கல்வியே ஆயுதம்.. 6,700 முதல் தலைமுறை பட்டதாரிகள்.. நம்பிக்கை நனவாகிருச்சு.. சூர்யா நெகிழ்ச்சி!
சென்னை: கல்வியே ஆயுதம் என்ற நம்பிக்கை நனவாகி இருப்பதாக அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழாவில் நடிகர் சூர்யா பேசி இருக்கிறார். அகரம் தொண்டு நிறுவனம் மூலமாக சுமார் 6,700 முதல் தலைமுறை பட்டதாரிகள் பட்டப்படிப்பை முடித்து பணியில் சேர்ந்திருப்பதாகக் கூறிய சூர்யா, அவர்களே இப்போது அகரம் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா ஏழை மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அகரம் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த அகரம் தொண்டு நிறுவனத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்து பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் என்று அல்லாமல், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மாணவர்களை கண்டறிந்து உதவி செய்யப்பட்டு வருகிறது.

மலைக் கிராமங்களில் வாழும் மாணவர்கள், பெற்றோரை இழந்த மாணவர்கள், படிக்க வசதியில்லாத மாணவர்கள் என்று பல்வேறு பகுதிகளிலும் கண்டறிந்து அகரம் தொண்டு நிறுவனம் சார்பாக உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசுகையில், கல்வியே ஆயுதம்.. இதுதான் அகரத்தின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை நனவாகி இருக்கிறது. கல்வி என்பது படிப்பு மட்டுமல்லாமல் பண்பைச் சொல்லிக் கொடுப்பதும், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதும் தான். அதனை இன்று மடங்கு மாணவர்கள், மாணவிகள் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அந்த சந்தோஷத்தைப் பகிரும் நாள் இன்று. கிட்டத்தட்ட 6,700 முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து பட்டதாரியாக மாறி இருக்கிறார்கள். கல்லூரியில் சேர்ந்து நல்ல மதிப்பெண் பெற்று வேலைக்கு சென்று நிறைய சம்பாதித்திருக்கிறார்கள். அவர்களின் தலைமுறையில் யாரும் பார்க்காத வளர்ச்சி அந்த மாணவி மூலமாகவும், மாணவர் மூலமாகவும் அந்த குடும்பங்களுக்கு கிடைத்திருக்கிறது.
அது சந்தோஷம்.. ஆனால் பெருமை அளிக்கிறதா என்றால், அது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அகரம் மூலம் படித்த மாணவர்களும், மாணவிகளும் பலமடங்கு திரும்ப கொடுத்திருக்கிறார்கள். இப்போது அகரத்தை நடத்திக் கொண்டிருப்பதே முன்னாள் மாணவர்களும், மாணவிகளும் தான். அப்படிப் பார்த்தால், இந்த சமுதாயத்தில் அவர்களைப் போல் கஷ்டப்படும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் உதவி செய்வதற்காகக் களமிறக்கி இருக்கிறார்கள்.
அதனை நினைத்து ஒவ்வொருவரும் பெருமை கொள்கிறோம். அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் நாள் இது. ஒவ்வொரு மாணவியும், மாணவரும் கல்வி மூலம் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது என்று பகிரப் போகிறார்கள். கல்வி மூலம் கிடைக்கும் நம்பிக்கை கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications