எம்ஜிஆர், என்டிஆரின் ஆஸ்தான மேக்கப் ஆர்டிஸ்ட் யார் தெரியுமா? கடைசியாக மேக்கப் போட்டது யாருக்கு?
சென்னை: நடிகரும் முன்னாள் முதல்வர்களுமான எம்ஜிஆர், என்.டி.ராமாராவ் ஆகியோருக்கு சினிமாவில் மேக்கப் மேனாக இருந்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கும் பிரபல இயக்குநருக்கும் இருக்கும் தொடர்பையும் பார்க்கலாம்.
1970 களில் மேக்கப் ஆர்டிஸ்ட்டாக இருந்தவர் பீதாம்பரம் நாயர். இவருடைய இந்த திறமையால் இவருடைய வீட்டிற்கு தென்னிந்தியாவில் இருக்கும் பிரபல நடிகர்கள் வந்து மேக்கப் போட்டுச் சென்றனர்.

இவர் கேரளாவை சேர்ந்தவர். எம்ஜிஆரின் கழுத்தில் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட போது கழுத்தில் குண்டு பட்டுவிட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். எனினும் கழுத்தில் குண்டடிபட்ட தழும்பு மறையாமல் இருந்தது.
அடிமைப் பெண்
இந்த நிலையில் அடிமைப் பெண் படத்தில் நடிக்க எம்ஜிஆர் ஒப்பந்தமானார். அப்போது கழுத்தில் இருக்கும் தழும்பு தெரியாதபடி எம்ஜிஆரின் கழுத்தைச் சுற்றி அழகாக நெக்லஸ் ஸ்கார்ப் போட்டு அந்த தழும்பை நாயர் மறைத்திருந்தார்.
நாயர், நடிகர்களுக்கு வரைந்த மீசை, வைத்த விக், நடிகர், நடிகைகளுக்கு செய்த அலங்காரங்கள் எல்லாம் அப்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. சிவாஜிக்கும் நாயர்தான் மேக்கப் போடுவார்.
பாதாள பைரவி
அது போல் பாதாள பைரவி படத்தில் எஸ்.வி.ரங்காராவிற்கு 105 வயது கிழ மந்திரவாதி வேடத்திற்கு மேக்கப் போட்டவர் இவர்தான். ராமர், கிருஷ்ணர் வேடங்களுக்கு இவர் தயாரிக்கும் ரசாயனமற்ற மேக நீல வர்ண கலவை மிகவும் பேமஸ்.
சுவாமி வேடங்கள்
சுவாமி வேடங்கள் போடுவது என்றால் நாயர், அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு விரதம் இருந்து சிரத்தையாக செய்வாராம். அது போல் மேக்கப் போட்டு முடித்ததும் இவர் எங்கும் போகாமல் நடிகர், நடிகைகள் சொரியாமல், கலைக்காமல் இருக்க பார்த்துக் கொண்டிருப்பாராம். யாராவது இவர்களை தொட வேண்டும் என்றால் நாயரிடம் அனுமதி பெற்றுத்தான் தொட வேண்டுமாம்.
எம்ஜிஆர்
எம்ஜிஆரும், என்டிஆரும் நடிப்பை நிறுத்தியதும் இவரும் மேக்கப் போடுவதை நிறுத்திக் கொண்டு ஓய்வெடுத்தாராம். பீதாம்பர நாயர், கடைசியாக மேக்கப் போட்டது ரஜினிகாந்துக்கு! படம் முரட்டுக்காளை! இதில் கிருஷ்ண வேடமிட்ட ரஜினிக்கு மேக்கப் போட்டார் நாயர்!
தந்தை யார்
இப்படி பல்வேறு பெருமைக்குரியவர் யார் தெரியுமா? இயக்குநர் பி.வாசுவின் தந்தையாவார். இதுகுறித்து ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பி.வாசு கூறியிருப்பதாவது: எனக்கு 4 அல்லது 5 வயது இருக்கும் போது சினிமாவுக்குள் வர வேண்டும் என முடிவு செய்தேன். ஹீரோவாகவோ அல்லது இயக்குநராகவோ நினைத்தேன்.
அப்பா மேக்கப் மேன்
என் அப்பா மேக்கப் மேனாக இருந்ததால் என் வீட்டிற்கு ஏராளமான கலைஞர்கள் மேக்கப் போட வந்திருக்கிறார்கள். அவர்களுடன் எல்லாம் நான் சிறிய வயதிலேயே பேசியிருக்கிறேன். நாளாக நாளாக எனக்கு சினிமா மீது ஆசை அதிகமானது.
விளையாட்டு
நான் விளையாட்டில் சிறந்தவன். ஆனால் உண்மையை சொல்ல போனால் ஒரு பதக்கத்தையும் நான் பெறவில்லை. நான் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எழுத வேண்டும் என என் அப்பா விரும்பினார். இதனால் எனக்கு முதலில் சினிமா மீது ஆர்வம் இருந்தது. இது முடியாமல் போனால் யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்து ஐபிஎஸ் ஆகலாம் என நினைத்திருந்தேன்.
கல்லூரி தேர்வு
எனக்கு கல்லூரி தேர்வில் நான் தோல்வி அடைந்தேன். இதனால் நான் யுபிஎஸ்சி தேர்வு எழுத மாட்டேன் என்றேன். என் அப்பாவும் யுபிஎஸ்சி தேர்வு எழுத என்னை கட்டாயப்படுத்தவில்லை. இதையடுத்து எனது படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு சினிமா துறைக்குள் நுழைந்தேன்.
நிரந்தர வருமானம்
சினிமாவில் நிரந்தர வருமானம் என்ற ஒன்று இருக்காது என என் தந்தை எனக்கு அறிவுரை வழங்கினார். நானும் முயற்சிக்கிறேன் என கூறி இயக்குநர் சி.வி.ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக இணைந்து பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தை இயக்கினேன். அப்போது எனக்கு 23 வயது. நான் கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரை வைத்தும் ஒரு படம் இயக்கினேன். இப்படி கூறிய பி.வாசு ஏராளமான படங்களை இயக்கியிருக்கிறார். இவர் சின்னத்தம்பி, சந்திரமுகி உள்ளிட்ட படங்களை இயக்கினார்.












Click it and Unblock the Notifications