விஜய் பட நடிகருக்கு ரூ.72 கோடி சொத்தை எழுதி வைத்த தீவிர ரசிகை! அடுத்து நடந்தது தான் பெரிய ட்விஸ்ட்
சென்னை: பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்டார். அவருடைய ரசிகை ஒருவர் தனது சொத்துக்கள் அனைத்தையும், அதாவது சுமார் 72 கோடி ரூபாயை உயிரிழக்கும் முன்பு சஞ்சய் தத்-க்கு எழுதி வைத்திருந்தார். இதைத் தெரிந்து சஞ்சய் தத் அடுத்துச் செய்தது தான் சுவாரஸ்யமான ஒன்று. இது குறித்த தகவல்களை அவரே பகிர்ந்துள்ளார்.
நமது நாட்டில் சினிமா நட்சத்திரங்களுக்கு அளவு கடந்த புகழும் அன்பும் கிடைக்கும். தனக்குப் பிடித்த ஹீரோவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் பலர் இருக்கிறார்கள். எம்ஜிஆர் காலம் முதல் இப்போது வரை இது தொடர்கதையாகவே இருக்கிறது. அப்படியொரு சம்பவம் குறித்த தகவல் தான் இப்போது வெளியாகியுள்ளது.

சஞ்சய் தத்
பாலிவுட்டில் இருக்கும் பிரபல நடிகர்களில் ஒருவர் சஞ்சய் தத். 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சஞ்சய் தத் தமிழில் விஜயுடன் லியோ படத்தில் நடித்திருந்தார். லியோ படத்தில் விஜய்க்கு தந்தையாக சஞ்சய் தத் நடித்திருந்தார். பாலிவுட்டில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் சஞ்சய் தத்திற்கு தன் ரசிகை ஒருவர் தனது சொத்தையே எழுதி வைத்திருக்கிறார்.
கர்லி டேல்ஸ் உடனான ஒரு நிகழ்ச்சியில் சஞ்சய் தத் இதைப் பகிர்ந்து கொண்டுள்ளார்., 2018ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் குறித்து சஞ்சய் தத் மனம் திறந்து பேசினார். நிஷா பாட்டில் என்ற தீவிர ரசிகை, தான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது தனது சொத்துக்கள் அனைத்தையும் சஞ்சய் தத்துக்கு எழுதி வைத்தார்.
அடுத்து என்ன செய்தார்
62 வயதான நிஷா பாட்டில் என்பவரே இதைச் செய்துள்ளார். தான் இறந்த பிறகுத் தனது சொத்துக்களை சஞ்சய் தத்துக்கு மாற்றிவிடும்படி நிஷா பாட்டில் வங்கியிடம் கூறியிருக்கிறார். அவர் இறந்தவுடன் வங்கி தரப்பினர் சஞ்சய் தத்தை தொடர்பு கொண்டுள்ளனர். இருப்பினும், சொத்துகளை ஏற்க மறுத்துவிட்ட சஞ்சய், சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கே அதைத் திருப்பி கொடுத்து விட்டாராம். இந்த பேட்டி இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

யார் இந்த சஞ்சய் தத்
சஞ்சய் தத் 1981ஆம் ஆண்டு 'ராக்கி' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு 'நாம்', 'சாஜன்', 'கல் நாயக்', 'வாஸ்தவ்', 'முன்னா பாய் எம்.பி.பி.எஸ்.' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இந்த முன்னா பாய் எம்.பி.பி.எஸ். படம் தமிழில் வசூல் ராஜா எம்பிபிஎஸ் என்று ரிமேக் செய்யப்பட்டு, அதில் கமல் நடித்திருந்தார். சஞ்சய் தத் சமீபத்தில் 'பூட்னி' மற்றும் 'ஹவுஸ்ஃபுல் 5' ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். அவர் அடுத்து தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் 'அகண்டா 2' என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும் ஆதித்யா தர் இயக்கும் 'துரந்தர்' என்ற ஆக்ஷன் படத்திலும் சஞ்சய் நடிக்கிறார். இப்படத்தில் ரன்வீர் சிங், ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால், அக்ஷய் கண்ணா மற்றும் சாரா அர்ஜுன் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இது டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படி 65 வயதிலும் சஞ்சய் தத் பல படங்களில் படு பிஸியாகவே நடித்தி வருகிறார்.
சர்ச்சை
திரையுலகில் அவர் பல சாதனைகள் புரிந்திருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சர்ச்சைக்குரிய நபராகவே இருந்துள்ளார். 1993ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் அவர் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். இதில் 2016ஆம் ஆண்டில் தான் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications