ஜெயிலர் 2க்கு ரூ.1,000 டிக்கெட்! ரஜினியை கலாய்த்து முதல்வர் விஜய்யை விளாசிய ப்ளூ சட்டை மாறன்
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், தாம்பரத்தில் படத்தின் டிக்கெட் பிளாக்கில் ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், முதல்வர் விஜய்யையும் நடிகர் ரஜினிகாந்தையும் விமர்சித்திருப்பது இப்போது பேசுபொருளாகியுள்ளது.
பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பதாக அவ்வப்போது புகார்கள் எழுகின்றன. இப்போது ஜெயிலர் 2 படத்துக்கும் அப்படியொரு புகார் எழுந்திருப்பதுதான் இந்த சர்ச்சைக்குக் காரணம்.

ரூ.1,000-க்கு ஜெயிலர் 2 டிக்கெட்
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், தாம்பரத்தில் டிக்கெட் ஒன்று ரூ.1,000-க்கு பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும், ஒரு படத்தைப் பார்க்க இவ்வளவு தொகை கொடுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

ரஜினிகாந்தின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளியாகியிருப்பதால், முதல் நாளிலேயே படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பலரிடம் இருந்திருக்கும். இதுபோன்ற சூழலில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகப் புகார் எழுவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

ப்ளூ சட்டை மாறன் பதிவு
இந்த வீடியோவைப் பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், தனது பதிவில், "தன் படங்களுக்கு பிளாக் டிக்கெட் விற்றபோது ஒருவார்த்தை கூட பேசாதவர் தற்போது முதல்வராகி லஞ்சம், ஊழலை ஒழிக்க வந்துள்ளார். இவரை விட சீனியரான தலீவரும் ப்ளாக் டிக்கெட் விற்பனை பற்றி பேசுவதில்லை. ஆன்மீகம், நீதி பற்றி மட்டும் பேசுவார். Shame" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
விஜய் நடிகராக இருந்த காலத்தில் அவரது படங்களுக்கான டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தபோது, அவர் அதுகுறித்துப் பேசியிருக்கிறாரா என்ற கேள்வியைத்தான் ப்ளூ சட்டை மாறன் முன்வைக்கிறார். இப்போது முதல்வராகப் பொறுப்பேற்று லஞ்சம், ஊழலை ஒழிப்பது குறித்துப் பேசும் விஜய், திரையரங்குகளில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவது போன்ற பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த வேண்டாமா என்பதுதான் அவரது விமர்சனத்தின் சாராம்சம்.

ரசிகர்கள் கருத்து
சும்மாவே ரஜினிகாந்தை ப்ளூ சட்டை மாறன் ஒவ்வொரு முறையும் விமர்சித்து வருவார், இப்பயே அவருக்கு ஒரு பாயிண்ட் கிடைத்துவிட்டது சும்மாவா விடுவார்? காலையிலிருந்து ஜெயிலர் 2 படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் வந்ததும் அதை ப்ளூ சட்டை மாறனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை போல உடனே இந்த வீடியோவை தூக்கிக்கிட்டு வந்துட்டாரு என்று நெட்டிசன்கள் அவரையே கலாய்த்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
