Vijay: விஜய்யின் 'குஷி' ரீ-ரீலீஸ்! வைரமுத்து பாராட்டிய அந்த மொட்டு! கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: சில திரைப்படங்கள் காலத்தை வென்று நிற்கும். அதுபோன்ற ஒரு உணர்வைக் கொடுத்த திரைப்படம் தான், நடிகர் விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில், இயக்குனர் SJ சூர்யாவின் கைவண்ணத்தில், 2000ஆம் ஆண்டு வெளியான 'குஷி'. காதலர்களுக்கு இடையில் இருக்கும் சின்னச் சின்ன ஈகோ பிரச்சனைகளை, இதைவிட அழகாக யாரும் சொல்லியிருக்க முடியாது என்று சொல்லலாம். 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் இந்தப் படம், இப்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ரசிகர்களைப் போலவே, கவிப்பேரரசு வைரமுத்துவும் நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.

25 ஆண்டுகளுக்கு பின் திரையில் குஷி
தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், 25 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் குஷி திரைப்படத்தை இப்போது மறு வெளியீடு செய்திருக்கிறார். சன் டிவி மற்றும் கேடிவிகளில் பலமுறை இந்தப் படம் ஒளிபரப்பாகும் போதுகூட, ரசிகர்கள் ஏதோ புதுப் படம் பார்ப்பது போலத்தான் ரசித்து ரசித்துக் கொண்டாடி வந்தார்கள். அப்படி இருக்கையில், மீண்டும் வெள்ளித்திரையில் இந்தப் படம் புதிய தொழில்நுட்பத்துடன் ரிலீஸாகியிருக்கிறது என்றால், ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? ரீ-ரிலீஸிலும் விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் படம், விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த ஒரு படம் என்பதால் தான், இன்றும் இப்படத்துக்கான மவுசு இருந்து வருகிறது. நாளுக்கு நாள் குஷி திரைப்படத்தின் புக்கிங் அதிகரித்துக்கொண்டு வருவதாகவே தகவல்கள் வருகின்றன.
வைரமுத்துவின் வைர வரிகள்
இந்த ரீ-ரிலீஸ் கொண்டாட்டத்தில், கவிப்பேரரசு வைரமுத்துவும் இணைந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், குஷி திரைப்படம் குறித்தும், அதன் பாடல்கள் குறித்தும் மிக உயர்வாகப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.
"என்றென்றும் இளமையாக ஒரு படம் குஷி". "அபாரமான S.J சூர்யாவின் துணிச்சலான முயற்சி"
"விறுவிறு விஜய் மற்றும் துறுதுறு ஜோதிகா ஆகியோரின் அசத்தலான நடிப்பு" என்று அவர் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். மேலும், இப்படத்தைப் பார்த்தும், இப்படத்தின் பாடல்களைக் கேட்டும், தான் மீண்டும் தன்னுடைய நாற்பது வயதுக்கு நகர்கின்றேன் என்றும் பேசியிருக்கிறார். குறிப்பாக, குஷி படத்தில் இடம்பெற்ற "மொட்டு ஒன்று" பாடலைப் பற்றி, மிகவும் அழகாகத் தன் பாணியில் பேசியிருக்கிறார் வைரமுத்து.
கடைசியாக, "இதுபோன்ற படங்களும், இதுபோன்ற பாடல்களும் இனி வருமா? கண்டிப்பாக வரவேண்டும்" என்று தன் பாராட்டுகளை அவர் முடித்துக்கொண்டார்.
காலம் கடந்தும் பேசப்படும் குஷி
குஷி திரைப்படம் காலம் கடந்து கொண்டாடப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எஸ்.ஜெ. சூர்யாவின் அபாரமான திரைக்கதை அமைப்புதான் படத்தின் ஆதாரம். ஒரு காதல் கதையைக்கூட, சுவாரசியமான ஈகோ போராட்டமாக அவர் மாற்றியது, ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
தேவாவின் இசை, இந்தப் படத்தின் வெற்றிக்குப் பக்கபலமாக அமைந்தது. இன்றும், "கட்டிப்புடி கட்டிப்புடிடா", "மேக்கரீனா", "ஒரு பொண்ணு ஒண்ணு" போன்ற பாடல்கள், அந்தப் படத்தின் வெற்றியை நினைவுபடுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ரசிகர்களின் மனதை அதிகம் கவர்ந்த காட்சிகள்
ஈகோவின் உச்சம்: ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டே, அதை வெளிப்படுத்தாமல் சண்டையிட்டுக்கொள்ளும் விஜய் - ஜோதிகாவின் காட்சிகள் தான் படத்தின் ஜீவன். காதலியின் கோபத்தைத் தணிக்க, "உன் கால்ல விழுந்து கும்பிடணும்னா கும்பிடறேன்" என்று விஜய் நான்கு திசைகளிலும் கும்பிடும் அந்தக் காட்சி, இன்றும் பல இளைஞர்களால் பேசப்படும் ஒரு ரொமாண்டிக் காமெடி காட்சியும் கூட.
இவ்வாறு, கதை, இசை, நடிகர்கள் என அனைத்துமே சிறப்பாக அமைந்திருக்கும் குஷி, புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸாகியும், ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுத் திரைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 25 ஆண்டுகள் அல்ல, இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குஷி திரைப்படம், தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.












Click it and Unblock the Notifications