ரிதன்யாவின் ஒருவனுக்கு ஒருத்தி.. நாய் மாதிரி நடத்தறான்ப்பா.. இதுக்கு பொண்ணுங்க நம்முடனே இருக்கட்டுமே
சென்னை: அன்பின் மீதான திருமணம் மட்டுமே நிலைக்குமே தவிர, பொருளின்பால் பட்ட திருமணம் என்றும் நிலைக்காது.. இப்படியெல்லாம் செய்தால்தான் மகளின் திருமணம் நடக்கும் என்றால், அப்படிப்பட்ட திருமணமே நம்முடைய பெண்களுக்கு தேவையில்லை, நம்ம வீட்டில் அந்த பெண்கள் எப்போதுமே சந்தோஷமாக இருக்கட்டும் என்ற தெளிவு இன்றைய பெற்றோர்களுக்கு வரவேண்டும் என்று, மூத்த வழக்கறிஞர் சுமதி தெரிவித்துள்ளார். ரிதன்யாவின் ஆடியோ விவகாரம் குறித்து பல்வேறு தகவல்களையும் சுமதி பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Thamizh Alai என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் சுமதி பேசும்போது, "நான் நிறைய குற்றவழக்குகளை எடுத்து நடத்தியிருக்கிறேன்..

அப்போது, மரண வாக்குமூலம் என்று நாங்கள் வாசிக்க நேரிடும்.. ஆனால், முதன்முதலாக ஆடியோவில் மரண வாக்குமூலம் ரிதன்யா மூலம் கேட்டேன்.. சமூகத்தில் என்ன நடக்கிறது? பெண் குழந்தைகளை எப்படி வளர்த்து கொண்டிருக்கிறோம்? என்னவிதமான கருத்தியல்களை பெண்களுக்கு சொல்லி தருகிறோம்? ஒழுக்கம் என்று எதை நாம் நம்புகிறோம்? என்ற கேள்விகள் எழுகின்றன..
எது ஒழுக்கம்
மூத்த தலைமுறை எதை ஒழுக்கம் என்று நம்புகிறதோ அதைத்தான் அடுத்த தலைமுறையும் நம்புகிறது.. ஒரு பெண் தான் அனுபவிக்கும் கஷ்டத்துக்கு, கணவன்தான் காரணம் என்றாலும், அந்த கணவனை விட்டு, விலகக்கூடாது என்று எந்த அறமும் சொல்லவில்லை. அப்படி வலியுறுத்தி சொன்னால், அது அறம் ஆகாது.
ரிதன்யா குடும்பத்தை மட்டும் சொல்லவில்லை, இது தலைதலைமுறையாக பெரும்பாலான குடும்பங்களில் உள்ளது.. எவ்வளவு துன்பம் என்றாலும், செத்தாலும் கணவன் வீட்டில்தான் சாகணும்,என்பதையே காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது..

"உடலளவிலும், மனதளவிலும் எனக்கு தெம்பில்லை" என்று ரிதன்யா ஆடியோவில் சொல்கிறார் என்றால் அப்படி சொல்ல என்ன காரணம்? இப்படி வாழ்வதுதான் வாழ்க்கை என்று அந்த பெண்ணுக்கு புகப்பட்டப்பட்டிருக்கிறது. கணவனால் பாதிப்பு ஏற்பட்டு, அந்த பெண் கணவனை பிரிந்து இன்னொருவருடன் வாழும்போது, அந்த பெண் ஒழுக்கத்திலிருந்து தவறிவிட்டதாக இந்த சமூகம் சொல்கிறது.
மறுமணம் தவறா
நகர்ப்பகுதிகளில் மறுமணம், மறுவாழ்க்கை என்பது சாதாரணமாக இருந்தாலும், தமிழகத்தின் சிற்றூர்களிலும், கிராமப்பகுதிகளிலும் இதே கருத்தியலை ஏற்றுக் கொள்வதில்லை.. அதிலும் பெண்களுக்கு கிடையவே கிடையாது..
எனக்கு இன்னொரு கல்யாணம செய்தால், அந்த புருஷன் மட்டும் என்னை நல்லா வைத்து கொள்வான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்றெல்லாம் ரிதன்யா கேட்கவில்லை.. மாறாக, "என்னால இன்னொரு வாழ்க்கையை யோசிக்கவே முடியாது" என்கிறார்.. அதாவது,இன்னொரு வாழ்க்கை பற்றி சிந்திப்பதுகூட தவறு, அது ரொம்ப பாவம் என்பதுபோல ரிதன்யா மனம் இருந்துள்ளது..
ஆசையில்லாத கணவன்
ஒரு பெண் தன்னுடைய பிரச்சனைகளை சொல்லி அழும்போது, "கொஞ்ச நாள் எங்களுடன் வந்து தங்கியிரு, பிறகு பார்த்து கொள்ளலாம்" என்று பெற்றோர் சொல்லியிருக்க வேண்டும்.. 78 நாளில் இவ்வளவு பிரச்சனைகள் வருகிறது என்றால் என்ன அர்த்தம்? மனைவியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற ஆசையே கணவனுக்கு இல்லை.
ஆசையே இல்லாத வீட்டில் அந்த பெண் வாழ முடியும்? அன்பும், காதலும் இல்லாத இடத்தில், வியாபாரமும், பணமும் நகையும் பெரிதாக கருதும் இடத்தில், அவன் வாழ லாயக்கில்லாதவன் என்று என்று முடிவெடுக்க ஏன் பெரியவர்களுக்கு தோன்றவில்லை?

மன்னிருங்கப்பா
அடிக்கடி வீட்டுக்கு வந்து தன் பெற்றோரிடம் குறைகளை சொல்லி அழுதுள்ளார் ரிதன்யா. 'மன்னிருங்கப்பா, நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்று ரிதன்யா
சொல்கிறார் என்றால், மகள் தங்களுக்கு கஷ்டம் தந்துவிட்டதை பெற்றோர் எங்கோ ஓரிடத்தில் அதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்றே அர்த்தம்,. அப்படின்னா, மகள் உங்கள் வீட்டுக்கு வருவது உங்களுக்கு கஷ்டமா?
வீட்டுக்கு வந்தால், மறுபடியும் அட்வைஸ் செய்து, கணவன் வீட்டுக்கே அப்பா அனுப்பிவிடுவார் என்பதால்தான், மன்னிச்சுக்குங்க அப்பா, திருப்பி நான் வரமாட்டேன் என்கிறார்.
'நாய் மாதிரி என்னை நடத்தறான்' என்று கணவனை பற்றி ரிதன்யா சொல்கிறார் என்றால்,
கீழ்த்தரமாக நடத்துவது என்பது அதன் அர்த்தம் கிடையாது.. இதன் அர்த்தத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது என்பதால்தான், அந்த பெண், மறைமுகமாக அதை சொல்லியிருக்கிறார்.
பெற்றோர்களின் கணிப்பு
இன்றைய சூழலில், கணவனைவிட்டு ஒரு பெண் பிரிந்து விடுகிறார் என்றாலே, அப்பெண் மீதான பார்வையே மாறிவிடுகிறது.. கணவன் குடும்பத்தை விட்டு வெளியே வந்தால், அந்த பெண் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை எடைபோட்டு, இதுக்கு பேசாமல் கணவன்கூடயே அட்ஜெஸ்ட் செய்து வாழ்ந்து கொள் என்று பெற்றோர்கள் சொல்கிறார்கள். இதுதான் தவறான விஷயம்..
கணவனை பிரிந்து வெளியில் பல பிரச்சனை இருக்கலாம். அதுக்காக கணவனிடமே நம் பெண்ணை மீண்டும் தள்ளிவிடக்கூடாது என்ற புரிதலைத்தான் பெற்றோர்களுக்கு ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.
வியாபார திருமணம்
வியாபாரமாக திருமணம் நடந்துள்ளது.. எனவே யாராக இருந்தாலும், இப்படி பணம் கொடுத்து திருமணம் செய்யாதீங்க.. பணம் தந்தால்தான் உன் மகளுடன் வாழ்வேன் என்று ஒருத்தன் சொன்னால், அவனிடம் பெண்ணை அனுப்பாதீங்க.. ஆடம்பரமான திருமணத்தை செய்தால்தான் மரியாதை கிடைக்கும் என்பதை நம்பாதீங்க..
அன்பின் மீதான திருமணம் மட்டுமே நிலைக்குமே தவிர, பொருளின்பால் பட்ட திருமணம் என்றும் நிலைக்காது.. இப்படியெல்லாம் செய்தால்தான் மகளின் திருமணம் நடக்கும் என்றால், அப்படிப்பட்ட திருமணமே நம்முடைய பெண்களுக்கு தேவையில்லை, நம்ம வீட்டில் அந்த பெண்கள் எப்போதுமே சந்தோஷமாக இருக்கட்டும் என்ற தெளிவு பெற்றோர்களுக்கு வரவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications