விஜயகாந்த் பட வில்லனுக்கான தேசிய விருதை தட்டி பறித்த "அமிதாப் பச்சன்"? லாபி செய்த காங்கிரஸ்காரர்!
சென்னை: மலையாள படத்திற்கான தேசிய விருதை நடிகர் திலகன் பெற இருந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சியாளர் ஒருவர் லாபி செய்து அமிதாப்புக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னதால் அந்த விருது அவருக்கு கிடைக்கவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: விஜய்காந்த் படத்தில் செமையான வில்லன்களாக சரத்குமார், மன்சூர், லிவிங்ஸ்டன் இப்படி மோதி தூள் கிளப்பும் வில்லன்கள் தான் வந்தாங்க.

ஆனா ஒரே ஒரு வில்லன் இந்த எந்த தகுதியும் இல்லாம அசத்தலான வில்லனா வந்தவர் என்றால் அது மலையாள நடிகர் திலகன் தான். படம் 'சத்ரியன்'.
பன்னீர் செல்வமா விஜய்காந்த். அருமைநாயகம் அண்ணாச்சியாக நம்ம திலகன்.
பாலப்புரத்து கேசவன் சுரேந்திரநாத திலகன் என்கிற நடிகர் திலகன் மலையாளத்தில் ஒரு பன்முக நடிகர். அவர் எல்லா விதமான வேஷங்களையும் மலையாளத்தில் எடுத்தாண்டிருக்கிறார். நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த திலகன் சினிமாவில் 72ல் நுழைந்தார். ஆனால் 79 முதல் தான் படங்கள் வரத்தொடங்கியன.
கே.ஜி.ஜோர்ஜின் 'யவனிகா' தான் திலகனை கேரளம் முழுவதும் அறியும் நடிகராக மாற்றியது. கேரள மாநில விருதும் அவர் ஏற்றிருந்த 'வக்கச்சன்' என்கிற நாடக முதலாளி கதாபாத்திரம் பெற்றுத்தந்தது.
பின் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்படி சிறிய கதாபாத்திரங்களில் நடித்த திலகன் பாலுமகேந்திராவின் 'யாத்ரா' படத்தின் ஜெயிலர் கதாபாத்திரம் அவரை பயங்கர வில்லனுக்கு மாற்றியது.
இப்படி வில்லனாக நடிக்கும் போதே வீட்டை காலி செய்ய வரும் குண்டாவாக 'சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்' படத்தில் காமெடியும் செய்தார். நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகளில் தான் கீப்பாக வைத்திருக்கும் பெண்மணியின் மகளான சாதனாவையே கெடுத்து விடும் கொடூர வில்லனாக வந்தார். ஆனாலும் கேரள ரசிகர்கள் அவரை வெறுக்கவில்லை என்பதிலேயே அவர்களின் பார்வை புரியும்.
வருஷம்16 படத்தின் மலையாள மூலமான 'என்னென்னும் கண்ணேட்டன்ட' படத்தில் கண்ணனுக்கு எல்லா விதத்திலும் உதவும் தாத்தா கதாபாத்திரம். தாத்தா என்றால் உடனே நினைவுக்கு வரும் படம் 'மூணாம் பக்கம்'. விடுமுறையில் வந்து கடலில் குளிக்கச் சென்ற பேரன் ஜெயராம் கடலின் மூழ்கிவிட பேரனின் உடலுக்காக காத்திருக்கும் 'தம்பி' என்கிற தாத்தாவாக திலகனின் நடிப்பில் நடிப்பே தெரியாது.
தந்தையாக கிரீடம் படத்தில் மகன் மோகன்லாலோடு அவர் வைத்த பாசம் அந்த படம் முடியும் போது வெறுப்பாகி, வேதனையில் உழலும் திலகன் நடிப்புக்கு மாற்று இல்லவே இல்லை. கமலுக்கு வில்லனாக சாணக்யன் படத்தில் முதல்வராக வரும் திலகன் சத்ரியனில் வரும் அண்ணாச்சி கதாபாத்திரத்துக்கு முன்னோடி.
கௌரவம் படத்தில் காலிழந்த வில்லன் அலியார், நாடோடிக் காற்று படத்தில் திடுக் திடுக் என பயப்படும் அனந்தன் நம்பியார், தனியாவர்த்தனம் படத்தில் மம்முட்டிக்கு கால் விலங்கு இடும் அம்மாமா, சம்சாரம் அது மின்சாரம் படத்தின் மலையாள குடும்பப் புராணத்தில் அப்பா, மகன் கொலையாளியாகி ஜெயிலுக்கு போனதால் மகளை நாடக நடிகையாக்கி வெந்து தண்ணியடித்து வாழூம் 'செங்கோல்' கான்ஸ்டபிள், கிலுக்கம் படத்தின் ரேவதியின் தந்தையாக ஜஸ்டிஸ் பிள்ளை, மருமகனை விலை கொடுத்து வாங்கியதாக கருதும் ஜெயராமின் மாமனாராக ஜோர்ஜ்குட்டி C/o ஜோர்ஜ்குட்டி படத்தில், ஸ்படிகம் படத்தில் கணக்கு வாத்தியார் கடுவா சாக்கோ என எண்ணற்ற பரிமாணங்களை கொடுத்தவர்.
பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்த திலகன் பெருந்தச்சன் படத்தில் ஏற்றிருந்த ராமன் பெருந்தச்சன் பாத்திரத்தின் நடிப்புக்காக தேசிய விருது பெற்றிருக்க வேண்டியது. திலகனுக்கு கொடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த நேரத்தில் காங்கிரஸ் ஆட்சியாளர் ஒருவர் அமிதாப் நடிப்புக்கு முழுக்கு போடுவதால் அவருக்கே கொடுக்க வேண்டும் என லாபி செய்து விருது அமிதாப்புக்குப்போனது.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் 'தி லாஸ்ட் வேர்ல்ட்' என்கிற டினோசர் படத்தில் இந்தியக் கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதற்காக ஸ்பீல்பெர்க் திலகனை அணுகியதாகவும் திலகன் அப்போது மொட்டை அடித்திருந்ததால் ஸ்பீல்பெர்க் 'விதேயன்' படத்தில் நடித்த கோபக்குமாரிடம் சென்றதாகவும் சொல்கிறார். கோபக்குமாரும் விஸா பிரச்சினையால் ஹாலிவுட்டுக்கு செல்ல வில்லை.
சத்ரியன் படத்தில் திலகனின் "செல்வம்....நீ அந்த பழைய பன்னீர் செல்வமா வரணும்" என்கிற அந்த வசனம். ....தமிழர்கள் செல்வம் என அழைக்கும் போது ம் சைலண்ட்டாக வரும். மலையாளியான திலகம் செல்வம் என அழுத்தி உச்சரிக்கும் அந்த வசனம் புகழ் வாய்ந்தது. விஜய்காந்த் உடல்நலமில்லாத போது எல்லோரும் பழைய பன்னீர் செல்வமாக வாருங்கள் விஜய்காந்த் என எழுதினார்கள். அந்த டயலாக் டெலிவரி தான் நம் மனதில் அந்த வசனத்தை தைத்தது.
"சத்ரியன்...சத்ரியனுக்கு சாவே இல்லைன்னு சொல்லிட்டு என் காலடியிலே நாய் மாதிரி விழுந்து கிடக்குறியேடா...."ன்னு திலகன் நக்கலாக பேசும் அந்த டெலிவரி....இப்போதும் பலராலும் ரசிக்கப்படுகிறது. ஷுட்டிங்கின் இடையில் மது அருந்துவது, அதை எப்போதும் தன் கூடவே கொண்டு வருவது, டச்சப், சமையலுக்கு பெண்கள், சூப்பர்ஸ்டார் நடிகர்களோடு மோதல் என பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி கடைசி காலங்களில் படங்கள் இல்லாமல் இருந்தும் கூட வயதான சிங்கமாக பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டிருந்தவர் திலகன்... இரண்டு மனைவிகள், மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்.... தனது முத்திரையை திரையில் பதித்து விட்டு 2012ல் மறைந்து போனார். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications