன், என் மகளின் பிரிவை தாங்க முடிவதில்லை" என்று சொல்லியிருந்தார். அதேபோல, அப்பா மீது மகளுக்கும் அளவுக்கு அதிகமான பாசம் உண்டு..
சமீபத்தில்கூட ஐசரி கணேஷ் இல்ல திருமணத்தில் பங்கேற்றிருக்கிறார்.. நல்ல உடல்நிலையுடன், நல்ல மனநிலையுடன்தான் வாழ்ந்து வந்துள்ளார்.. திடீரென ராஜேஷ் இறப்பு அதிர்ச்சிதான்.. அதனால்தான் எஸ்வி சேகர், பார்த்திபன் போன்றோர் தங்களது அதிர்ச்சியை தாங்க முடியாமல் பேட்டிகளை தந்திருந்தனர்..
மருத்துவம் புரமோஷன்
ராஜேஷ் மரணத்துக்கு பிறகு, அலோபதி தவிர மற்ற மருத்துவத்தை புரமோஷன் செய்வதற்காகவே யூடியூப்பை பயன்படுத்தி கொண்டார் என்று சிலர் ராஜேஷை விமர்சிப்பதை ஏற்க முடியாது. பொதுவாக ஒருவர் இறந்துவிட்டால் அவர்களை பற்றி தவறாக பேசுவது அநாகரீகம். அதுவும் ராஜேஷ் போன்ற நல்ல மனிதர்களை பற்றி அபாண்டமாக சொல்லவே கூடாது..
ராஜேஷின் மகனுக்கு 35 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. சினிமாவில் வெற்றி பெற்ற பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தது, ராஜேஷூக்கு ஒருவித வருத்தத்தை தந்திருந்தது.
மகனுக்கு ஆசீர்வாதம்
இதற்கு நடுவில் மகன் ஒரு படத்திலும் நடித்துள்ளார்.. அந்த படத்தை ராஜேஷ் பார்த்துவிட்டு, "நல்லா நடிச்சிருக்கே, சின்ன சின்ன திருத்தங்கள் மட்டும் சரிசெய்துக்கோ" என்று சொல்லி ஆசீர்வாதம் செய்திருக்கிறார்.
இதற்கு பிறகுதான், திருமணத்துக்கு சம்மதம் சொல்லி, ராஜேஷூம் மகனுக்காக தன்னுடைய சொந்த ஊரிலேயே பெண் பார்த்துள்ளார்.. வரும் 6ம் தேதி நிச்சயதார்த்தமும், 2 மாதத்தில் திருமணம் என்றும் முடிவாகியிருந்தது..
எனவே கடந்த சில நாட்களாகவே நிச்சயதார்த்த வேலைகளும் நடந்துள்ளன.. சமீபத்தில துபாயிலிருந்து திரும்பி வந்த அப்பாவிடம், தன்னுடைய நிச்சயதார்த்த உடைகளை மகன் காண்பித்துள்ளார்.. அத்துடன் ராஜேஷுக்கும் டிரஸ் எடுத்து காண்பித்து, "நல்லா இருக்கா?" என்றெல்லாம் கேட்டுள்ளார்.. அந்த உடைகளை எல்லாம் பார்த்து ராஜேஷ் சந்தோஷப்பட்டாராம்..
எப்படியாவது மகனுக்கு திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்பதே அவரது கடைசி ஆசையாக இருந்துள்ளது.. யாருமே எதிர்பாராத நேரத்தில்தான் இப்படியாகிவிட்டது..
99 வயது வரை வாழ்க்கை
99 வயதுவரை எப்படி வாழ்வது என்பதை சொல்லி தருகிறேன் என்று சொல்லி பல நடிகர்களை தன்னுடைய வீட்டுக்கு அழைப்பாராம் ராஜேஷ்.. அதன்படியே நடிகர்களும் ராஜேஷ் வீட்டுக்கு சென்றால், அவர்களுக்கு உணவு மற்றும் ஆரோக்கியமான அறிவுரைகளை தந்துள்ளார்.. இன்னமும் அதையெல்லாம் அவர்கள் கேட்டு நடந்து வருகிறார்கள்..
அதேபோல, பலவிதமான நூல்களை படித்து அறிந்துதான் ஜோதிடத்தை கற்றுள்ளாரே தவிர, கண்மூடித்தனமாக எதையும் சொன்னதில்லை.. பல சினிமா சம்பந்தப்பட்டவர்கள், ஜோதிடம் கேட்பதற்காகவே ராஜேஷை அணுகி வருவார்கள்.. இதில் ராஜேஷ் சொன்ன பல ஜோதிடம் பலித்திருக்கிறது..
ரஜினிகாந்த் - ஆன்மீகம்
ரஜினிகாந்த், ராஜேஷ் இருவருமே பலமுறை சந்தித்து, உடல் ஆரோக்கியம், ஆன்மீகம் சம்பந்தமாக பல தகவல்களை பரிமாறி கொள்வார்களாம்..
இதுவரை ராஜேஷ் மீது எந்த கிசுகிசுவும் வந்ததில்லை.. இப்போதுதான் முதல்முதலாக அவரது மரணத்தை மர்மமாக ஒருசிலர்பேசுகிறார்கள்.. அப்படி யாருமே பேசக்கூடாது.. இது இயற்கையான மரணம்.. வயது மூப்பு காரணமாகவே இந்த மரணம் வந்துள்ளதால், சர்ச்சையாக பேசவேண்டிய அவசியமில்லை" என்று தெளிவுபடுத்தியிருக்கிறார் பாலாஜி பிரபு.












Click it and Unblock the Notifications