காருக்குள் கால் வைத்து, வயிற்றில் குத்திய எம்ஜிஆர்.. சொல்லும்போதே குண்டு கல்யாணத்துக்கு மகிழ்ச்சி
சென்னை: மறைந்த புரட்சித்தலைவர் வாழ்ந்த காலம் என்பது ஒரு பொற்காலம்.. அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதைவிட அவருடனே வாழ்ந்தோம் என்பது பெரிய பெருமை என்று நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் கூறியிருக்கிறார் குண்டு கல்யாணம்.
NewsG1 என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த நடிகர் குண்டு கல்யாணம் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பற்றின நெகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்து கொணடுள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

"பாலச்சந்தர் சார் வீட்டு கல்யாணம் நடந்தபோது, வந்திருந்த ஆண்களை எல்லாம் கற்கண்டு தந்து நான் வரவேற்று கொண்டிருந்தேன். பெண்களை சரிதா வரவேற்று கொண்டிருந்தார். நான் இந்தபக்கமும், சரிதா அந்த பக்கமும் எதிரெதிர் திசையில் நின்று வரவேற்று கொண்டிருந்தோம்.
கற்கண்டு: அப்போது திடீர்னு எம்ஜிஆர் உள்ளே வந்துட்டாரு.. அவர் உள்ளே வருவதால், நான் கற்கண்டு எடுத்துக்கொண்டு அவரை வரவேற்க போனேன்.. அப்போது திடீரென ஒரு கூட்டம் அங்கு திரண்டு, என்னை தள்ளி விட்டுவிட்டார்கள்.. இதனால், அவருக்கு என்னால் கற்கண்டு தர முடியாமல், வரவேற்க முடியாமல் போய்விட்டது. இது எனக்கு பயமாகிவிட்டது. நாம கவனிக்காவிட்டாலும், அவர் எல்லாரையுமே கவனிக்கக்கூடியவர்.
அதனால், கல்யாணத்தை முடித்துவிட்டு வரட்டும், அப்போது மன்னிப்பு கேட்டு கொள்ளலாம் என்று நினைத்து, அவரது கார் அருகில் நின்று கொண்டேன். அங்கே யாருமே இல்லை. எம்ஜிஆர் வந்திருந்ததால், எல்லோரும் மண்டபத்துக்குள் இருந்தார்கள்.. பிறகு, முதலில் ஜானகி அம்மா வெளியே வந்தார். என்னை பார்த்து நல்லா இருக்கியா? என்றெல்லாம் வழக்கம்போல் பேசிவிட்டு காருக்குள் ஏறிக் கொண்டார்.
பிரபலங்கள்: பிறகு முதலமைச்சர் எம்ஜிஆர் வந்தார்.. அவரை வழியனுப்ப பாலச்சந்தர் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வந்தார்கள்.. அப்போது என்னை எம்ஜிஆர் பார்த்துவிட்டார். எல்லாரையும் விட்டுவிட்டு, என்னிடம் வந்தார்.. கார் கதவை திறந்து, காரில் ஒரு கால் வைத்து, என் வயிற்றிலேயே ஒரு குத்து குத்தி விளையாடினார். "இப்போ உன்னால குனிய முடியுதா? சாப்பிட்டியா?" என்று கேட்டார்.. பிறகு என்னிடம் மட்டும், "போயிட்டு வரேன்"னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு.
இத்தனைக்கும் அவர் அப்போது முதலமைச்சர்.. இதை பார்த்த பாலச்சந்தர் என்னிடம், "உன்கிட்ட செல்வாக்கு இருக்கும்னு தெரியும், ஆனால், இவ்ளோ செல்வாக்கு இருக்கும் என்று எனக்கு தெரியாது" என்றார்.. இதைக்கேட்டு நான் மிரண்டு போய்ட்டேன். எம்ஜிஆரின் கால் தூசுக்குகூட நான் கிடையாது.. ஆனால், உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற பேதம் அவருக்கு கிடையாது..
போட்டோ: லண்டன் பக்கிங்காம் அரண்மனை விழாவுக்கு ஒருமுறை அழைத்து சென்றிருந்தார்கள்.. அப்போது உள்ளே சுத்தி பார்த்துவிட்டு, போட்டோ எடுப்பதற்காக நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு வெளிநாட்டு நபர் என்னிடம், are you coming from? என்று கேட்டார்,
அதற்கு நான், "India Tamil Nadu" என்றேன்.. உடனே அவர், "Oh, MGR State?" என்று கேட்டதுமே நான் திகைத்து போய்விட்டேன்.. அதாவது தமிழ்நாடு என்றால் அது எம்ஜிஆர் நாடு என்ற அளவுக்கு பெருமையை உயர்த்தியவர் எம்ஜிஆர். இதை நான், ஜானகி அம்மா கிட்டயே ஒருமுறை சொன்னேன்.. நான் சொன்னதை அப்படியே எம்ஜிஆர் கிட்ட ஜானகி அம்மா சொன்னாங்களாம்.. அவர் அதை கேட்டுட்டு சந்தோஷப்பட்டாராம்.
பொற்காலம்: இதெல்லாம் பெரிய குடுப்பினை. அவர் வாழ்ந்த காலம் என்பது ஒரு பொற்காலம்.. அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதைவிட அவருடனே வாழ்ந்தோம் என்பது பெரிய பெருமை என்றெல்லாம் நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications