கூலி பட கிளைமாக்ஸில் ரஜினியுடன் இருக்கும் ஷோபனா! நாகார்ஜுனாவுக்கு என்ன சம்பந்தம் தெரியுமா?
சென்னை: கூலி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினியோடு காண்பிக்கப்படும் ஷோபனா யார் தெரியுமா? அவருக்கு கிங் நாகார்ஜுனாவுக்கும் என்ன சம்மந்தம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: King நாகார்ஜுனா... உண்மையில் King தான். கோல்டன் ஸ்பூனோடு பிறந்தவர். தந்தை நாகேஸ்வரராவ் லெஜண்ட். பெருவெற்றிகளை பெற்றவர்.

மகன் நாகார்ஜுனாவோ போராட்டங்களோடு போராடி வெற்றியை பெற்றவர். அண்ணா யுனிவர்ஸிட்டியில் என்ஜினியரிங் படித்து அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த போதே ராமாநாயுடுவும், நாகேஸ்வரராவும் சம்மந்தம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள். அப்படி 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என நடிகர் வெங்கடேஷின் அக்கா லக்ஷ்மியை நாக் திருமணம் முடித்தார்.
ஏழு வருடமே நீடித்தது அந்த பந்தம். இதில் ஒரு மகன். நாகசைதன்யா. நடிகனாக தீர்மானித்த போது கண்ணில் பட்டது ஜாக்கி ஷராஃபின் 'ஹீரோ'. திரைப்படம் ஹிந்தியில் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது. எல்லா எமோஷன்களும் கலந்த படமானதால் அதை தெலுங்கில் 'விக்ரம்' என்ற பெயரில் நடித்து அறிமுகமானார்.
ஆனால் அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. மணிரத்னத்தின் 'மௌனராகம்' பார்த்து மணியின் திரைமொழி இஷ்டப்பட்டு அவர் வீட்டு வாசலில் காத்திருந்து, பின் தொடர்ந்து தனக்கு ஒரு படம் செய்ய கேட்டார். கடைசியில் மணி இசைய 'கீதாஞ்சலி' என்கிற கவிதை பிறந்தது. தமிழில் 'இதயத்தை திருடாதே'.
இதே காலகட்டத்தில் புதிய ஆள் ஒருவர் நாகார்ஜுனாவிடம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதையை சொல்ல 'சிவா' என்கிற படம் உருவானது. தமிழில் 'உதயம்'. இரண்டு ஹிட்கள். ஆனாலும் அடுத்து வந்த ஆறு படங்கள் தோல்வி. இந்த நேரத்தில் கை கொடுத்தார் ஃபாஸில். கேரளத்தில் மோகன்லால் நடித்து படு ஹிட் படமான 'வந்தனம்' படத்தை 'நிர்ணயம்' என்கிற படமாக எடுத்தார் ப்ரியதர்ஷன். இது கொஞ்சம் ஆசுவாஸ வெற்றியை கொடுத்தது. பின் சறுக்கல்.
சிட்டி ஹீரோவாக மட்டுமே வந்து கொண்டிருந்த நாகார்ஜுனாவை கிராமத்து வாலிபனாக்கி அட்டகாசம் செய்தது 'பிரசிடென்ட்காரி பெல்லம்'. பின் நாகார்ஜுனா ஹீரோ லெவலுக்கு வந்தார். 'ஆதவன்' என்கிற படத்தின் கதையை அன்றே 'Killer' என்கிற பெயரில் நடித்திருந்தது ஸ்பெஷல். ஜாக்கி சானின் 'ட்வின் ட்ராகன்ஸ்' படத்தை தழுவி எடுத்த 'ஹலோ பிரதர்' இரட்டை வேடப் படம் தென்னிந்தியா முழுக்க வெற்றிக்கொடி கட்டியது.
நாக்-சௌந்தர்யாவின் 'இன்பராகங்கள்' பாடல் அப்போதைய டிவிக்களின் ஹிட் பாடல். ஒளிபரப்புக்கு கணக்கே இல்லை. Harrison Ford நடித்த The fugitive படத்தை தழுவி எடுத்த Criminal படம் ஹிந்தி, தெலுங்கில் எடுக்கப்பட்டு பெரும் பேசப்பட்டமாகும் அப்போது. ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, மனீஷா, தபு போன்றோர் கடும் போட்டி போட்டனர் நாகார்ஜுனாவோடு நடிக்க.
தமிழில் கே.டி.குஞ்சுமோன் இருமொழிப்படம் எடுக்கத்தீர்மானித்து 'ரட்சகன்' படத்தை உருவாக்கிய போது அதில் நாகார்ஜுனா நடித்தார். அப்போது நாகார்ஜுனாவின் பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ஓடிக் கொண்டிருந்தன. இதயகீதம், மெட்ராஸ் டு கோவா, போங்கடா நீங்களும் உங்க அரசியலும், ஆட்டோக்காரன், ஈஸ்வர், தலைவர் பொண்டாட்டி, காவல் துறை, கலாட்டா மாப்பிள்ளை போன்ற படங்கள் கல்லா கட்டிய நாகார்ஜுனாவின் டப் படங்கள்..
இதற்கிடையில் மனைவி லக்ஷ்மியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு டைவர்ஸ் வரை போய் நடிகை அமலாவை காதல் திருமணம் செய்தார். மகன் அகில் பிறக்க அப்போது வந்த Baby's day out படத்தை தயாரித்தார். மகன் அகில் நடிக்க சிசின்ரி என்கிற அந்தப்படம் 'சுட்டிக் குழந்தை' எனத் தமிழிலும் வெளி வந்தது.
வீட்ல விசேஷங்க படத்தை பாக்யராஜ் ஹிந்தியில் மிஸ்டர்.பெச்சாரா என்கிற பெயரில் இயக்கிய போது அதில் அனில்கபூரோடு, நாகார்ஜுனாவும் நடித்தார். முன்பே கிரிமினல், குதா கவா படங்களிலும் நல்ல பெயர் ஹிந்தியில் கிடைத்திருந்தது. டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் நாகார்ஜுனாவிடம் ஒரு கதை சொல்ல நாகார்ஜுனாவுக்கு அந்தக்கதை பிடித்துப் போனது.
'மாஸ்' என்கிற மாஸ் ஹிட் படத்தை தயாரித்து எடுத்ததன் மூலம் ராகவா லாரன்ஸ் என்கிற பேய்ப்பட இயக்குனர் இன்று நமக்கு கிடைத்திருக்கிறார். என்ன தான் ஹீரோவானாலும் தாயும், தந்தையும் கட்டிப் பிடித்து பாராட்டியது 'அன்னமய்யா' படத்தில் நடித்ததில் தான். தன் ஸ்டைல் நடிப்பை ஒதுக்கி வைத்து அமைதியாக ஏழுமலையானின் பக்தனாக அவர் நடிப்பை ஆந்திரா அதிசயித்துப் பார்த்தது.
தொடர்ந்து ராமதாசு படமும் நல்ல பெயர் வாங்கித் தந்தன. மகன் நாக சைதன்யா ஹீரோ ஆனதும் நாகார்ஜுனா, நாகேஸ்வரராவ், நாகசைதன்யா மூவரும் நடித்து 'மனம்' நல்ல டச்சிங் படமாக இருந்தது. தாத்தா, மகன், பேரன் என மூன்று ஹீரோக்கள் நடித்து வேறு நிகழ்வு நிகழ்ந்ததாக செய்தி இல்லை.
நாகார்ஜுனாவுக்கு நல்ல ஒரு மனசு என்றும் இருந்ததுண்டு. நல்ல திறமையை கை கொடுத்து தூக்கி விடத்தவறியதேயில்லை. ராம் கோபால் வர்மா, லாரன்ஸ், பிரவீன் காந்தி, திருப்பதி சாமி என பலருக்கு கை கொடுத்துள்ளார். திருப்பதிசாமி-நாகார்ஜுனாவின் ஆஸாத் தமிழில் 'வேலாயுதம்' என வந்தது.
ரஜினியோடு முன்பே சாந்தி கிராந்தி என்கிற மும்மொழிப் படத்தில் ரவிச்சந்திரனோடு நடித்திருக்கிறார் நாகார்ஜுனா. Beauty என்னன்னா கூலி படத்தின் க்ளைமேக்ஸில் காண்பிக்கப்படும் புகைப்படத்தில் ரஜினியோடு இருக்கும் ஷோபனா தான் நாகார்ஜுனாவின் முதல் நாயகி.
பல கோடிகள் சொத்துக்கள் இருந்தும் நாகார்ஜுனாவுக்கு இரண்டு ஏக்கங்கள். ஒன்று பெரிய நாயகனாக வளரமுடியாதது. இரண்டாவது இரண்டு மகன்கள் இருந்தும், மூன்று திருமணங்கள் நடந்தும் ஒரு பேரன் அல்லது பேத்தி இல்லாதது. இப்போது கூலி மற்றும் குபேரா அவர் திரை வாழ்க்கையை மாற்றிப் போட்டிருக்கிறது. இனி ஒரு ரவுண்டு வரலாம். வாழ்த்துக்கள் அந்த இரண்டாவது ஆசையும் நிறைவேற. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications